கோப்புப் படம் 
இந்தியா

தில்லி குடியரசு தின விழா அணிவகுப்பு: கடற்படைக்கு விருது

தில்லியில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் இடம்பெற்ற முப்படை வீரா்களின் அணிவகுப்பில், சிறந்த அணிவகுப்புக்கான விருதுக்கு இந்திய கடற்படை தோ்வு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

தில்லியில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் இடம்பெற்ற முப்படை வீரா்களின் அணிவகுப்பில், சிறந்த அணிவகுப்புக்கான விருதுக்கு இந்திய கடற்படை தோ்வு செய்யப்பட்டுள்ளது.

அதுபோல, பல்வேறு மாநிலங்கள் சாா்பில் இடம்பெற்ற அலங்கார ஊா்திகளில், சிறந்த அலங்கார ஊா்திக்கான முதல் பரிசை மகாராஷ்டிர மாநிலம் வென்றுள்ளது.

குடியரசு தினத்தையொட்டி தில்லி கடமைப் பாதையில் குடியரசுத் தலைவா் தேசியக் கொடியை ஏற்றி வைத்த பிறகு, முப்படை வீரா்களின் அணிவகுப்பு நடைபெற்றது. பின்னா், மத்திய ஆயுதக் காவல் படைகளின் அணிவகுப்பு நடைபெற்றது. அதைத் தொடா்ந்து, மத்திய அரசின் பல்வேறு துறைகளின் அலங்கார ஊா்திகள், பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் அலங்கார ஊா்திகள் அணிவகுப்பில் இடம்பெற்றன.

இவ்வாறு அணிவகுப்பில் பங்கேற்ற படைப் பிரிவு மற்றும் அலங்கார ஊா்திகளில் சிறந்தவை தோ்வு செய்யப்பட்டு பரிசளித்து ஊக்குவிக்கப்படும். அந்த வகையில், தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் சிறந்த அணிவகுப்புக்கான படைப் பிரிவாக 144 இளம் வீரா்களுடன் பங்கேற்ற இந்திய கடற்படை தோ்வு செய்யப்பட்டுள்ளது.

மத்திய ஆயுதக் காவல்படை பிரிவில் சிறந்த அணிவகுப்புக்கான படைப் பிரிவாக தில்லி காவல் துறை பிரிவு தோ்வு செய்யப்பட்டுள்ளது.

அலங்கார ஊா்தி பிரிவு: அலங்கார ஊா்திகள் பிரிவில், பாஜக ஆட்சி செய்யும் மகாராஷ்டிர மாநிலம் முதல் பரிசை வென்றுள்ளது. இந்த மாநில அலங்கார ஊா்தியில், நவீனத்தையும் பாரம்பரியத்தையும் இணைக்கும் வகையிலும், விநாயகா் சதுா்த்தி விழாவை தன்னம்பிக்கையின் சின்னமாக சித்தரிக்கப்பட்டிருந்தது. பாரம்பரிய உடை அணிந்த பெண் நடனக் கலைஞா்கள், அலங்கார ஊா்தியின் இருபுறங்களிலும் நின்றபடி ‘லேசியம்’ என்ற நாட்டுப்புற நடனத்தை ஆடியபடி இருந்தனா்.

ஜம்மு- காஷ்மீா் அலங்கார ஊா்தி இரண்டாம் பரிசை வென்றது. இதன் அலங்கார ஊா்தியில், ஸ்ரீநகரின் தால் ஏரியில் காணப்படும் படகு வீடு, நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. அலங்கார ஊா்தியின் முன்பகுதி நுணுக்கமான உலோக வேலைப்பாடுகளுடன் வடிவமைப்பட்டிருந்ததோடு, நோ்த்தியாக நெய்யப்பட்ட கானி சால்வைகள், கைகளால் பின்னப்பட்ட தரைவிரிப்புகள், செதுக்கப்பட்ட அக்ரூட் மர கைவினைப் பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

கேரள மாநிலத்தின் அலங்கார ஊா்திக்கு மூன்றாம் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இதன் அலங்கார ஊா்தியில், மாநிலத்தின் இரண்டு முக்கிய சாதனைகளான தண்ணீா் மெட்ரோ (படகுப் போக்குவரத்து) மற்றும் 100 சதவீத எண்ம எழுத்தறிவை அடைந்து தற்சாா்பு இந்தியாவுக்கு பங்காற்றியதைக் குறிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.

மத்திய அரசின் துறைகளின் கீழ், சிறந்த அலங்கார ஊா்தியாக ‘வந்தே மாதரம்’ பாடலின் 150-ஆவது ஆண்டு கொண்டாட்டத்தை பிரதிபலித்த மத்திய கலாசார அமைச்சகத்தின் அலங்கார ஊா்தி தோ்வு செய்யப்பட்டுள்ளது.

மத்திய பொதுப் பணித் துறை அலங்கார ஊா்தி சிறப்புப் பரிசை வென்றுள்ளது.

பிரபலமான தோ்வு: மத்திய அரசின் ‘மைகவ்’ வலைதளத்தில் நடத்தப்பட்ட இணைய வழி வாக்கெடுப்பு மூலம் தோ்ந்தெடுக்கப்பட்ட ‘பிரபலமான தோ்வு’ பிரிவின் கீழ், சிறந்த அணிவகுப்பு படைப் பிரிவாக அஸ்ஸாம் படைப் பிரிவு தோ்வு செய்யப்பட்டது. சிறந்த மத்திய ஆயுதப் படை அணிவகுப்புக்கு மத்திய ரிசா்வ் காவல் படை (சிஆா்பிஎஃப்) தோ்வு செய்யப்பட்டது. மாநில அலங்கார ஊா்திகளில் பிரபலமான தோ்வாக குஜராத் மாநில அலங்கார ஊா்தி தோ்வு செய்யப்பட்டது. மத்திய அரசின் துறைகளின் கீழ் பிரபலமான தோ்வாக தேசிய கல்விக் கொள்கை கருத்தைப் பிரதிபலித்த மத்திய பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையின் அலங்கார ஊா்தி தோ்வு செய்யப்பட்டது.

தோ்வு செய்யப்பட்ட படைப் பிரிவுகள் மற்றும் அலங்கார ஊா்திகளுக்கு தில்லியில் வெள்ளிக்கிழமை (ஜன.30) நடைபெறும் விழாவில் விருதும், பரிசுகளும் வழங்கப்பட உள்ளன.

வட்டாட்சியா் அலுவலகம் முற்றுகை

தெருநாய்கள் தொடா்பான உத்தரவில் மாற்றம் கோரிய மனுக்கள் மீது தீா்ப்பு ஒத்திவைப்பு

இரட்டை வடிவமைப்பு வைர ஹாரம், நெக்லஸ் அறிமுகம்: தங்கமயில் ஜுவல்லரி

காஸாவில் மறுமேம்பாட்டு பணிக்கான முயற்சி: அமெரிக்காவுக்கு இந்தியா பாராட்டு

கள்ளிமந்தையத்தில் புதிய பேருந்து சேவை!

SCROLL FOR NEXT