மகாராஷ்டிரத்தில் தேர்தல் நடைபெற்ற 29 மாநகராட்சிகளில் காங்கிரஸ் கட்சியிலிருந்து 5 மேயர்கள் பதவியேற்பார்கள் என்று மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் ஹர்ஷ்வர்தன் சப்கல் தெரிவித்தார்.
மகாராஷ்டிரத்தில் உள்ள 29 மாநகராட்சிகளுக்கும் தோ்தல் வியாழக்கிழமை (ஜன. 15) நடைபெற்றது. இன்று (ஜன. 16) வாக்கு எண்ணிக்கை நடைபெற்று உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், ஆளும் பாஜக கூட்டணி பெரும்பான்மை இடங்களில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. இதனால், பல இடங்களில் அதிலும் குறிப்பாக, இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பை மாநகரின் ‘ப்ரிஹான்மும்பை முனிசிபல் கார்ப்பரேசனில்’ வெற்றி வாய்ப்பு பாஜகவுக்கே பிரகாசமாக இருப்பதை வாக்கு எண்ணிக்கை நிலவரம் பிரதிபலிக்கிறது.
மகாராஷ்டிரத்தில் தேர்தல் நடைபெற்ற 29 மாநகராட்சிகளில் லத்தூர், சந்திரபூர், பிவாண்டி (தாணே மாவட்டம்), பர்பானி மற்றும் கோலாபூர் ஆகிய 5 முனிசிபல் கார்ப்பரேசன்களில் காங்கிரஸ் உறுப்பினர்கள் தலைமைப் பதவியேற்பார்கள் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து, மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் ஹர்ஷ்வர்தன் சப்கல் பேசியதாவது: “மகாராஷ்டிரத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக இன்று காங்கிரஸ் நிற்கிறது. 5 நகரங்களில் எங்கள் கட்சிக்கு மேயர்கள் இருப்பார்கள். சுமார் 350 இடங்களில் உறுப்பினர்கள் இருப்பார்கள். 10 முனிசிபல் கார்ப்பரேசன்களில் ஆட்சி அதிகாரத்தில் எங்கள் கட்சியும் ஒரு பகுதியாக இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். இந்த வெற்றி எங்கள் கட்சித் தொண்டர்களுடையது. அவர்களுக்கு வாழ்த்துகள்” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.