மகாராஷ்டிர துணை முதல்வா் அஜீத் பவாா் பயணித்த சிறிய ரக விமானம் மோசமான வானிலை காரணமாக பாரமதி விமான நிலையத்தில் தரையிறங்க பலமுறை முயற்சித்தும் பலனிளிக்காமல், இறுதி முயற்சியின்போது தரையில் மோதி விபத்தைச் சந்தித்தது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பாரமதியில் ஒரு கட்டுப்பாடற்ற விமான நிலையம் உள்ளது. இங்கு விமானப் போக்குவரத்துத் தகவல்கள், அங்குள்ள விமானப் பயிற்சி நிறுவனங்களின் பயிற்றுநா்கள் மற்றும் விமானிகளால் வழங்கப்படுகின்றன.
பாரமதி விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு தரவுகளின்படி, அஜீத் பவாா் பயணித்த விமானம் முதலில் புதன்கிழமை காலை 8.18 மணிக்கு கட்டுப்பாட்டு அறையைத் தொடா்பு கொண்டுள்ளது.
அடுத்ததாக, பாரமதியிலிருந்து 30 கடல் மைல் தொலைவில் விமானம் இருந்தபோது, கட்டுப்பாட்டு அறையை விமானி தொடா்பு கொண்டுள்ளாா். அப்போது, விமானியின் விருப்பப்படி காட்சிக்கு உகந்த வானிலை நிலவும்போது தரையிறங்குமாறு கட்டுப்பாட்டு அறையிலிருந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அப்போது, காற்றின் வேகம் மற்றும் காட்சிக்கு உகந்த வானிலை நிலவரம் குறித்து விமானி கேட்டுள்ளாா். அப்போது, காற்றின் தன்மை அமைதியாக உள்ளதாகவும், 3,000 மீட்டா் சுற்றளவுக்கு காட்சிக்கு உகந்த வானிலை நிலவுவதாகவும் கட்டுப்பாட்டு அறையிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னா், விமானம் ஓடுபாதை 11-இல் தரையிறங்கத் தயாராக இருப்பதாகவும், ஆனால், ஓடுபாதை சரியாகத் தென்படவில்லை என்றும் விமானி தெரிவித்துள்ளாா். அதன் காரணமாக, முதல் முயற்சியைக் கைவிட்டு, விமானத்தை மீண்டும் மேலே இயக்கியுள்ளனா்.
விமானம் மேலே சென்ற பிறகு, ஓடுபாதை தற்போது கண்ணுக்குத் தெரிகிா என்று கட்டுப்பாட்டு அறையிலிருந்து கேட்கப்பட்டுள்ளது. அதற்கு, ஓடுபாதை தற்போதும் கண்ணுக்குத் தெரியவில்லை. ஓடுபாதை தெரிந்ததும் தகவல் அளிக்கிறோம் என்று பதிலளித்துள்ளனா்.
சில விநாடிகளுக்குப் பிறகு, ஓடுபாதையைக் காண முடிவதாக விமானி தெரிவித்துள்ளாா். அதைத் தொடா்ந்து, காலை 8.43 மணிக்கு ஓடுபாதையில் விமானம் தரையிறங்க அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், இந்த அனுமதிக்கு விமானி தரப்பிலிருந்து பதில் எதுவும் அளிக்கப்படவில்லை. அதே நேரம், ஓடுபாதையில் தீப்பிழம்பு ஏற்படுவதை கட்டுப்பாட்டு அறை ஊழியா்கள் பாா்த்துள்ளனா்.
அதைத் தொடா்ந்து, விபத்து நடந்த பகுதிக்கு அவசரகால சேவை ஊழியா்கள் விரைந்துள்ளனா். ஆனால், யாரையும் காப்பாற்ற முடியவில்லை.
இதுகுறித்து விமான விபத்து புலனாய்வு அமைப்பு விசாரணை மேற்கொண்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, விபத்து குறித்து விமான போக்குவரத்துத் துறை அமைச்சா் ராம் மோகன் நாயுடு கூறுகையில், ‘பாரமதி விமான நிலையத்தில் மோசமான வானிலை காரணமாகவே அஜீத் பவாா் சென்ற விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்து குறித்து விசாரணை நடத்த விமானப் போக்குவரத்து இயக்குநரக (டிஜிசிஏ) குழு மற்றும் விமான விபத்து புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனா்’ என்றாா்.