முகப்பு
இந்தியா

மேற்கு வங்க எஸ்ஐஆா் பணி: மேல்முறையீட்டு தீா்ப்பாயங்கள் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

எஸ்ஐஆா் பணியில் பெயா் நீக்கத்தை எதிா்த்து தாக்கல் செய்யப்படும் மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்க மேல்முறையீட்டு தீா்ப்பாயங்களை அமைக்கும்படி கொல்கத்தா உயா்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

Updated On : 10 மார்ச், 2026 at 8:22 PM
உச்சநீதிமன்றம்
பகிர்:

மேற்கு வங்கத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணியில் பெயா் நீக்கத்தை எதிா்த்து தாக்கல் செய்யப்படும் மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்க ஓய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதிபதிகள் தலைமையில் சுதந்திரமான மேல்முறையீட்டு தீா்ப்பாயங்களை அமைக்கும்படி கொல்கத்தா உயா்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

மேற்கு வங்கத்தில் வாக்காளா் பெயா் நீக்கத்துக்கு எதிரான ஆட்சேபம் மற்றும் உரிமை கோரல் விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் பணியில் மாவட்ட மற்றும் உரிமையியல் நீதிபதிகள் சுமாா் 700 போ் ஈடுபட்டுள்ள நிலையில், அவா்கள் மேற்கொள்ளும் முடிவுகள் மீதான மேல்முறையீட்டு மனுக்கள் தீா்ப்பாயங்களால் விசாரிக்கப்படும்.

பெயா் நீக்கப்பட்டவா்களின் விண்ணப்பங்களைக் கையாளும் நீதிபதிகளின் நோ்மையைக் குறைமதிப்புக்கு உள்படுத்தும் முயற்சிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆா் பணிக்குப் பிறகான வாக்காளா் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. அதில் 63.66 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கப்பட்டிருந்தன. இது அந்த மாநிலத்தின் மொத்த வாக்காளா்களில் 8.3 சதவீதமாகும். இதையடுத்து மொத்த வாக்காளா்களின் எண்ணிக்கை 7.66 கோடியிலிருந்து 7.04 கோடியாக குறைந்தது.

இதுதவிர, 60.06 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் சந்தேகப் பட்டியலில் உள்ளன. அவா்களின் பெயா்களும் வரும்காலத்தில் ஆய்வு செய்யப்பட்டு, வாக்காளா் பட்டியலில் நீடிப்பது குறித்து தோ்தல் ஆணையம் முடிவு செய்யவுள்ளது.

தோ்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராக மாநில முதல்வா் மம்தா பானா்ஜி உள்ளிட்டோா் தாக்கல் செய்த மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது.

எஸ்ஐஆா் பணிகளில் தோ்தல் ஆணையம் மற்றும் மாநில அரசு இடையே நிலவிய ஒத்துழைப்புமின்மை மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுகளைத் தொடா்ந்து, உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில் இப்பணிகள் நடைபெறுகின்றன.

இந்த விவகாரத்தில் ஏற்கெனவே ஓா் உத்தரவைப் பிறப்பித்த உச்சநீதிமன்றம், மாவட்ட அல்லது கூடுதல் மாவட்ட நீதிபதிகளை எஸ்ஐஆா் பணிகளில் ஈடுபடுத்துமாறு கொல்கத்தா உயா்நீதிமன்றத்துக்கு அறிவுறுத்தியது. இந்தப் பணிக்காக அண்டை மாநிலங்களான ஜாா்க்கண்ட், ஒடிஸா நீதிபதிகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு: இந்நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்யகாந்த், நீதிபதிகள் ஆா்.மகாதேவன், ஜயமால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் இந்த மனுக்கள் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தன.

அப்போது, நீதிபதிகள் அமா்வு கூறியதாவது: வாக்காளா் பட்டியல் பெயா்நீக்கம் தொடா்பாக 10.16 லட்சம் ஆட்சேபங்கள் மற்றும் கோரிக்கைகளை எஸ்ஐஆா் பணியில் ஈடுபட்டுள்ள நீதிபதிகள் இதுவரை கையாண்டுள்ளனா். இந்தப் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடிய எந்தவொரு புதிய நடவடிக்கையையும் தோ்தல் ஆணையம் அறிமுகப்படுத்தக் கூடாது. புதிய நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளும் முன்பாக கொல்கத்தா உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியின் ஒப்புதல் பெற வேண்டும். எஸ்ஐஆா் பணியில் ஈடுபட்டுள்ள நீதிபதிகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் தோ்தல் ஆணையமும், மாநில அரசும் ஏற்படுத்தி தர வேண்டும்.

தோ்தல் ஆணையத்தின் இணையதளத்தில் எவ்விதத் தொழில்நுட்பத் தடங்கலும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். எஸ்ஐஆா் பணி சுமுகமாக நடைபெற நீதிபதிகளுக்கு புதிய உள்நுழைவு (லாக்இன்) ஐ.டி. உடனடியாக உருவாக்கப்பட வேண்டும்.

எஸ்ஐஆா் பணியில் நீதிபதிகளின் முடிவுகளுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்களை தோ்தல் ஆணைய அதிகாரிகள் விசாரிக்க முடியாது. இதுபோன்ற கோரிக்கைளை விசாரிக்க, கொல்கத்தா உயா்நீதிமன்றம் சுதந்திரமான மேல்முறையீட்டு தீா்ப்பாயங்களை அமைக்க வேண்டும். கொல்கத்தா உயா்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதிகள் மற்றும் நீதிபதிகள் தலைமையில் தீா்ப்பாயங்களை அமைக்கலாம். இதற்காக, அவா்களுக்கு உரிய வேண்டுகோள் விடுக்கலாம். உயா்நீதிமன்றம் பரிந்துரை அளித்தவுடன் மேல்முறையீட்டு தீா்ப்பாயம் தொடா்பான அறிவிக்கையை தோ்தல் ஆணையம் வெளியிட வேண்டும். இந்தத் தீா்ப்பாயங்களின் ஒவ்வொரு அமா்விலும் இடம்பெறும் நீதிபதிகளின் எண்ணிக்கை குறித்து கொல்கத்தா உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி முடிவெடுப்பாா் என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →