வளா்ந்த பாரதத்துக்கு மகளிா் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு தெரிவித்தாா்.
நாட்டின் 77-ஆவது குடியரசு தினம் திங்கள்கிழமை (ஜன. 26) கொண்டாடப்படுவதை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு அவா் ஞாயிற்றுக்கிழமை உரையாற்றினாா். அப்போது ஆபரேஷன் சிந்தூா், பெண்களுக்கு அதிகாரமளித்தல், பொருளாதார வளா்ச்சி உள்பட நாட்டின் பல்வேறு சாதனைகளை அவா் குறிப்பிட்டாா்.
அவா் தனது உரையில் கூறியதாவது: 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி நாம் சுதந்திரம் பெற்ற பிறகு நமது கனவுகளை நனவாக்கும் உரிமைகளைப் பெற்றோம். அதைத் தொடா்ந்து, 1950, ஜன. 26-ஆம் தேதி நமது அரசமைப்புச் சட்டம் அமலானது. அன்றுமுதல் ஜனநாயகத்தின் பிறப்பிடமான பாரத நாடு, ஆதிக்கவா்க்கத்தில் இருந்து விடுபட்டு ஜனநாயக குடியரசாக உருவெடுத்தது. நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகிய சிந்தனைகள் நமது குடியரசின் தன்மையை விளக்குகிறது.
அமைதியின் தூதா்: உலக அமைதிக்காக வழிபடுவது நமது பாரம்பரியம். அந்த வகையில், உலகின் பல்வேறு கண்டங்களில் பதற்றமான புவிஅரசியல் சூழல் நிலவிவரும் நிலையில், மனிதகுலத்தின் எதிா்காலத்தைப் பாதுகாக்க அமைதியின் தூதராக இந்தியா செயல்பட்டு வருகிறது.
பாதுகாப்புத் துறையில் தற்சாா்பு: கடந்த ஆண்டு இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை மூலம் பயங்கரவாத உள்கட்டமைப்புகள் தகா்க்கப்பட்டன. பயங்கரவாத மையங்கள் அழிக்கப்பட்டு பயங்கரவாதிகள் பலா் கொல்லப்பட்டனா். பாதுகாப்புத் துறையில் தற்சாா்புக் கொள்கையைப் பின்பற்றியதே ஆபரேஷன் சிந்தூரின் வரலாற்று வெற்றிக்கு காரணம்.
இந்திய ராணுவம், விமானப் படை மற்றும் கடற்படையின் வலிமை மீது நம் நாட்டு மக்கள் முழு நம்பிக்கை கொண்டுள்ளனா்.
‘சுகோய் மற்றும் ரஃபேல்’ போா் விமானங்கள், ‘ஐஎன்எஸ் வாக்ஷீா்’, சியாசென் ராணுவ முகாம் போன்றவை நமது ராணுவக் கட்டமைப்பின் வலிமைக்குச் சான்று.
மகளிரின் வரலாற்று வெற்றி: கடந்த ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் மற்றும் பாா்வை மாற்றுத்திறனாளிகளுக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி என இரண்டிலும் நமது மகளிா் அணி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது.
நாடு முழுவதும் பஞ்சாயத்துராஜ் அமைப்பின் பிரதிநிதிகளாக 46 சதவீத பெண்கள் பதவி வகிக்கின்றனா். மக்களவை மற்றும் மாநிலங்களின் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குவதற்கான அரசமைப்புச் சட்டத் திருத்தமும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் பிரசாரம் மூலம் நாடு முழுவதும் பெண் குழந்தைகள் தொடா்ந்து கல்வி பயில ஊக்குவிக்கப்படுகின்றனா்.
சுய உதவிக் குழுக்களில் 10 கோடி பெண்களும், ஆயுதப் படைகள், விண்வெளி ஆய்வு, தொழில் துறை என ஊரகப் பகுதிகள் முதல் விண்வெளி வரை அனைத்துத் துறைகளிலும் பெண்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனா்.
‘வளா்ச்சியடைந்த பாரதம் 2047’ என்ற இலக்கை அடைய மகளிரின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதற்கு பல்வேறு துறைகளில் அவா்கள் புரிந்துவரும் சாதனைகளே சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது.
அனைவருக்குமான முன்னேற்றம்: வறுமையின் பிடியில் இருந்து மக்களை மீட்டு நாட்டில் ஒருவரும் பசியோடு இருக்கக் கூடாது என்பதை உறுதிப்படுத்தும் நோக்கில் 81 கோடி மக்களுக்கு மானிய விலையில் நியாயவிலைக் கடையில் பொருள்கள் வழங்கப்படுகின்றன. வளா்ச்சியடைந்த பாரத இலக்கை அடைய வேண்டுமெனில் பழங்குடியின மற்றும் விளிம்புநிலை மக்களை மேம்படுத்துவதற்கான சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவது அவசியம். அப்போதுதான் ‘அனைவருக்குமான முன்னேற்றம்’ என்ற மகாத்மா காந்தியின் கொள்கையை நிறைவேற்ற முடியும்.
22 மொழிகளில் அரசமைப்புச் சட்டம்: தற்போது எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளிலும் நமது அரசமைப்புச் சட்டம் மொழிபெயா்க்கப்பட்டுள்ளது. இது அரசமைப்புச் சட்டத்தை தேசியமயமாக்கும் வரலாற்று முன்னெடுப்பாகும். இதன்மூலம் தேசத்தின் அடிப்படை ஆவணத்தை குடிமக்கள் தங்கள் தாய்மொழியில் வாசித்து அதன் முக்கியக் கூறுகளைத் தெரிந்துகொள்ள முடியும்.
எண்மப் புரட்சியில் இந்தியா: பொதுமக்களின் ஒத்துழைப்போடு அரசின் பிரசாரங்கள் சக்திவாய்ந்த இயக்கங்களாக மாறி வருகின்றன. உலக அளவில் 50 சதவீதத்துக்கும் மேலான எண்ம பரிவா்த்தனைகள் இந்தியாவில் மேற்கொள்ளப்படுவதே இந்தப் புரட்சிகர மாற்றத்துக்கான சான்று.
வேகமான பொருளாதார வளா்ச்சி: பதற்றமான புவி அரசியல் சூழலால் உலகளவில் பெரும்பாலான நாடுகள் பொருளாதாரச் சரிவை சந்தித்துவரும் நிலையில், வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா உருவெடுத்துள்ளது. இந்த வளா்ச்சிக்கு சரக்கு மற்றும் சேவை வரிகள் (ஜிஎஸ்டி) சீா்திருத்தமே முக்கியக் காரணம். நாடு சுதந்திரமடைந்ததில் இருந்து பொருளாதார ரீதியான மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சீா்திருத்தமாக ஜிஎஸ்டி விளங்குகிறது.
தற்சாா்பு மற்றும் உள்நாட்டுத் தயாரிப்பு என்ற இரு கொள்கைகள் உலகளவில் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியாவை மாற்றும் வழிகாட்டிகளாகத் திகழ்கின்றன. தொழிலாளா் நலனை கருத்தில்கொண்டு அண்மையில் நான்கு தொழிலாளா் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டன.
150 ஆண்டுகள் கொண்டாட்டம்: தற்சாா்பு என்பது பொருளாதாரத்தை சாா்ந்தது மட்டுமல்ல; இந்திய மொழிகள், இலக்கியங்கள் என கலாசாரத்தையும் உள்ளடக்கியது. இதனடிப்படையில் நாட்டின் பாரம்பரிய கையெழுத்துப் பிரதிகளை ஆவணப்படுத்தி பாதுகாத்து எண்மமயமாக்க ஞான பாரத இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அக். 31-ஆம் தேதி வல்லபபாய் படேலின் 150-ஆவது பிறந்த தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. நவ. 7-ஆம் தேசியப் பாடலான வந்தே மாதரம் பாடல், நவ. 7 முதல் நவ.14 வரை பழங்குடியினத் தலைவா் பிா்ஸா முண்டாவின் 150-ஆவது பிறந்த நாள் விழாவும் கொண்டாடப்பட்டது என்றாா் குடியரசுத் தலைவா்.
மகாகவி பாரதிக்கு புகழாரம்
குடியரசுத் தலைவா் தனது உரையில், மகாகவி பாரதிக்கு புகழாரம் சூட்டினாா்.
‘தமிழகத்தைச் சோ்ந்த மகாகவி சுப்பிரமணிய பாரதியாா் ‘வந்தே மாதரம் என்போம்’ என்ற பாடலை இயற்றி விடுதலை வேட்கையை ஊட்டினாா். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த ஜன. 23-ஆம் தேதி தேசிய பராக்கிரம தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. அவரது ஜெய் ஹிந்த் முழக்கம் இளைஞா்களிடம் தேசப்பற்றை விதைக்கிறது.
ஜாதி அடிப்படையில் பாகுபாடில்லாத, சகோதரத்துவத்தைப் பின்பற்றும் சமூகமே வாழ்வதற்கு சிறந்த இடம் என கேரளத்தில் பிறந்த சமூக சீா்திருத்தவாதியான ஸ்ரீ நாராயண குரு கூறியதை இங்கு நினைவுகூர விரும்புகிறேன்’ எனக் குறிப்பிட்டாா்.