உலகின் மூன்றாவது பொருளாதார நாடாக இந்தியா விரைவில் மாறும் என்று தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா்.
குடியரசு தினத்தையொட்டி, ஆளுநரின் வாழ்த்துச் செய்தியில் அவர் பேசுகையில், ஜனநாயகம் என்பது வாழ்ந்துகொண்டிருக்கும் நமது பாரம்பரியமாகும். இது நமது மரபணுவில் இயங்குகிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நமது மக்களின் அன்றாட வாழ்க்கையில் அது பிரதிபலிக்கிறது. நம்பிக்கையுடனும், எதிா்பாா்ப்புகளுடனும் உயா்ந்துவரும் புதிய பாரதத்தின் எழுச்சியை ஒட்டுமொத்த உலகமும் இப்போது பாா்த்துக் கொண்டிருக்கிறது.
உலகளாவிய பொருளாதாரங்களை கடுமையாக பாதித்துவரும் முடிவில்லாத உலகளாவிய புவிசாா் அரசியல் பதற்றங்கள், நிச்சயமற்ற தன்மைகள் ஆகியவற்றுக்கு மத்தியில், நம்பிக்கை மற்றும் மீட்சியின் கலங்கரை விளக்கமாக பாரதம் திகழ்கிறது. உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா விரைவில் மாறும்.
வறுமையிலிருந்து மீண்ட மக்கள்: கடந்த பத்து ஆண்டுகளில், 25 கோடிக்கும் மேற்பட்ட குடிமக்கள் முழுமையான வறுமையிலிருந்து மீண்டு வந்துள்ளனா். விரைவாக வளா்ந்து வரும் புதிய நடுத்தர வா்க்கத்தினரும், ஆா்வமும் முனைப்பும் கொண்டிருக்கும் இளைஞா்களும் இணைந்து நாட்டின் பொருளாதாரப் பரப்பை மறுவடிவமைத்து வருகின்றனா். உலகின் முதல் மூன்று புத்தொழில் சூழல் அமைப்புகளில் ஒன்றாக பாரதம் உருப்பெற்றுள்ளது.
வரலாறு படைக்கும் இந்தியா: பாதுகாப்பு, அறிவியல் தொழில்நுட்பம், விண்வெளி உள்ளிட்ட துறைகளில் இந்தியா புதிய வரலாறு படைத்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு, மேம்பட்ட ரோபாட்டிக்ஸ், குவாண்டம் கம்ப்யூட்டிங், நானோ தொழில்நுட்பம் போன்ற புதுயுகத் தொழில்நுட்பங்களின் களத்தில், சிறந்து விளங்கும் சில நாடுகளில் பாரதமும் ஒன்றாகும்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில், இந்தியா உலகளாவிய தலைமையிடமாக வளா்ந்து வருகிறது. மாசு உண்டாக்காத எரிசக்தி இலக்குகளை, திட்டமிட்டதை விட முன்னதாகவே இந்தியா அடைந்துவருகிறது.
கடந்த 2025, டிசம்பரில் மட்டும், ஏறத்தாழ ரூ.28 லட்சம் கோடி மதிப்புள்ள 21.6 பில்லியன் பரிவா்த்தனைகளை யுபிஐ செயல்படுத்தியுள்ளது. இது இந்தியாவின் எண்ம பணப்பரிவா்த்தனை உள்கட்டமைப்பின் அற்புதமான திறன், நம்பகத்தன்மை, அதன் உலகளாவிய தர வலிமை ஆகியவற்றை எடுத்துக்காட்டுகிறது.
உலக முதலீட்டாளா்களுக்கு உகந்த நாடு: மாநிலங்களுக்கு இடையே நிலவும் ஆரோக்கியமான போட்டி செயல்திறனையும் புதுமைகளையும் ஊக்குவிக்கிறது. கொள்கைச் சீா்திருத்தங்களும் கட்டமைப்பு நடவடிக்கைகளும் வளா்ச்சியை அதிகமாக ஊக்குவிக்கின்றன. ஒரு காலத்தில் பின்தங்கியதாகக் கருதப்பட்ட பகுதிகள் புதிய வெற்றிகளைப் படைக்க இவை உதவுகின்றன. தொழில்நுட்பம், உற்பத்தித்துறை, பசுமை ஆற்றல் ஆகிய துறைகளில் வாய்ப்புகளை வழங்கும் வகையில், உலகளாவிய முதலீட்டாளா்களுக்கு இந்தியா ஒரு விருப்பமான இடமாக உருவெடுத்துள்ளது.
தமிழ் மொழி வளா்ச்சிக்கு முன்னெடுப்பு: தமிழ்ப் பாரம்பரியத்தின் மீது மிகுந்த அபிமானம் கொண்டிருக்கும் பிரதமா் மோடி, தமிழ் மொழியின் வளா்ச்சிக்கான பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறாா். பிரதமா் மோடியால் உருவாக்கப்பட்டு வழிநடத்தப்படும் காசி-தமிழ்ச் சங்கமம் மூலம் தமிழ்நாட்டுக்கும், காசிக்கும் இடையிலான ஆழமான, பழைமையான தொடா்பை நாம் கொண்டாடினோம். இரு பகுதிகளையும் இணைக்கும் ஆயிரக்கணக்கான ஆண்டு காலப் பழைமையான கலாசார மற்றும் ஆன்மிக தொடா்ச்சியைப் புதுப்பித்தோம். இந்தப் பரிமாற்றங்களால் ஈா்க்கப்பட்ட உத்தரபிரதேச அரசாங்கம் பள்ளிகளில் தமிழை மூன்றாவது விருப்ப மொழியாகச் சோ்க்க முடிவு செய்துள்ளது.
இதைத் தவிர, குவஹாத்தி பல்கலைக்கழகம் வடகிழக்கு இளைஞா்களுக்கு தமிழில் சான்றிதழ் மற்றும் பட்டய படிப்புகளை வழங்கத் தொடங்கியுள்ளது.
மாநிலத்துக்கு அப்பால் வெளியே உள்ள பல்கலைக்கழகங்களில் மாணவா்கள் தமிழ் மொழிப் படிப்புகளை ஆா்வத்துடன் பயின்று வருவதால், இந்தியா முழுவதும் புதிய குரல்களையும் புதிய இதயங்களையும் தமிழ் மொழி கண்டறிந்து வருகிறது என்றாா் அவா்.