சநாதன தர்மத்தைக் கடைப்பிடிப்பவர்களை நிராகரிக்கும் அரசு ஆட்சிக்கு வராது என்றும், இந்திய விடுதலைக்குப்பின் சநாதன தர்ம கொள்கை, கோட்பாடுகளைப் பின்பற்றும் அரசு நிர்வாகத்துக்காக வெவ்வேறு சநாதன பாரம்பரியங்களைப் பின்பற்றும் மக்கள் காத்திருந்தனர் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.
குஜராத்தின் காந்திநகரில் செவ்வாய்க்கிழமை(ஜன. 27) நடைபெற்ற ஆன்மிக நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட அமித் ஷா பேசியதாவது :
“சநாதன தர்மத்தின் மாண்புகளை உயர்த்திப்பிடிக்கத் தவறிய ஓர் அரசு, இந்த நாட்டில் எப்போதும் ஆட்சி அதிகாரத்துக்கு வராது என்பதில், சன்னியாசிகள், சாதுக்கள், ஆன்மிக குருக்களின் ஆசியுடன் நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன்.
இந்திய விடுதலைக்குப்பின், சநாதன தர்மத்தின் கொள்கை, கோட்பாடுகளைப் பின்பற்றும் ஓர் அரசு நிர்வாகத்துக்காக, அவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஓர் அரசு நிர்வாகத்துக்காக, வெவ்வேறு சநாதன பாரம்பரியங்களைக் கடைப்பிடிக்கும் மக்கள் காத்திருந்தனர்.
குஜராத்தின் மகன், நரேந்திர மோடி, கடந்த 11 ஆண்டுகளாக இந்த நாட்டை வழிநடத்துகிறார். பிரதமர் மோடியின் தலைமையிலான ஆட்சியில், சுமார் 550 ஆண்டுகளுக்கும் முன்னர் அழிக்கப்பட்ட ராமரின் கோயிலானது கட்டமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், இந்தத் தருணத்துக்காக நூற்றாண்டுகளாகக் காத்திருந்த மக்களின் நெடுநாள் விருப்பம் நிறைவேறியுள்ளது.
கடந்த 11 ஆண்டுகளாக, மோடி அரசால் எடுக்கப்பட்ட பல்வேறு முடிவுகளும் முன்னெடுப்புகளும், இந்தியாவின் கலாசாரம் மற்றும் ஆன்மிக பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கிறது. 370-ஆவது சட்டப்பிரிவு நீக்கப்பட்டது; முத்தலாக் ஒழிக்கப்பட்டது; அனைத்து மதத்துக்கும் பொதுச் சிவில் சட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பழங்கால பாரம்பரியங்களுக்குப் புத்துயிர் கொடுக்க முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. யோகா, ஆயுர்வேதம், பசுப் பாதுகாப்பு, பத்ரிநாத், கேதார்நாத், காசி விஸ்வநாதர், சோம்நாத் உள்ளிட்ட முக்கிய புனித தலங்களைப் புனரமைப்பதற்கான முயற்சிகளும் இந்த 11 ஆண்டுகளில் எடுக்கப்பட்டுள்ளன” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.