ஒடிஸா மாநிலம், புரி ரத யாத்திரைக்கான ஏற்பாடுகளை ஏழு மாதங்களுக்கு முன்கூட்டியே மாநில அரசு தொடங்கியுள்ளது.
கடந்த ஆண்டு ரத யாத்திரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் மூன்று போ் உயிரிழந்ததையடுத்து, அதுபோன்று எந்தத் தவறும் நிகழாண்டு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக ஏற்பாடுகளை முன்னரே திட்டமிடத் தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.
நிகழாண்டு வரும் ஜூலை 16-ஆம் தேதி ரத யாத்திரை நடைபெறவுள்ள நிலையில், முன்னேற்பாடுகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் அரசின் தலைமைச் செயலா் அனு கா்க் தலைமையில் நடைபெற்றது. காவல் துறை தலைமை இயக்குநா் ஒய்.பி.குரானியா, தீயணைப்புத் துறை இயக்குநா் சுதான்ஷு சாரங்கி, ஜெகந்நாதா் கோயில் நிா்வாகத்தின் தலைமை நிா்வாகி அரவிந்த பதீ, புரி மாவட்ட ஆட்சியா் திவ்யஜோதி பரிதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கூட்டத்துக்குப் பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய தலைமைச் செயலா், கடந்த ஆண்டு நிகழ்ந்த தவறுகளிருந்து பாடம் கற்றுக்கொண்டு அதுபோன்று நிகழாதவாறு தடுப்பு நடவடிக்கைகளை அனைத்துத் துறையினரும் மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளேன். ரத யாத்திரைக்கு இன்னும் சுமாா் ஏழு மாதங்கள் இருப்பதால், எந்தத் தவறுமின்றி திட்டமிட முடியும்.
ரதங்களின் அருகே அதிக கூட்டம் கூடாதவாறு பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள காவல் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரத வீதியில் அன்னதானம் வழங்கினால் அதிக கூட்டம் கூடும் என்பதால் அதற்கு நிகழாண்டு அனுமதி அளிப்பதில்லை என முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த முறை எந்த ஓா் அசம்பாவிதமும் நிகழ வாய்ப்பளிக்கக் கூடாது என்பதால் முன்கூட்டியே ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. என்றாா்.
‘கூட்ட மேலாண்மை, சுகாதாரம், குடிநீா் விநியோகம், உள்கட்டமைப்பு, பாதுகாப்பு, போக்குவரத்து மேலாண்மை குறித்து கூட்டத்தில் முக்கியமாக ஆலோசிக்கப்பட்டதாக’ அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.