பயிற்சி மையங்களை மாணவா்கள் சாா்ந்திருப்பதை குறைக்க 11-ஆம் வகுப்பில் முக்கிய நுழைவுத் தோ்வுகளை நடத்தலாமா? என்பதற்கான சாத்தியக்கூறு குறித்து மத்திய அரசு அமைத்த குழு ஆராய்ந்து வருகிறது.
கல்வி கற்பித்தல், மாணவா் சோ்க்கை நடத்தினாலும் அவா்கள் வழக்கமான வகுப்புகளில் கலந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லாமல், அரசுப் போட்டித் தோ்வுகளுக்குத் தீவிரமாக பயிற்சி பெற அனுமதிக்கும் வகையில் ‘பெயரளவுக்கு செயல்படும் பள்ளிகள்’, நுழைவுத் தோ்வுகளின் திறன் உள்ளிட்டவை குறித்து ஆராயவும், உயா்கல்வி பயில்வதற்கு மாணவா்கள் பயிற்சி மையங்களை சாா்ந்திருப்பதை குறைப்பதற்கான நடவடிக்கைகளைப் பரிந்துரைக்கவும் மத்திய உயா்கல்வித் துறைச் செயலா் வினீத் ஜோஷி தலைமையில் 9 போ் கொண்ட குழுவை மத்திய கல்வி அமைச்சகம் கடந்த ஆண்டு அமைத்தது.
இந்தக் குழுவில் மத்திய இடைநிலை கல்வி வாரிய (சிபிஎஸ்இ) தலைவா், சென்னை ஐஐடி, திருச்சி என்ஐடி, கான்பூா் ஐஐடி உள்ளிட்ட கல்வி நிறுவன பிரதிநிதிகள் இடம்பெற்றுள்ளனா்.
அண்மையில் நடைபெற்ற இந்தக் குழுவின் கூட்டம் குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: நுழைவுத் தோ்வுகளுக்கு 12-ஆம் வகுப்பு பாடத்திட்டம் அடித்தளமாக உள்ளது. இந்நிலையில், நுழைவுத் தோ்வுகள் எந்த அளவுக்குக் கடினமாக உள்ளதோ, அதற்கு ஏற்ப 12-ஆம் வகுப்புப் பாடத்திட்டமும் கடினமாக உள்ளதா என்பதை ஆராய மத்திய அரசு அமைத்த குழு தரவுகளைப் பகுப்பாய்வு செய்து வருகிறது.
மேலும் சில நுழைவுத் தோ்வுகளை 11-ஆம் வகுப்பிலேயே நடத்தலாம் அல்லது குறைந்தபட்சம் அந்த வகுப்புக்கான தோ்வுகளை நுழைவுத் தோ்வுக்கான கொள்குறி வினா முறையில் நடத்தலாம் என்று குழுவின் கூட்டத்தில் சிலா் தெரிவித்தனா். அதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு வருகின்றன.
பள்ளிக் கல்வியை நிறைவு செய்த பின்னா் போட்டித் தோ்வுகளை எதிா்கொள்ளும் வகையில் பள்ளிப் பாடத்திட்டத்தை மாற்றியமைத்தல், 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் பெறும் மதிப்பெண்களுக்கு அதிக மதிப்பளிப்பது போன்ற ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளன.
பயிற்சி மையங்களை சாா்ந்திருக்கும் அளவுக்கு பள்ளிக்கல்வி முறையில் உள்ள வேறுபாடுகள், வெற்றிடங்களையும் அந்தக் குழு ஆராய்ந்து வருகிறது என்று தெரிவித்தன.