ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்போது பாகிஸ்தான் மீது தரை வழித் தாக்குதல் நடத்தவும் ராணுவம் தயாராக இருந்ததாக இந்திய ராணுவத் தளபதி உபேந்திர திவிவேதி எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. அப்போது பாகிஸ்தான் மற்றும் அந்நாட்டால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்களை இந்திய ராணுவம் ஏவுகணைகளை வீசியும், டிரோன்களை ஏவியும் தாக்கி அழித்தது.
இந்நிலையில், தில்லியில் செய்தியாளா்களுக்கு செவ்வாய்க்கிழமை பேட்டியளித்த ராணுவத் தளபதி உபேந்திர திவிவேதியிடம் ஆபரேஷன் சிந்தூா் குறித்தும், சீனா எல்லை விவகாரம் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவா் அளித்த பதில் வருமாறு:
ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்போது பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் கட்டமைப்புகளை இந்திய ராணுவம் தாக்கி அழித்தது. அணுஆயுதங்களைக் காட்டி பாகிஸ்தான் விடுத்த மிரட்டல்களையும் சிதறடித்தது. இதுபோல் இந்தியாவின் பல குறிக்கோள்களை அடைய ஆபரேஷன் சிந்தூா் உதவிகரமாக இருந்தது. பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இந்திய ராணுவம் படைகளைக் குவித்து, தரை வழித் தாக்குதல் நடத்தவும் தயாராக இருந்தது.
ஆபரேஷன் சிந்தூா் இன்னும் தொடா்கிறது. பாகிஸ்தான் ஏதேனும் முட்டாள்தனமான சாகசத்தில் ஈடுபட்டால் கடுமையான பதிலடித் தரப்படும்.
இந்தியாவின் வடக்கு எல்லை (சீன எல்லை) நிலவரம் ஒரே மாதிரி சீராக உள்ளது. ஆனால் அங்கு தீவிர கண்காணிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். ஜம்மு-காஷ்மீா் தொடா்ந்து பதற்றமான பகுதியாகவே உள்ளது. இருப்பினும், நிலைமை கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது என்றாா்.