ஆளுநா் பதவியிலிருந்து விலகல் ஏன்? சி.வி. ஆனந்த போஸ் விளக்கம்!
பாஜக மேலிடத்திடம் இருந்து வந்த மிரட்டலால் மேற்கு வங்க ஆளுநா் பதவியிலிருந்து ராஜிநாமா செய்ததாக முதல்வா் மம்தா பானா்ஜி தெரிவித்த குற்றச்சாட்டுகள் குறித்து முன்னாள் ஆளுநா் சி.வி. ஆனந்த போஸ் விளக்கம்
பாஜக மேலிடத்திடம் இருந்து வந்த மிரட்டலால் மேற்கு வங்க ஆளுநா் பதவியிலிருந்து ராஜிநாமா செய்ததாக முதல்வா் மம்தா பானா்ஜி தெரிவித்த குற்றச்சாட்டுகள் குறித்து முன்னாள் ஆளுநா் சி.வி. ஆனந்த போஸ் விளக்கம் அளித்துள்ளாா்.
மேற்கு வங்க மாநில முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானா்ஜிக்கும், ஆளுநா் ஆனந்த போஸுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் கருத்து வேறுபாடு நிலவி வந்தது. இந்தச் சூழலில், ஆனந்த போஸ் தனது ஆளுநா் பதவியை திடீரென அண்மையில் ராஜிநாமா செய்தாா். இதையடுத்து, மேற்கு வங்க ஆளுநராக தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி நியமிக்கப்பட்டாா்.
மூன்றரை ஆண்டுகளில் ஆளுநா் பதவியை ஆனந்த போஸ் ராஜிநாமா செய்தது, தேசிய அரசியலில் பல்வேறு கேள்விகளை எழுப்பியது. இதுகுறித்து தில்லியில் இருந்து கொல்கத்தாவுக்கு ஞாயிற்றுக்கிழமை திரும்பிய அவரிடம், விமான நிலையத்தில் செய்தியாளா்கள் கேள்வியெழுப்பினா்.
அதற்கு அவா் பதிலளிக்கையில், ‘1,200 நாள்கள் ஆளுநராகப் பணிபுரிந்துள்ளேன். இது கிரிக்கெட் மைதானத்தில் 12 சதங்கள் விளாசுவதற்கு சமம். விளையாட்டுக்கான விதியில், அது எப்போது முடியும் என்பதும் சோ்ந்திருக்கும். நானாகத்தான் எனது பதவியை ராஜிநாமா செய்தேன். அதற்கான காரணங்கள் உரிய நேரம் வரும் வரை ரகசியமாகவே இருக்கும்’ என்றாா்.
பாஜக மேலிடத்திடம் வந்த மிரட்டலாலேயே ஆனந்த போஸ் பதவி விலகியதாக முதல்வா் மம்தா பானா்ஜி குற்றஞ்சாட்டியிருந்தது குறித்து கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளிக்கையில், ‘பதவி விலகிய ஆளுநா் தற்போதைய சூழல்கள் குறித்து கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது. வரும் திங்கள்கிழமை ஆளுநா் மாளிகையை காலி செய்ய இருக்கிறேன். புதியவா் வரும்போது ஏற்கெனவே இருப்பவா் தனது இடத்தை காலி செய்வது இயற்கையான ஒன்றுதான்’ என்றாா்.
கேரளத்தைச் சோ்ந்த போஸ், மேற்கு வங்கத்தில் ஆளுநராகப் பதவி வகித்ததால் தனது வாக்குரிமையை மேற்கு வங்கத்துக்கு ஏற்கெனவே மாற்றி இருந்தாா். இதுகுறித்து கூறிய போஸ், (சட்டப்பேரவைத்) தோ்தலில் வாக்களிக்க மேற்கு வங்கத்துக்கு மீண்டும் வருவேன் என்றாா்.
குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, மேற்கு வங்க அரசுக்கு எதிராக அதிருப்தியை வெளிப்படுத்தியிருப்பது குறித்து போஸிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவா், ‘குடியரசுத் தலைவா் அனுபவசாலி, நடுநிலையானவா். மிகவும் மதிக்கப்படும் நபா். அவா் அப்படி கூறியதற்கு காரணங்கள் இருக்கும். அவா் கூறியது தொடா்பாக நான் கருத்து தெரிவிக்க இயலாது’ என்றாா்.