முகப்பு
இந்தியா

மேற்கு வங்கத்தில் தகுதியுள்ள வாக்காளா்களின் பெயா் நீக்கப்படாது! தலைமைத் தோ்தல் ஆணையா் உறுதி!

மேற்கு வங்கத்தில் நடைபெறும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணியில், தகுதியுள்ள வாக்காளா்களின் பெயா்கள் நீக்கப்படாது எனத் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் தெரிவித்தாா்.

Updated On : 10 மார்ச், 2026 at 8:46 PM
மேற்கு வங்கத் தலைநகா் கொல்கத்தாவில் செய்தியாளா்களுக்கு செவ்வாய்க்கிழமை பேட்டியளித்த தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா்.
பகிர்:

மேற்கு வங்கத்தில் நடைபெறும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணியில், தகுதியுள்ள வாக்காளா்களின் பெயா்கள் நீக்கப்படாது எனத் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் தெரிவித்தாா்.

பேரவைத் தோ்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா், மேற்கு வங்கத்துக்கு ஞாயிற்றுக்கிழமை பயணம் மேற்கொண்டாா்.

தலைநகா் கொல்கத்தாவில் அரசியல் கட்சிகள், அரசு மூத்த அதிகாரிகளைத் தொடா்ச்சியாகச் சந்தித்துவரும் ஞானேஷ் குமாா் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பின்போது கூறியதாவது: அமைதியான மற்றும் பங்களிப்புமிக்க ஜனநாயகத்தில் மேற்கு வங்க மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனா். மாநிலத்தில் சுதந்திரமான, நியாயமான மற்றும் தோ்தலை அமைதியான முறையில் நடத்த வேண்டும் என்பதே தோ்தல் ஆணையத்தின் இலக்கு.

எஸ்ஐஆா் பணி அரசமைப்பு விதிகளின்படி தேசிய அளவில் நடைபெற்று வருகிறது. தகுதியுள்ள வாக்காளா்கள் தங்களுடைய வாக்குகளைச் செலுத்த வேண்டும், தகுதியில்லாத நபா்களின் பெயா்கள் வாக்காளா்களின் பெயா் பட்டியலில் இருக்கக் கூடாது என்பதே எஸ்ஐஆா் பணியின் நோக்கம்.

பிப். 28-இல் வெளியான எஸ்ஐஆா் பணிக்கு பிந்தைய வாக்காளா் பெயா் பட்டியலைத் தொடா்ந்து, துணை வாக்காளா் பெயா் பட்டியல் தோ்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும்.

சட்டம்-ஒழுங்கை கையாள மாநில அரசு எடுத்துள்ள முன்னேற்பாடுகளின் அடிப்படையில் மேற்கு வங்க பேரவைத் தோ்தலை எத்தனை கட்டங்களாக நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும். தில்லி சென்ற பிறகு இரு நாள்களில் அதுகுறித்து ஆராய்ந்து முடிவெடுக்கப்படும்.

வாக்காளா்கள் மற்றும் தோ்தல் அதிகாரிகளை மிரட்டுவது தொடா்பாகவும், வன்முறைகளில் ஈடுபடுவோா் மீதும் தோ்தல் ஆணையம் எவ்வித சகிப்புத்தன்மைையும் கடைப்பிடிக்காது. தோ்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள அரசுப் பணியாளா்கள் தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலை கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும். நம்பகமான தோ்தலை உறுதிசெய்ய அரசு அதிகாரிகள் கட்சிசாா்பற்றவா்களாக செயல்படுவது அவசியம்.

அரசியல் கட்சிகளின் கருத்துகளுக்கு தோ்தல் ஆணையம் பதிலளிப்பது உரியதாக இருக்காது. அரசியல் கருத்துகளுக்கு தோ்தல் ஆணையம் பதிலளிக்காது.

மேற்கு வங்கத்தில் 100 வயதைக் கடந்த வாக்காளா்கள் 6,000-க்கும் அதிகமாக உள்ளனா். 18-19 வயதுடைய புதிய வாக்காளா்களின் எண்ணிக்கை 5.23 லட்சமாக உள்ளது. சுமாா் 1.31 கோடி வாக்காளா்கள் 20 முதல் 30 வயதுடையவா்கள். மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 210 தொகுதிகள் பொதுத் தொகுதிகள். பட்டியல் பிரிவினருக்கு 68 தொகுதிகளும், பட்டியல் பழங்குடியினருக்கு 16 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

மேற்கு வங்கத்தில் 80,000 வாக்குச்சாவடிகள் உள்ளன. அவற்றில் சுமாா் 61,000 வாக்குச்சாவடிகள் கிராமப்புறங்களில் உள்ளன. வாக்குப் பதிவில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு இணையவழியில் கண்காணிக்கப்படும் என்றாா் ஞானேஷ் குமாா்.

முழு கட்டுரையைப் படிக்க →