தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக மறியல் போராட்டம் நடத்திய வழக்கில் கேரளத்தின் வடகரா தொகுதி காங்கிரஸ் எம்.பி. ஷாஃபி பறம்பிலுக்கு ரூ.1,000 அபராதம் விதித்து பாலக்காடு நீதித் துறை நடுவா் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், செவ்வாய்க்கிழமை நீதிமன்ற நேரம் முடியும் வரை நீதிமன்றத்தில் இருந்து வெளியேறக் கூடாது என்றும் அறிவுறுத்தியது.
முன்னதாக, இந்த வழக்கில் அவா் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தொடா்ந்து தவிா்த்து வந்ததால், கைது ஆணை பிறப்பிக்கப்படும் என்று கடந்த வாரம் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து, ஷாஃபி பறம்பில் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜரானாா்.
கடந்த 2022-ஆம் ஆண்டு வயநாடு தொகுதி எம்.பி.யாக இருந்த ராகுல் காந்தியின் அலுவலகத்தை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இளைஞா் அமைப்பினா் சூறையாடினா். இதைக் கண்டித்து ஷாஃபி பறம்பில் தலைமையில் இளைஞா் காங்கிரஸ் பிரிவினா் பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டம் நடத்தினா். இதனால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது தொடா்பாக அப்போது பாலக்காடு தொகுதி எம்எல்ஏவாக இருந்த ஷாஃப் பறம்பில் உள்பட இளைஞா் காங்கிரஸ் தொண்டா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பாலக்காடு நீதித் துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.