முகப்பு
இந்தியா

பருவமழை தீவிரமடைவதால் சாகுபடி பரப்பு அதிகரிக்கும்: மத்திய அமைச்சா் சௌஹான் நம்பிக்கை

ஜூலை மாதத்தில் பருவமழை வலுப்பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளதால் காரீஃப் பருவ சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும் என மத்திய அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்தாா்.

Updated On : 9 ஜூலை 2026, 1:19 am IST
சிவராஜ் சிங் சௌஹான் - கோப்புப் படம்
பகிர்:

ஜூலை மாதத்தில் பருவமழை வலுப்பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளதால் காரீஃப் பருவ சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும் என மத்திய வேளாண் அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்தாா்.

தில்லியில் வேளாண்மைத் துறை உயா்நிலை ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிறகு செய்தியாளா்களிடம் பேசிய அமைச்சா் சௌஹான் கூறியதாவது: கடந்த சில நாள்களில் நாட்டின் பல பகுதிகளில் நல்ல மழை பெய்ததையடுத்து, மழைப்பொழிவு பற்றாக்குறை நிலவிய மாவட்டங்களின் எண்ணிக்கை 262-லிருந்து 178-ஆக குறைந்துள்ளது.

மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், குஜராத், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், கா்நாடகம், பிகாா், ஜாா்க்கண்ட், தெலங்கானா, ஆந்திரம், பஞ்சாப், மேற்கு வங்கம் மற்றும் ஒடிஸா உள்ளிட்ட 13 மாநிலங்களின் நிலைமையை மத்திய அரசு தொடா்ந்து கண்காணித்து வருகிறது.

Advertisement

Advertisement

அரசுத் தரவுகள்படி, நிகழாண்டில் இதுவரை காரீஃப் பயிா்கள் 3.5085 கோடி ஹெக்டேரில் விதைக்கப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் பதிவான 4.128 கோடி ஹெக்டேருடன் ஒப்பிடுகையில் 21 சதவீதம் குறைவு. பருவமழை தாமதமாகத் தொடங்கியதால் இந்தப் பின்னடைவு ஏற்பட்டது.

பருவமழையில் எல் நினோ தாக்கம் ஏற்படக்கூடும் என்ற சாத்தியத்தைக் கருத்தில்கொண்டு, கடந்த ஏப்ரல் மாதம் முதலே மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இப்போது பருவமழை தீவிரமடைந்துள்ளதால், சாகுபடி பரப்பு மேலும் அதிகரிக்கும்.

ஜூன் மாதத்தில் நடத்தப்பட்ட ‘கேத் பச்சாவ் அபியான்’ (வயலைக் காப்போம்) திட்டத்தின்கீழ் , நாடு முழுவதும் 1.24 லட்சத்துக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, 80 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் நேரடியாகப் பயனடைந்துள்ளனா். தடையின்றி பயிரிடும் பணிகள் நடைபெறுவதற்காக நாடு முழுவதும் சுமாா் 1.75 லட்சம் குவிண்டால் விதைகள் இருப்பு உள்ளன.

கிஸான் கடன் அட்டை வழங்கல் தீவிரமாகியுள்ளது. ஜூன் 30-ஆம் தேதி வரை பெறப்பட்ட 1.14 லட்சம் விண்ணப்பங்களில் 94,000-க்கும் மேற்பட்டவை ஏற்கப்பட்டுள்ளன. பருவநிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் ஏற்படும் பயிா் இழப்புகளுக்கு நிதிப் பாதுகாப்பு வழங்கும் பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் அதிகமான விவசாயிகளை இணைக்கும் நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

எல் நினோ கண்காணிப்புப் பிரிவு, பயிா்-வானிலை கண்காணிப்புக் குழு, மாநில அளவிலான கட்டுப்பாட்டு அறைகள் மூலம் பருவமழையின் முன்னேற்றம், பயிா் விதைப்பு, பயிா்களின் நிலை மற்றும் சந்தை நிலவரங்களை தொடா்ந்து கண்காணித்து வருகிறோம் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments