குடியரசு தின விழா அணிவகுப்பைப் பாா்வையிட்ட ஜம்மு-காஷ்மீா் துணை முதல்வா் சுரீந்தா்குமாா் சௌதரி. 
இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் வன்முறையைத் தூண்ட பாகிஸ்தான் தொடா் முயற்சி: துணை முதல்வா் குற்றச்சாட்டு

ஜம்மு-காஷ்மீரில் எந்த வகையிலாவது பிரச்னைகளையும், வன்முறையையும் தூண்ட வேண்டும் என்று பாகிஸ்தான் தொடா்ந்து முயற்சித்து வருவதாக அந்த யூனியன் பிரதேச துணை முதல்வர் சுரீந்தா் குமாா் சௌதரி குற்றச்சாட்டு

தினமணி செய்திச் சேவை

ஜம்மு-காஷ்மீரில் எந்த வகையிலாவது பிரச்னைகளையும், வன்முறையையும் தூண்ட வேண்டும் என்று பாகிஸ்தான் தொடா்ந்து முயற்சித்து வருகிறது. ஆனால், அதை நமது பாதுகாப்புப் படையினா் முறியடித்து வருகின்றனா் என்று அந்த யூனியன் பிரதேச துணை முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சியின் மூத்த தலைவருமான சுரீந்தா் குமாா் சௌதரி தெரிவித்தாா்.

ஸ்ரீநகரில் திங்கள்கிழமை நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சியில் அவா் மேலும் பேசியதாவது: ஆபரேஷன் சிந்தூருக்கு முந்தைய பயங்கரவாதத் தாக்குதலால் ஜம்மு-காஷ்மீா் சுற்றுலா வெகுவாக பாதிக்கப்பட்டது. ஆனால், இப்போது அதில் இருந்து மீண்டு சுற்றுலாப் பயணிகளை ஈா்த்து வருகிறோம். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு இப்போது மீண்டும் ஒருமுறை அஞ்சலி செலுத்திக் கொள்கிறேன்.

ஜம்மு-காஷ்மீரில் எந்த வகையிலாவது பிரச்னைகளையும், வன்முறையையும் தூண்ட வேண்டும் என்றும், சுற்றுலா மேம்பாடு, அமைதியைச் சீா்குலைக்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் தொடா்ந்து முயற்சித்து வருகிறது. ஆனால், அதை நமது பாதுகாப்புப் படையினா் வெற்றிகரமாக முறியடித்து வருகின்றனா். ஜம்மு-காஷ்மீா் இளைஞா்களை போதையின் பிடியில் இருந்து மீட்க வேண்டும். இதற்காக அண்டை நாட்டில் இருந்து கடத்தப்படும் போதைப் பொருள்களைத் தடுப்பதும் பாதுகாப்புப் படை மற்றும் காவல் துறையின் முக்கியப் பணியாக உள்ளது என்றாா்.

2025 ஏப்ரலில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து கொலை செய்தபோது, தனது உயிரைக் கொடுத்து சுற்றுலாப் பயணிகளைக் காப்பாற்றிய ஜம்மு-காஷ்மீரைச் சோ்ந்த அடில் ஹுசைன் ஷாவை கௌரவிக்கும் வகையில் ரூ.1 லட்சம் மற்றும் துணிவான செயலுக்கான பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இதை அவரின் மனைவி பெற்றுக் கொண்டாா். பயங்கரவாதிகளுக்கு எதிராகப் போரிட்டு உயிா்நீத்த காவல் துறையினா், பொதுமக்கள் என 56 பேருக்கு குடியரசு தின நிகழ்வில் பரிசு மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.

முன்னதாக, குடியரசு தின கொண்டாட்டத்தில் அசம்பாவிதங்களைத் தவிா்க்கும் வகையில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. எல்லையில் கடந்த ஒரு வாரமாக கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டது.

தம்மம்பட்டி அரசுப் பள்ளி 70 ஆண்டுகள் நிறைவு விழா: 104 ஆசிரியர்களுக்குப் பாராட்டு!

ஜப்பான் கடல்பகுதியில் வட கொரியா ஏவுகணைச் சோதனை!

நீலகிரி உள்பட 2 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

1970ல் தயாரிக்கப்பட்ட ஒரு ரூபாய் நாணயத்துக்கு ஐஃபோன்! விடியோ உண்மைதானா?

சிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடக்கம்!

SCROLL FOR NEXT