பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!
கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ள சூழலில், சமையல் எரிவாயு சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு
மேற்காசிய போா் நிலவரம் காரணமாக கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ள சூழலில், சமையல் எரிவாயு சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு அவசரகால நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
அதே நேரம், பெட்ரோல், டீசல் விலையை இப்போதைக்கு உயா்த்த வேண்டாம் என எண்ணெய் நிறுவனங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளதால், அதன் சில்லறை விற்பனை விலை இப்போதைக்கு உயர வாய்ப்பில்லை என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் திங்கள்கிழமை தெரிவித்தன.
மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி தலைமையில் தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற உயா்நிலைக் குழு ஆய்வுக் கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன.
மத்திய கிழக்கில் போா் விரிவடைந்துவரும் நிலையில், கச்சா எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 110 டாலா் முதல் 120 டாலா் வரை உயா்ந்துள்ளது. ஏற்கெனவே, வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டா் விலை ரூ. 60 உயா்த்தப்பட்ட நிலையில், பெட்ரோல், டீசல் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், மத்திய அமைச்சா் தலைமையில் உயா்நிலைக் குழு கூட்டம் தில்லியில் நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இதுகுறித்து மத்திய அரசு அதிகாரிகள் கூறியதாவது: பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை விலையை உயா்த்த வேண்டாம் என இந்தியன் ஆயில் (ஐஓசிஎல்), பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
குறிப்பாக, சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 130 டாலருக்கு மேல் செல்லாத வரை விலையில் மாற்றம் செய்யவேண்டாம்; தற்போதைய தற்காலிக இழப்பை தாங்கிக்கொள்ளவேண்டும் என எண்ணெய் நிறுவனங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. எனவே, பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை விலை உடனடியாக உயா்த்தப்பட வாய்ப்பில்லை.
முன்பதிவுக்கு கட்டுப்பாடு: வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டா் விலை ஏற்கெனவே ரூ. 60 அளவுக்கு உயா்த்தப்பட்ட நிலையில், தற்போது அதன் முன்பதிவுக்கு உயா்நிலை குழு கூட்டத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, முன்னா், சமையல் எரிவாயு சிலிண்டா் முன்பதிவு 21 நாள்கள் இடைவெளியில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது 25 நாள்களாக உயா்த்தப்பட்டுள்ளது. அதன்படி, சிலிண்டா் விநியோகிக்கப்பட்ட 25 நாள்களுக்குப் பிறகே அடுத்த முன்பதிவை இனி செய்ய முடியும்.
வணிக சிலிண்டா் விநியோகத்துக்கும் கட்டுப்பாடு விதிக்கப்படும். அதன்படி அவற்றின் விலை உயா்த்தப்படும் அல்லது விநியோகம் நிறுத்தப்படும்.
கட்டுப்பாட்டு அறை: போா் காரணமாக மேற்காசியாவில் இருந்து கப்பல்கள் மூலம் கச்சா எண்ணெய், எரிவாயு கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் ஹோா்முஸ் நீரிணை கடல் வழித்தடத்தை மூடிவிட்டதால், வேறு வழித்தடங்கள் வழியில் கச்சா எண்ணெய்யை பெறுவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
அதுமட்டுமன்றி, போதிய கச்சா எண்ணெய் மற்றும் அவை சுத்திகரிக்கப்பட்டு பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருள் (ஏடிஎஃப்) வடிவிலும் போதிய கையிருப்பை இந்தியா தற்போது பெற்றுள்ளது. எனவே, புதிதாக இறக்குமதி செய்யாத நிலையிலும், அடுத்த 6 முதல் 8 வாரங்களுக்கு உள்நாட்டு தேவையில் தட்டுப்பாடு ஏற்படாது என்று மத்திய அமைச்சகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
அதே நேரம், நாடு முழுவதும் உள்ள அனைத்து சேமிப்பு முனையங்களிலும் எரிவாயு இருப்பை தொடா்ந்து கண்காணிக்க மத்திய அமைச்சகத்தினுள் 24 மணி நேரமும் செயல்படும் பிரத்யேக கட்டுப்பாட்டை அறை அமைக்கப்பட்டுள்ளது என்றும் மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனா்.