மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் பிகார் ஆகிய மாநிலங்களின் மாவட்ட நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன.
மத்தியப் பிரதேசத்தின் ரெவா, சத்தீஸ்கரின் ராஜ்நந்த்கான், துர்க், பிலாஸ்பூர் மற்றும் பிகாரின் பாட்னா, அராரியா, கிஷன்கஞ்ச் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று (ஜன. 8) மின்னஞ்சல் மூலம் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, நீதிமன்றங்களின் வளாகங்களில் இருந்து பணியாளர்கள், நீதிபதிகள், அதிகாரிகள் மற்றும் மக்களும் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பு நெறிமுறைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதையடுத்து, தகவலறிந்து நீதிமன்றங்களுக்கு விரைந்த வெடிகுண்டு நிபுணர்கள், பாதுகாப்புப் படை அதிகாரிகள் மோப்ப நாய்களின் உதவியுடன் சோதனைகளை மேற்கொண்டனர்.
இந்தச் சோதனைகளின் முடிவில் சந்தேகப்படும்படியான எந்தவொரு பொருளும் கிடைக்காத நிலையில் இந்த மிரட்டல்கள் அனைத்தும் போலியானவை என உறுதி செய்யப்பட்டன. இதையடுத்து, பல மணிநேரங்களாக முடங்கிய நீதிமன்றப் பணிகள் அனைத்தும் மீண்டும் துவங்கப்பட்டன.
இந்த நிலையில், பிகார் நீதிமன்றங்களுக்கு விடுக்கப்பட்ட மிரட்டல் மின்னஞ்சல்களில் சில தமிழ் வார்த்தைகள் இடம்பெற்றிருந்ததாக, காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒரே நாளில் ஏராளமான மாநிலங்களின் நீதிமன்றங்களுக்கு மின்னஞ்சல்கள் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், மிரட்டல் விடுத்த மர்ம நபர்களைப் பிடிக்கும் நடவடிக்கையில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.