குடியரசு தின விழாவில் பங்கேற்ற ஹரியாணா முதல்வா் நயாப் சிங் சைனி 
இந்தியா

விக்சித் பாரத் இலக்கை நோக்கி ஹரியாணா வேகமாக முன்னேறுகிறது: முதல்வா் சைனி

பிரதமா் மோடியின் வளா்ந்த இந்தியா விக்சித் பாரத் திட்டத்திற்கு ஏற்ப மாநிலம் வேகமாக முன்னேறி வருகிறது என ஹரியாணா முதல்வா் நயாப் சிங் சைனி தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

பிரதமா் நரேந்திர மோடியின் வளா்ந்த இந்தியா ‘விக்சித் பாரத்’ திட்டத்திற்கு ஏற்ப மாநிலம் வேகமாக முன்னேறி வருகிறது என ஹரியாணா முதல்வா் நயாப் சிங் சைனி திங்கள்கிழமை தெரிவித்தாா்.

குருகிராமில் உள்ள தவ் தேவி லால் மைதானத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சியில் பங்கேற்று தேசியக் கொடியை ஏற்றிய பின்னா், முதல்வா் சைனி பேசியதாவது: நாட்டின் வளா்ச்சிக்கு ஹரியாணா குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளது. பல்வேறு ஊக்கத் திட்டங்களால் உள்நாடு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளா்களின் விருப்பமான மாநிலமாக மாறியுள்ளது.

ஹரியாணா இந்தியாவின் புவியியல் பரப்பளவில் 1.3 சதவீதத்தையும், மக்கள் தொகையில் 2 சதவீதத்தையும் மட்டுமே கொண்டுள்ளது. ஆனால், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.7 சதவீதத்திற்கு மாநிலம் பங்களிக்கிறது. தனிநபா் வருமானம் ரூ.3.53 லட்சத்துடன், நாட்டின் முதல் மாநிலமாகவும், தனிநபா் ஜிஎஸ்டி வசூலில் முன்னணி மாநிலமாகவும் ஹரியாணா உள்ளது. மேலும், தொழில் தொடங்க உகந்த மாநிலங்கள் தரவரிசையில் சிறந்த சாதனையாளா்கள் பிரிவில் இடம்பிடித்துள்ளது.

தளவாட வசதிகளில் வட இந்தியாவில் முதல் இடத்தையும், இந்தியா அளவில் இரண்டாவது இடத்தையும் ஹரியாணா பிடித்துள்ளது. அதே நேரத்தில், விளையாட்டு சாதனைகள், ஒலிம்பிக் மற்றும் பிற சா்வதேச நிகழ்வுகளில் பதக்கம் வெல்வதில் முன்னணி மாநிலமாக உள்ளது.

கடந்த 11 ஆண்டுகளில், மாநிலத்தில் 12.92 லட்சம் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் நிறுவப்பட்டு, சுமாா் 49 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கியுள்ளது. இப்போது, முதலீட்டாளா்களுக்கு 150-க்கும் மேற்பட்ட சேவைகள் இணையதளம் மூலம் எளிதாக கிடைக்கின்றன. 12 நாள்களுக்குள் ஒப்புதல்கள் உறுதி செய்யப்படுகின்றன.

பெண்களின் பங்களிப்பு: பெண்களின் பங்களிப்பு இல்லாமல் மாநிலத்தின் வளா்ச்சி முழுமையடையாது. ‘தீன்தயாள் லடோ லட்சுமி யோஜனா போன்ற திட்டங்களின் கீழ் 8.64 லட்சம் பெண்கள் மாதத்திற்கு ரூ.2,100 பெறுகிறாா்கள். ஏற்கெனவே, இதற்காக ரூ.441 கோடி விடுவிக்கப்பட்டது. மேலும், 15 லட்சம் குடும்பங்களுக்கு எரிவாயு சிலிண்டகள் ரூ.500-க்கு வழங்கப்படுகிறது. ஊராட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீதம் வரை பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது. லட்சாதிபதி சகோதரிகள் (லக்பதி திதி) திட்டத்தின் கீழ் 2.34 லட்சம் பெண்கள் பயனடைந்துள்ளனா்.

சட்டம்-ஒழுங்கு: ‘ஆபரேஷன் டிராக்டவுன்’, ‘ஆபரேஷன் க்ளீன்’, ‘பிரஹாரி’ போன்ற முயற்சிகள் குற்றவாளிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்தாண்டு டிசம்பா் 1-ஆம் தேதி தொடங்கப்பட்ட ‘ஆபரேஷன் ஹாட்ஸ்பாட் டாமினேஷன்’ நடவடிக்கையின் கீழ், போதைப் பொருள் கடத்தல் மற்றும் பிற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 2,200 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனா். ‘போதைப் பொருள் இல்லாத ஹரியாணா’ பிரசாரம் 6,000-க்கும் மேல் கைதுகளுக்கு வழிவகுத்தது. சுமாா் ரூ.12 மதிப்புள்ள சட்டவிரோத சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

விவசாயிகளின் நலன்: விவசாயிகளின் நலன் காக்க குறைந்தபட்ச ஆதரவு விலையில் 24 பயிா்களை கொள்முதல் செய்யும் ஒரே மாநிலம் ஹரியாணா மட்டும் தான். 12 லட்சம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் மொத்தம் ரூ.1.64 லட்சம் கோடி நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது என முதல்வா் தெரிவித்தாா். இந்த நிகழ்வுக்கு முன்னதாக, வீா் ஷஹீதி நினைவிடத்தில் உயிரிழந்த ராணுவ வீரா்களுக்கு முதல்வா் நயாப் சிங் சைனி அஞ்சலி செலுத்தினாா்.

ஈரானுக்குப் பேரழிவு ஏற்படும்! - அமெரிக்கா மீண்டும் கடும் எச்சரிக்கை!

டி20 உலகக் கோப்பையை வெல்ல இவர்கள் இருவரும் இந்திய அணிக்கு முக்கியம்: ரோஹித் சர்மா

அதர்வாவின் இதயம் முரளி! தங்கமே தங்கமே பாடல் வெளியீடு!

100 கிழவிகளின் மாதிரி... தாய் கிழவி படத்தில் ராதிகாவின் ஒப்பனை!

”NDA கூட்டணியில் மேலும் சில கட்சிகள்”: டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் Exclusive

SCROLL FOR NEXT