மக்களவையில் பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று(ஜன. 29) காலை தாக்கல் செய்தார்.
பரபரப்பான அரசியல் சூழலில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் நேற்று (ஜன. 28 ) தொடங்கியது.
2026-27-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப். 1-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது மிக அரிதான நிகழ்வாகும்.
மத்திய பட்ஜெட்டை தொடர்ந்து 9-ஆவது முறையாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக, நிதியமைச்சர் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்யப்படுவது வழக்கம்.
அதன்படி, 2025-26ம் நிதி ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று தாக்கல் செய்தார். இந்த அறிக்கையில் கடந்தாண்டில் இந்தியப் பொருளாதாரம் எவ்வாறு செயல்பட்டது என்பது குறித்த தகவல்கள் இருக்கும்.
பொருளாதார ஆய்வறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
பொருளாதார ஆய்வறிக்கை 2025–26ன் படி, இந்திய பொருளாதாரம் தொடர்ந்து சிறப்பாக வளர்ந்து வருவதாகவும், இந்த வளர்ச்சி 2026–27 நிதியாண்டிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் நிதி அமைப்பு மேலும் வலுப்பெறுகிறது!
அட்டவணைப்படுத்தப்பட்ட வர்த்தக வங்கிகளின் நிலுவை கடன் வளர்ச்சி 2025ல் 14.5% ஆக உயர்ந்துள்ளது. MSME துறைக்கான வங்கி கடன் 21.8% ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பில் கணிசமான வளர்ச்சி
இ-ஷ்ரம்(e-shram) இணையதளத்தில் 31 கோடிக்கும் அதிகமான முறைசாரா தொழிலாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
பதிவு செய்யப்படாத விவசாயம் சாரா துறையில் 12.9 கோடி தனிநபர்கள் பங்களித்து வருகின்றனர்.
2025-26 நிதி ஆண்டின் முதல் பாதியில், வேலைவாய்ப்பின்மை விகிதம் குறைந்து வருவதையும், தொழிலாளர் பங்கேற்பு விகிதம் நிலைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வலுவான திறன் மேம்பாட்டுச் சூழலை உருவாக்குதல்
தேசிய தொழில் பழகுநர் ஊக்குவிப்பு (PM-NAPS) கீழ் 43.47 லட்சத்திற்கும் அதிகமான பயிற்சியாளர்கள் ஈர்க்கப்பட்டுள்ளனர்.
தேசிய பயிற்சித் திட்டத்தின் (NATS) கீழ் 2024-25 நிதி ஆண்டில் 5.23 லட்சம் பயிற்சியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
வேலைவாய்ப்பு முகாம்கள் மற்றும் தேசிய பயிற்சி முகாம்கள், வேலை வழங்குபவர்களுக்கும் வேலை தேடுபவர்களுக்கும் இடையிலான தொடர்பை மேம்படுத்துகின்றன.
வேளாண்மை மற்றும் உணவு மேலாண்மை
கடந்த 5 ஆண்டுகளில், வேளாண் மற்றும் அதன் சார்புத் துறைகள் சராசரியாக 4.4% வருடாந்திர வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.
வேளாண் துறையில் உற்பத்தித்திறன் மேம்பாட்டை ஊக்குவித்தல்
பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் (PMFBY) கீழ் 2024-25 ஆம் ஆண்டில் 4.19 கோடி விவசாயிகளுக்குக் காப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இது 2022-23 ஆம் ஆண்டைவிட 32 சதவீத வளர்ச்சியாகும்.
எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் சுயசார்பை எட்டும் நோக்கில், சமையல் எண்ணெய்கள்-எண்ணெய் வித்துக்களுக்கான தேசிய இயக்கம் (NMEO-OS) மற்றும் சமையல் எண்ணெய்கள்-பனை எண்ணெய்க்கான தேசிய இயக்கம் (NMEO-OP) ஆகியவை செயல்படுத்தப்படுகின்றன: இதன் மூலம் 2030-31 ஆம் ஆண்டிற்குள் சுமார் 70 மில்லியன் டன் உற்பத்தியை இலக்காகக் கொண்டுள்ளது.
உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் வலுவான மீள்திறனை வெளிப்படுத்துகிறது
2024-25 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த ஏற்றுமதி 825.3 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டி சாதனை; இது கடந்த ஆண்டை விட 6.1% வளர்ச்சியாகும்.
2026 ஆம் ஆண்டு ஜனவரி 16-ஆம் தேதி நிலவரப்படி, இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 701.4 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.