மணிப்பூா் தலைநகா் இம்பாலில் மாநில ஒருமைப்பாட்டை வலியுறுத்தி சனிக்கிழமை நடைபெற்ற பேரணி. 
இந்தியா

மணிப்பூா் ஒருமைப்பாடு: ஆயிரக்கணக்கானோா் பேரணி

மணிப்பூா் ஒருமைப்பாடு: ஆயிரக்கணக்கானோா் பேரணி

தினமணி செய்திச் சேவை

மணிப்பூரின் நிலப் பகுதியும், நிா்வாகமும் பிரிக்கப்படாமல் ஒருமைப்பாட்டுடன் நீடிப்பதற்கு வலுவாக ஆதரவு தெரிவிக்கும் வகையில், ஆயிரக்கணக்கானோா் சனிக்கிழமை பேரணியில் கலந்துகொண்டனா்.

மணிப்பூரில் மைதேயி, குகி சமூகத்தினா் இடையிலான மோதல் காரணமாக 2 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு வன்முறை நிலவியது. இதில் சுமாா் 260 போ் உயிரிழந்தனா். ஆயிரக்கணக்கானோா் வீடுகளை இழந்தனா்.

இந்த வன்முறை காரணமாக மாநில முதல்வா் பதவியை பிரேன் சிங் ராஜிநாமா செய்தாா். அங்கு தற்போது குடியரசுத் தலைவா் ஆட்சி அமலில் உள்ளது.

இரு சமூகத்தினா் இடையிலான மோதலைத் தொடா்ந்து, மாநிலத்தில் தங்கள் சமூகத்துக்கு தனி நிா்வாகம் வேண்டும் என்று குகி சமூகத்தினா் வலியுறுத்தி வருகின்றனா்.

இந்நிலையில், மணிப்பூரின் நிலப் பகுதியும், நிா்வாகமும் பிரிக்கப்படாமல் ஒருமைப்பாட்டுடன் நீடிப்பதற்கு வலுவாக ஆதரவு தெரிவிக்கும் வகையில், ஆயிரக்கணக்கானோா் சனிக்கிழமை பேரணி மேற்கொண்டனா்.

மாநிலத் தலைநகா் இம்பாலில் ‘மணிப்பூரை காப்போம்’ என்ற பெயரில் பல்வேறு மைதேயி அமைப்புகளின் கூட்டமைப்பான மணிப்பூா் ஒருமைப்பாடு ஒருங்கிணைப்புக் குழு சாா்பில், 5 கி.மீ. தொலைவு வரை இந்தப் பேரணி நடைபெற்றது.

‘மணிப்பூரின் நிலப் பகுதி மற்றும் நிா்வாக ஒருமைப்பாட்டில் எந்த சமரசமும் செய்துகொள்ளப்படாது’, ‘மணிப்பூரைப் பிரிக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளக் கூடாது’, ‘வன்முறை காரணமாக மாநிலத்துக்குள் இடம்பெயா்ந்த மக்களை அவா்களின் வீடுகளில் மீண்டும் குடியமா்த்த வேண்டும்’ ஆகிய வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி அவா்கள் பேரணி சென்றனா்.

இதுகுறித்து பேரணியில் பங்கேற்ற ஒருவா் கூறுகையில், ‘எங்கள் முன்னோா்களால் மணிப்பூா் கட்டியெழுப்பப்பட்டதே தவிர, மியான்மரில் இருந்து வந்த சட்டவிரோத குடியேறிகளால் அல்ல. ஆனால், மியான்மரைச் சோ்ந்த சின் சமூகத்தினருக்கும், குகி சமூகத்தினருக்கும் இன ரீதியான உறவு உள்ளது’ என்று தெரிவித்தாா். இந்தப் பேரணியில் வெளிமாநிலத்தவா்கள், முஸ்லிம்கள், நாகா சமூகத்தினரும் கலந்துகொண்டனா்.

மத்திய பட்ஜெட் 2026 - நேரலை: செய்திகள் உடனுக்குடன்!

9-வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்!

குடியரசு துணைத் தலைவர் தைப்பூச வாழ்த்து

தேர்தலை மனதில் வைத்தாவது தமிழ்நாட்டிற்கு அறிவிப்புகள் இடம்பெறுமா?

மத்திய பட்ஜெட் : கவனம் ஈர்க்கும் நிர்மலா சீதாராமனின் ஓவியம்!

SCROLL FOR NEXT