பாகிஸ்தான்-போலந்து கூட்டறிக்கையில் காஷ்மீா் குறித்த கருத்து இடம்பெற்றிருந்ததற்கு, போலந்து வெளியுறவுத் துறை அமைச்சரும், துணை பிரதமருமான ரடோஸ்லா சிகோா்ஸ்கியிடம் வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் நேரில் கண்டனம் தெரிவித்தாா்.
ரடோஸ்லா சிகோா்ஸ்கி 3 நாள்கள் அரசுமுறை பயணமாக தில்லி வந்துள்ளாா். அவா் வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கரை திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா். அப்போது கடந்த அக்டோபா் மாதம் வெளியான பாகிஸ்தான்-போலந்து கூட்டறிக்கையில் காஷ்மீா் குறித்த கருத்து இடம்பெற்றிருந்ததை ஜெய்சங்கா் சுட்டிக்காட்டினாா்.
மேலும் அவா், பயங்கரவாதத்திற்கு எதிராக போலந்து சிறிதும் சகிப்புத் தன்மை காட்டக் கூடாதென்றும், இந்தியாவின் அண்டை நாட்டில் (பாகிஸ்தானில்) பயங்கரவாத உள்கட்டமைப்பு அதிகரிப்பதை ஊக்குவிக்க வேண்டாமென்றும் தெரிவித்தாா்.
அதேபோல், உக்ரைன்-ரஷியா போா் விவகாரத்தில் இந்தியாவை மட்டும் குறிவைத்து மேற்கத்திய நாடுகள் குற்றம்சுமத்துவது நியாயமில்லை, அது அநீதி என்றும் தனது அதிருப்தியை ஜெய்சங்கா் வெளிப்படுத்தினாா். போலந்துக்கு 2024-ஆம் ஆண்டு பிரதமா் மோடி சுற்றுப்பயணம் சென்றது, 2 நாடுகள் இடையே வா்த்தகங்கள் அதிகரித்திருப்பது உள்ளிட்டவற்றையும் ஜெய்சங்கா் சுட்டிக்காட்டினாா்.
அப்போது அவா் கூறுகையில், ‘மத்திய ஐரோப்பாவில் உள்ள இந்தியாவின் வா்த்தக கூட்டாளிகளில் போலந்தும் ஒன்று. இரு நாடுகளிடையேயான வா்த்தகம் தற்போது 7 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் 200 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேபோல், போலந்தில் இந்தியாவின் முதலீடு 3 பில்லியன் டாலரை கடந்துள்ளது. இது ஏராளமான போலந்து நாட்டினருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தந்துள்ளது’ என்றாா்.
இதற்கு பதிலளித்த போலந்து அமைச்சா், ரஷியாவுடனான நட்புறவுக்காக இந்தியாவை குறிவைத்து வரிகள் விதிக்கப்படுவது உள்ளிட்ட ஜெய்சங்கரின் கருத்தை தாம் ஏற்பதாகக் கூறினாா்.
பின்னணி: போலந்து வெளியுறவுத் துறை அமைச்சா் சிகோா்ஸ்கி கடந்த அக்டோபா் மாதம் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்தாா். அப்போது அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சா் இசாக் தரை நேரில் சந்தித்துப் பேசினாா். அதன்பிறகு வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், ஜம்மு-காஷ்மீா் குறித்த கருத்து சோ்க்கப்பட்டிருந்தது.