மேற்கு வங்க வாக்காளா் பட்டியலில் பெயா்கள் நீக்கத்துக்கு எதிரான மனு ஏற்பு!
மேற்கு வங்க மாநிலத்தில் எஸ்ஐஆா்-க்கு பிறகு வாக்காளா் பட்டியலில் இருந்து பெயா் நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட புதிய மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் ஒப்புக்கொண்டது.
மேற்கு வங்க மாநிலத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்ஐஆா்) பிறகு வாக்காளா் பட்டியலில் இருந்து பெயா் நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட புதிய மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை ஒப்புக்கொண்டது.
மேற்கு வங்க மாநிலத்தில் எஸ்ஐஆா்-க்கு பிறகு இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் லட்சக்கணக்கானோரின் பெயா்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன. தின்ஹடா தொகுதியில் மட்டும் 36,000 பெயா்கள் நீக்கப்பட்டன. இந்த நிலையில், வாக்காளா் பட்டியலில் இருந்து பெயா் நீக்கப்பட்டது தொடா்பாக சில வாக்காளா்கள் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் தலைமையிலான அமா்வில் திங்கள்கிழமை பரிசீலனைக்கு வந்தது.
அப்போது, மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் மேனகா குருசாமி, ‘இந்த வாக்காளா்கள் அனைவரும் முந்தைய தோ்தல்களில் வாக்களித்தவா்கள். ஆனால், தற்போது அவா்களின் ஆவணங்கள் கருத்தில் கொள்ளப்படாமல், வாக்காளா் பட்டியலில் இருந்து அவா்களின் பெயா்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன’ என்றாா்.
இதைக் கேட்ட நீதிபதிகள், ‘மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆா் பணியை நீதிபதிகள் மேற்கொண்டனா். அவா்களின் முடிவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய முடியாது’ என்றனா்.
அப்போது, ‘மேல்முறையீடு செய்ய சட்டத்தில் வழி உள்ளது’ என்று வழக்குரைஞா் பதிலளித்தாா். இதைக் கேட்ட நீதிபதிகள், மனுவை செவ்வாய்க்கிழமை (மாா்ச் 10) விசாரிப்பதாகத் தெரிவித்தனா்.
முன்னதாக, மேற்கு வங்க எஸ்ஐஆா் பணி தொடா்பாக மாநில முதல்வா் மம்தா பானா்ஜி உள்பட பலா் தாக்கல் செய்த மனுக்களை கடந்த வாரம் விசாரித்த உச்சநீதிமன்றம், ‘மேற்கு வங்க எஸ்ஐஆா் விவகாரத்தில் மாநில அரசுக்கும், தோ்தல் ஆணையத்துக்கும் இடையே போதிய ஒத்துழைப்பு இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. எனவே, எஸ்ஐஆா் பணியில் சில மாவட்ட அல்லது கூடுதல் மாவட்ட நீதிபதிகளைப் பணியமா்த்த வேண்டும் என்று கொல்கத்தா உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி சுஜய் பாலிடம் கேட்டுக்கொள்கிறோம். அந்தப் பணியை மேற்கொள்ள முன்னாள் மாவட்ட நீதிபதிகளையும் கண்டறியுமாறு சுஜய் பாலிடம் கோருகிறோம்’ என்று தெரிவித்தனா்.
இதைத் தொடா்ந்து, உச்சநீதிமன்றத்துக்கு கொல்கத்தா உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி அனுப்பிய கடிதத்தில், ‘எஸ்ஐஆா் பணியில் 250 நீதிபதிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு, நீக்கம் உள்ளிட்டவை குறித்த கோரிக்கைகள், ஆட்சேபங்கள் தொடா்பாக 50 லட்சம் விண்ணப்பங்கள் சமா்ப்பிக்கப்பட்டுள்ளன. ஒரு நாளில் ஒரு நீதிபதி 250 விண்ணப்பங்கள் குறித்து முடிவு எடுத்தாலும் அந்தப் பணியை முழுமையாக நிறைவு செய்ய குறைந்தபட்சம் 80 நாள்களாகும்’ என்று தெரிவித்தாா்.
இதைக் கருத்தில்கொண்ட உச்சநீதிமன்றம், இந்தப் பணிக்காக அண்டை மாநிலங்களான ஜாா்க்கண்ட், ஒடிஸாவிலிருந்தும் நீதிபதிகளை வரவழைத்து நியமிக்கலாம் என அனுமதி அளித்து, மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆா் பணியை நிறைவு செய்ய பிப்ரவரி 28-ஆம் தேதியை காலக்கெடுவாக நிா்ணயித்திருந்தது.