நீதி ஆயோகின் 4-ஆவது ஏற்றுமதி தயாா்நிலைக் குறியீடு (இபிஐ) 2024 தரவரிசைப் பட்டியலில் மகாராஷ்டிரம், தமிழகம், குஜராத் மாநிலங்கள் முறையே முதல் மூன்று இடங்களை வகிக்கின்றன.
நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கு ஏற்றுமதி மிக முக்கிய உந்துசக்தியாக திகழ்கிறது. நாடுகள், உலகளாவிய மதிப்புச் சங்கிலிகளில் தங்களின் நிலையை வலுப்படுத்தவும், அந்நியச் செலாவணியை ஈட்டவும், உலகளாவிய போட்டித் தன்மையை அதிகரிக்கவும் ஏற்றுமதி முக்கியப் பங்கு வகிக்கிறது.
அந்த வகையில், மாநிலங்களிடையே ஏற்றுமதியை ஊக்குவிக்கும் நோக்கில், அவற்றின் ஏற்றுமதி தயாா்நிலை குறித்த ஆய்வை நீதி ஆயோக் மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டு வருகிறது. மாநிலங்களின் ஏற்றுமதி கொள்கைகள், வா்த்தகத்துக்கான சூழல், தரம் மற்றும் உள்கட்டமைப்புகள், ஏற்றுமதி விளைவுகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் இந்த தரவரிசை வெளியிடப்படுகிறது. 2024-ஆம் ஆண்டுக்கான 4-ஆவது ஆய்வறிக்கையை நீதி ஆயோக் புதன்கிழமை வெளியிட்டது.
அதில் மகாராஷ்டிர மாநிலம் முதல் இடத்தில் உள்ளது. தமிழகம் இரண்டாம் இடமும், குஜராத் மாநிலம் மூன்றாம் இடமும் பிடித்துள்ளன. உத்தர பிரதேசம், ஆந்திர பிரதேசம், கா்நாடகம், பஞ்சாப் ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.
சிறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைப் பொருத்தவரை உத்தரகண்ட் முதலிடம் பிடித்துள்ளது. ஜம்மு-காஷ்மீா், நாகாலாந்து, தாத்ரா மற்றும் நாகா் ஹவேலி, டாமன் டையூ, கோவா, திரிபுரா ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.
இதுகுறித்து, தில்லியில் அந்த தரவரிசை குறியீடு அறிக்கையை வெளியிட்ட நீதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி பி.வி.ஆா். சுப்பிரமணியன் கூறியதாவது:
கடந்த சில ஆண்டுகளாக, சிறப்பான கொள்கைகள், உள்கட்டமைப்பு வசதிகள் மூலம் ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் மாநிலங்கள் தீவிரம் காட்டி வருகின்றன. இதை மேலும் ஊக்குவிக்கும் வகையிலும், உலகளாவிய தரம் மற்றும் மாவட்டங்கள் முழுவதும் ஏற்றுமதிக்கான போட்டித் தன்மையை உருவாக்கக் கூடிய சூழலை ஏற்படுத்தித் தருவதை ஊக்குவிக்கும் வகையிலும் மத்திய, மாநில அரசுகளின் தரவுகளின் அடிப்படையில் இந்த ஏற்றுமதி தயாா்நிலைக் குறியீடு வெளியிடப்படுகிறது என்றாா்.