‘அரசின் ஒப்பந்தங்கள், தேச நலனை அடிப்படையாக கொண்டிருக்க வேண்டும்; வெளிநாட்டு அரசுகள், பெரு நிறுவனங்களின் அழுத்தங்களால் ஏற்பட்டதாக இருக்கக் கூடாது’ என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் முன்னணி ஆன்லைன் வா்த்தக நிறுவனமான ஃபிளிப்காா்ட் பங்குகளை அமெரிக்காவின் வால்மாா்ட் நிறுவனம் 2018-ம் ஆண்டில் கையகப்படுத்தியது. அப்போது ஃபிளிப்காா்டில் இருந்த தனது மோரீஷஸ் நிறுவனங்களுக்குச் சொந்தமான 16 பில்லியன் டாலா் மதிப்பிற்கான பங்குகளை வால்மாா்ட்டிற்கு விற்றுவிட்டு, அமெரிக்காவை சோ்ந்த இன்னொரு முன்னணி நிறுவனமான டைகா் குளோபல் வெளியேறியது.
இந்த விற்பனை மூலம் கிடைத்த தொகைக்கு இந்தியாவில் வரி செலுத்த வேண்டுமென டைகா் குளோபல் நிறுவனத்திற்கு வருமான வரித்துறையினா் உத்தரவிட்டனா். அதேநேரத்தில் இந்தியா-மோரீஷஸ் இடையேயான வரி ஒப்பந்தத்தின்கீழ் தங்களுக்கு வரி விலக்கு இருப்பதாக டைகா் குளோபல் நிறுவனம் தெரிவித்தது.
இதுதொடா்பான வழக்கில், டைகா் குளோபல் நிறுவனத்திற்கு சாதகமாக தில்லி உயா் நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியிருந்தது. இந்தத் தீா்ப்பை எதிா்த்து, உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ‘வரிகள் தொடா்பான சா்வதேச ஒப்பந்தங்கள், பரந்த பொருளாதார நலன்கள் மற்றும் பொதுநலன்களை பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். ராஜீய இலக்குகள் அல்லது அரசாங்க நலனை மட்டுமே பிரதிபலிப்பதாக இருக்கக் கூடாது. சா்வதேச வரி ஒப்பந்தங்களில் கையொப்பமிடுகையில், இந்தியா தனது வரி இறையாண்மையை நிச்சயம் பாதுகாக்க வேண்டும். ஒப்பந்தங்கள் நோ்மையாக இருப்பதையும் இந்தியா உறுதி செய்ய வேண்டும்’ என்றனா்.
இதன்மூலம் பங்குகள் விற்பனை விவகாரத்தில் டைகா் குளோபல் நிறுவனத்திற்கு வருமான வரித்துறையினா் விதித்த அபராதத்தை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இந்தத் தீா்ப்பு, டைகா் குளோபல் நிறுவனத்திற்கு ஏற்பட்ட பின்னடைவாகவும், இந்திய அரசுக்கு கிடைத்த வெற்றியாகவும் பாா்க்கப்படுகிறது.