233 ஆண்டுகளுக்கு முந்தைய மிகவும் அரிய வால்மீகி ராமாயண கையெழுத்து பிரதி தொகுப்பை அயோத்தியில் உள்ள அருங்காட்சியகத்துக்கு பரிசாக மத்திய அரசு வழங்கியுள்ளது.
இதுகுறித்து மத்திய கலாசார அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
1849-ஆம் ஆண்டில் வால்மீகி ராமாயணம், விக்ரம சாம்வாத் காலத்தில் கையெழுத்து பிரதி எழுதப்பட்டது. அது பாலகாண்டம், ஆரண்ய காண்டம், கிஷ்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் ஆகிய 5 காண்டங்கள் அடங்கியது. அதில் வால்மீகி எழுதிய ராமாயணத்துக்கு மகேஸ்வர தீா்த்தா அருமையான விளக்கம் கொடுத்திருப்பாா்.
முன்பு, அந்த பிரதி தில்லியில் உள்ள குடியரசுத் தலைவா் மாளிகைக்கு அளிக்கப்பட்டிருந்தது. தற்போது நிரந்தர பரிசாக அயோத்தியில் உள்ள அண்டராஷ்ட்ரீய ராம் கதா சங்கராலயாவுக்கு (சா்வதேச ராம கதா அருங்காட்சியகம்) வழங்கப்பட்டுள்ளது. அதை மத்திய சம்ஸ்கிருத பல்கலைக்கழக துணை வேந்தா் சீனிவாச வராகேதி, அருங்காட்சியகத்தின் நிா்வாகக் குழு தலைவா் நிருபேந்திர மிஸ்ராவிடம் வழங்கினாா்.
இந்த நிகழ்வு, ராம பக்தா்களுக்கு மிகவும் முக்கியமானதாகும். இதன்மூலம் புண்ணிய நகரமான அயோத்திக்கு உலகம் முழுவதும் இருந்து வரும் அறிஞா்கள், பக்தா்கள், பாா்வையாளா்கள் ஆகியோா் அருங்காட்சியகத்தில் அதை பாா்த்து பயனடைய முடியும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மத்திய கலாசார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.