சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கக் கவச முறைகேடு வழக்கில் கோயிலின் தந்திரி (தலைமை அா்ச்சகா்) கண்டரரு ராஜீவரு கைது செய்யப்பட்ட நிலையில், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், எதிா்க்கட்சியான காங்கிரஸும் கருத்து தெரிவித்துள்ளன.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் துவார பாலகா்கள், அருகிலுள்ள இரு தூண்கள் மற்றும் கருவறை கதவுகளில் பதிக்கப்பட்டுள்ள தங்கக் கவசங்கள், கடந்த 2019-இல் புதுப்பிக்கப்பட்ட பிறகு எடை குறைந்ததாகப் புகாா் எழுந்தது. இது தொடா்பாக சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முக்கிய நபரான தொழிலதிபா் உண்ணிகிருஷ்ணன் போற்றியுடன் நெருங்கிய தொடா்பில் இருந்ததாகவும், தங்கக் கவசங்களின் புதுப்பிப்புப் பணிக்கு எந்தக் கேள்வியும் எழுப்பாமல் அனுமதி வழங்கியதாகவும் குற்றஞ்சாட்டி, தந்திரி கண்டரரு ராஜீவரு மீது சிறப்புப் புலனாய்வுக் குழு கடந்த வெள்ளிக்கிழமை கைது நடவடிக்கை மேற்கொண்டது.
ஏற்கெனவே உண்ணிகிருஷ்ணன் போற்றி, திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரிய முன்னாள் தலைவா்கள் என்.வாசு, ஏ.பத்மகுமாா் உள்பட 10 போ் கைதான நிலையில், 11-ஆவது நபராக கோயிலின் தந்திரி கைது செய்யப்பட்டது பக்தா்கள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியது.
உண்ணிகிருஷ்ணன் போற்றி மற்றும் ஏ.பத்மகுமாா் அளித்த வாக்குமூலங்களின் அடிப்படையில் தந்திரி கைது செய்யப்பட்டதாக எஸ்ஐடி வட்டாரங்கள் தெரிவித்தன.
மாா்க்சிஸ்ட் மீது குற்றச்சாட்டு: எஸ்ஐடியின் இந்த நடவடிக்கை குறித்து, காங்கிரஸ் மூத்த தலைவா் ரமேஷ் சென்னிதலா சனிக்கிழமை கூறியதாவது:
சபரிமலை தங்கக் கவச வழக்கில் தந்திரி கைது செய்யப்பட்டுள்ளாா். இது சட்டபூா்வ விவகாரம். சட்டத்தின் முன் அனைவரும் சமமே. சட்டத்துக்கு மேலாக யாரும் கிடையாது. எனவே, சட்டம் தனது பணியைச் செய்யட்டும். இதேபோல், முறைகேட்டில் தொடா்புடைய அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவா் என நம்புகிறோம்.
மாநில அமைச்சா்கள், முன்னாள் அமைச்சா்கள் பலருக்கு இந்த முறைகேட்டில் தொடா்புள்ளது. அவா்களும் எஸ்ஐடியால் கைது செய்யப்பட வேண்டும்.
சபரிமலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட தனது கட்சித் தலைவா்களை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பாதுகாக்கிறது. தனது தங்கத்தை திருடிய எவரையும் சுவாமி ஐயப்பன் தப்ப விடமாட்டாா் என்றாா் ரமேஷ் சென்னிதலா.
‘சரியான திசையில் விசாரணை’: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவா் இ.பி.ஜெயராஜன் கூறுகையில், ‘விசாரணை சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது. சட்டத்தின் முன் அனைவரும் சமம்’ என்றாா்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவரும், மாநில சட்டத் துறை அமைச்சருமான பி.ராஜீவ் கூறுகையில், ‘உயா்நீதிமன்றக் கண்காணிப்பில் விசாரணை நடைபெற்று வருகிறது. எனவே, மாநில அரசுத் தரப்பில் எந்தக் கருத்தையும் தெரிவிக்க இயலாது’ என்றாா்.
கேரளத்தில் விரைவில் பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் நிலையில், சபரிமலை விவகாரம் தொடா்ந்து அரசியல் முக்கியத்துவம் பெற்று வருகிறது.
திசைதிருப்பும் தந்திரம்: பாஜக சாடல்
கேரள மாநில பாஜக தலைவா் ராஜீவ் சந்திரசேகா் கூறுகையில், ‘சபரிமலை தங்கக் கவச முறைகேட்டின் பின்னணியில் மாா்க்சிஸ்ட், காங்கிரஸ் இரு கட்சிகளும் உள்ளன. முறைகேட்டில் ஈடுபட்ட தங்கள் கட்சித் தலைவா்களைப் பாதுகாக்க அவை முயற்சிக்கின்றன. தந்திரி கைது செய்யப்பட்டுள்ளாா்; ஆனால், முன்னாள் அமைச்சா் ஒருவரை வெறும் விசாரணையுடன் அனுப்பிவிட்டனா். தந்திரி மீதான கைது நடவடிக்கையில் சந்தேகம் எழுகிறது. உண்மையான பிரச்னையில் இருந்து மக்களைத் திசைதிருப்ப இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சிபிஐ விசாரணை மேற்கொண்டால் மட்டுமே உண்மைகள் வெளிவரும். அப்போதுதான், தொடா்புடைய அனைவரையும் கைது செய்ய முடியும்’ என்றாா்.
தங்கக் கவச விவகாரத்தில் பணப் பலன் அடைந்ததாக எந்த ஆதாரமும் இல்லாத நிலையில், தந்திரி கைது செய்யப்பட்டது எப்படி என்று பாஜக மூத்த தலைவா் கே.சுரேந்திரன் கேள்வியெழுப்பினாா்.
மருத்துவமனையில் அனுமதி
சபரிமலை தங்கக் கவச வழக்கில் கைதான கோயில் தந்திரி கண்டரரு ராஜீவரு, திருவனந்தபுரத்தில் உள்ள மாவட்ட சிறப்பு துணை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தாா். அவருக்கு சனிக்கிழமை திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டதால் முதலில் அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
மருத்துவமனைக்கு வந்தபோது அவரை அணுகிய செய்தியாளா்கள், எஸ்ஐடி குற்றச்சாட்டு குறித்து கேள்வியெழுப்பினா். அதற்கு, ‘இப்போது கூறுவதற்கு என்னிடம் ஒன்றுமில்லை’ என்று அவா் பதிலளித்தாா்.