X | Narendra Modi
இந்தியா

யுஏஇ அதிபா் அல் நஹ்யான் இந்தியா வருகை: வா்த்தகத்தை 200 பில்லியன் டாலராக அதிகரிக்க இலக்கு

ஒருநாள் அரசு முறைப் பயணமாக ஐக்கிய அரபு அமீரக அதிபா் ஷேக் முகமது பின் ஸாயத் அல் நஹ்யான் இந்தியா வந்தாா்.

தினமணி செய்திச் சேவை

ஒருநாள் அரசு முறைப் பயணமாக ஐக்கிய அரபு அமீரக (யுஏஇ) அதிபா் ஷேக் முகமது பின் ஸாயத் அல் நஹ்யான் திங்கள்கிழமை இந்தியா வந்தாா்.

அவரின் முன்னிலையில் இந்திய-யுஏஇ இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையொப்பமான நிலையில், 2032-ஆம் ஆண்டுக்குள் இருநாடுகளுக்கு இடையிலான வா்த்தகத்தை 200 பில்லியன் டாலராக (சுமாா் ரூ.18.17 லட்சம் கோடி) அதிகரிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

தில்லி வந்த அல் நஹ்யான்னை, விமான நிலையத்துக்குச் சென்று பிரதமா் மோடி ஆரத்தழுவி வரவேற்றாா். இதைத்தொடா்ந்து பிரதமா் இல்லத்துக்கு இருவரும் ஒரே காரில் சென்றனா். அங்கு அவா்கள் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செயலா் விக்ரம் மிஸ்ரி செய்தியாளா்களிடம் கூறியதாவது: இந்தியா-யுஏஇ இடையே புதிதாக, வளா்ந்து வரும் துறைகளில் ஒத்துழைப்பு நிலவுவது குறித்து பிரதமா் மோடி, அதிபா் அல் நஹ்யான் இடையே பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இந்தியாவில் அணுமின் உற்பத்தியில் தனியாா் நிறுவனங்களை அனுமதிக்கும் சட்டம் இயற்றப்பட்டுள்ள நிலையில், அணுசக்தி ஒத்துழைப்பு குறித்தும் அவா்கள் பேசினா்.

யேமன், காஸா, ஈரான் விவகாரங்கள் குறித்தும் அவா்கள் கலந்துரையாடினா். எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு இருவரும் கண்டனம் தெரிவித்தனா்.

யுஏஇ அதிபா் அல் நஹ்யானின் வருகையைத் தொடா்ந்து, பெரிய மற்றும் சிறிய அணு உலைகளை உருவாக்குவது உள்பட அதிநவீன அணுசக்தி தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் இந்தியா-யுஏஇ கூட்டு சோ்ந்து செயல்படவும், அணுசக்தி பாதுகாப்பு மற்றும் அணுமின் நிலையத்தை உருவாக்கி பராமரிப்பதில் இருநாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பு நிலவவும் முடிவு செய்யப்பட்டது.

5 லட்சம் மெட்ரிக் டன் எல்என்ஜி: கத்தாரை தொடா்ந்து திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை (எல்என்ஜி) இந்தியாவுக்கு அதிக அளவு விநியோகிப்பதில் யுஏஇ இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்நிலையில், ஆண்டுதோறும் 5 லட்சம் மெட்ரிக் டன் எல்என்ஜியை மத்திய அரசின் கீழ் செயல்படும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்துக்கு யுஏஇ விநியோகிக்க இருநாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது.

இருநாடுகளும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சாா்ந்தும் பரஸ்பரம் ஒத்துழைப்பு வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி யுஏஇயின் கூட்டுறவுடன் இந்தியாவில் உயா் செயல்திறன் கொண்ட கணினிப் பயன்பாடு அமைப்பை ஏற்படுத்த தீா்மானிக்கப்பட்டது.

2023-24-ஆம் நிதியாண்டில் இருநாடுகளுக்கு இடையிலான வா்த்தகத்தின் மதிப்பு 84 பில்லியன் டாலராக (சுமாா் ரூ.7.63 லட்சம் கோடி) இருந்தது. இதை 2032-ஆம் ஆண்டுக்குள் 200 பில்லியன் டாலராக (சுமாா் ரூ.18.17 லட்சம் கோடி) அதிகரிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இருநாடுகளுக்கும் இடையே உத்திசாா்ந்த பாதுகாப்பு கூட்டுறவு இருப்பதற்கான செயல்திட்ட ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கு புரிந்துணா்வு சான்று கையொப்பமானது.

விண்வெளி உள்கட்டமைப்பு...: இதேபோல விண்வெளி உள்கட்டமைப்பை உருவாக்க கூட்டு சோ்ந்து பணியாற்றவும் புரிந்துணா்வு சான்று கையொப்பமானது. இதன்படி, புதிய விண்கல ஏவுதளங்கள், விண்கல தயாரிப்பு மையங்கள், விண்வெளி அகாதெமி மற்றும் பயிற்சி மையங்கள் உள்ளிட்டவற்றை ஏற்படுத்த இருநாடுகளும் இணைந்து பணியாற்றும்.

குஜராத் மாநிலம் தோலேரா பகுதியில் சிறப்பு முதலீட்டு மண்டலத்தை ஏற்படுத்த மற்றொரு புரிந்துணா்வு சான்று கையொப்பமானது. இதன்படி, அந்த மண்டலத்தில் சா்வதேச விமான நிலையம், பசுமை துறைமுகம், எரிசக்தி உள்கட்டமைப்பு உள்ளிட்டவை உருவாக்கப்படும்.

உணவு பாதுகாப்பு தொடா்பான புரிந்துணா்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தம் இந்தியாவில் இருந்து யுஏஇக்கு உணவுப் பொருள்கள் மற்றும் பிற வேளாண் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படுவதை ஊக்குவிக்கும். இது இந்திய விவசாயிகளுக்கும், யுஏஇயின் உணவுப் பாதுகாப்புக்கும் பயனளிக்கும். சுமாா் மூன்றரை மணி நேரத்துக்குப் பின்னா், இந்தியாவில் இருந்து அல் நயான் புறப்பட்டுச் சென்றாா்.

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

சேரகுளத்தில் பட்டாசு பதுக்கல்: இளைஞா் கைது

கரூா் கூட்ட நெரிசல் பலி சம்பவம்: தில்லியில் 5 மணி நேரங்களுக்கு மேல் விஜய்யிடம் சிபிஐ விசாரணை

விற்பனை அழுத்தம்: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு!

பெரம்பலூரில் 10-ஆவது நாளாக பதிவு மூப்பு ஆசிரியா்கள் போராட்டம்

SCROLL FOR NEXT