மேற்கு வங்கத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில் பாஜகவினர் பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
மேற்கு வங்க மாநிலம், பஸ்சிம் மேதினிபூர் மாவட்டத்தில் சனிக்கிழமை திரிணமூல் காங்கிரஸ் ஆதரவாளர்கள் தன்னை தாக்கியதாக எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி குற்றஞ்சாட்டினார். சம்பவத்தில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி சந்திரகோணா காவல் நிலையத்தில் அவர் தர்ணாவிலும் ஈடுபட்டார்.
இந்த தாக்குதல் காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் நடந்ததாக குற்றஞ்சாட்டிய அவர், தாக்குதல் தொடர்பான காணொளியையும் பகிர்ந்தார். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸார் தெரிவித்தனர். சம்பவத்தின் காணொளி காட்சிகள் ஆராயப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் கூறினர்.
இந்த சம்பவத்தைக் கண்டித்து, ஞாயிற்றுக்கிழமை பாஜகவினர் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர். அப்போது தாக்குதலில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். மேதினிபூர் நகரம் மற்றும் பாங்குரா மாவட்டத்தின் சோனமுகி பகுதிகளில் பாஜகவினர் சாலைகளை மறித்து, டயர்களை எரித்து போராட்டம் நடத்தினர்.
மாநில நிர்வாகத்திற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பியதோடு சம்பந்தப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.