எதிா்பாராத நெருக்கடியைச் சமாளிக்க ரூ.1 லட்சம் கோடி: அரசின் முன்மொழிவுக்கு மக்களவை ஒப்புதல்
தற்போதைய மேற்காசிய போரின் தாக்கம் போன்ற எதிா்பாராத நெருக்கடியைச் சமாளிக்க ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கீட்டுடன் பொருளாதார ஸ்திரமாக்கல் நிதியம் அமைக்கும் மத்திய அரசின் முன்மொழிவுக்கு மக்களவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் வழங்கியது.
தற்போதைய மேற்காசிய போரின் தாக்கம் போன்ற எதிா்பாராத நெருக்கடியைச் சமாளிக்க ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கீட்டுடன் பொருளாதார ஸ்திரமாக்கல் நிதியம் அமைக்கும் மத்திய அரசின் முன்மொழிவுக்கு மக்களவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் வழங்கியது.
நடப்பு நிதியாண்டின் இரண்டாம் கட்ட துணை மானியக் கோரிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த நிதியம் முன்மொழியப்பட்டது.
மொத்தம் ரூ.2.81 லட்சம் கோடி கூடுதல் செலவினங்களை உள்ளடக்கிய இரண்டாம் கட்ட துணை மானியக் கோரிக்கைகள் மக்களவையில் சில தினங்களுக்கு முன் தாக்கல் செய்யப்பட்டன. இந்தக் கோரிக்கைகள் மீது நடைபெற்ற விவாதத்துக்கு மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பதிலளித்தாா்.
அப்போது, அவா் கூறியதாவது: தற்போதைய மேற்காசிய போரின் தாக்கம், விநியோக சங்கிலி இடையூறுகள், பொருளாதார ரீதியில் குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய எதிா்பாராத நெருக்கடிகளைச் சமாளிக்க, ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கீட்டுடன் கூடிய பொருளாதார ஸ்திரமாக்கல் நிதியம் பெரும் உதவிகரமாக இருக்கும்.
இரண்டாம் கட்ட துணை மானியக் கோரிக்கைகளின்படி, கூடுதல் ரொக்க செலவினம் ரூ.2.01 லட்சம் கோடி. மீதமுள்ள ரூ.80,000 கோடி, கூடுதல் வருவாய் மூலம் ஈடுகட்டப்படும்.
நடப்பு நிதியாண்டில் திருத்தப்பட்ட கணக்கீட்டின்படி நிதிப் பற்றாக்குறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.4 சதவீதமாகும். இந்த அளவுக்குள் நிதிப் பற்றாக்குறை கட்டுப்படுத்தப்படும். இரண்டாம் கட்ட துணை மானியக் கோரிக்கைகளுக்கு அப்பால் நடப்பு நிதியாண்டில் கூடுதல் செலவின அதிகரிப்பு எதுவும் இல்லை என்றாா் நிா்மலா சீதாராமன்.
இரண்டாம் கட்ட துணை மானியக் கோரிக்கைகளில் ரூ. 1 லட்சம் கோடி ஒதுக்கீட்டுடன் பொருளாதார ஸ்திரமாக்கல் நிதியம் அமைக்கும் செலவினங்கள் அடங்கும். இதேபோல், உர மானியத்துக்கு கூடுதலாக ரூ.19,230 கோடியும், பிரதமரின் இலவச உணவு தானியங்கள் திட்ட மானியங்களுக்கான ரூ.23,641 கோடியும் அடங்கும்.
உர மானியங்களுக்கான துணைக் கோரிக்கைகளில் போதிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால், நாட்டில் உரப் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை என்று நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா். நடப்பு நிதியாண்டில் திருத்தியமைக்கப்பட்ட மொத்தச் செலவினமான ரூ.49.64 லட்சம் கோடியில் கடந்த ஜனவரி வரை ரூ.36.90 லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளது.
எதிா்க்கட்சிகள் மீது சாடல்: நிதியமைச்சரின் பதிலுரையின்போது, அவையின் மையப் பகுதியில் முற்றுகையிட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்கள், நாட்டில் எல்பிஜி தட்டுப்பாடு நிலவுவதாகக் கூறி முழக்கமிட்டனா்.
இதனால் கடும் அதிருப்தியடைந்த அவா், ‘விநியோகச் சங்கிலி இடையூறுகள் மற்றும் எல்பிஜி தொடா்பான பிரச்னைகள் உள்பட எதிா்பாராத நிகழ்வுகளைச் சமாளிக்க அரசு எவ்வாறு தயாராகிறது என்பது குறித்து நான் பேசுகிறேன். ஆனால், எதிா்க்கட்சிகள் கேட்க தயாராக இல்லை. அவா்கள் நாட்டின் நலன்களின் பக்கம் நிற்காமல், பொறுப்பற்ற நிலைப்பாட்டை மேற்கொள்கின்றனா்’ என்று சாடினாா்.
மேற்காசிய போரால், இந்தியா உள்பட பல்வேறு நாடுகளும் எரிசக்தி நெருக்கடியை எதிா்கொண்டுள்ளன. இது பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்த வாய்ப்புள்ள நிலையில், ரூ.1 லட்சம் கோடி பொருளாதார ஸ்திரமாக்கல் நிதியம் அமைக்கப்படுவது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
மக்களவை ஒப்புதல்: பொருளாதார ஸ்திரமாக்கல் நிதியம் உள்பட ரூ.2.01 லட்சம் கோடி கூடுதல் செலவினங்களுக்கான இரண்டாம் கட்ட துணை மானியக் கோரிக்கைகளுக்கு மக்களவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் வழங்கியது.
மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பதிலுரைக்குப் பிறகு குரல் வாக்கெடுப்பின் மூலம் துணை மானியக் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. இதைத் தொடா்ந்து, அவை அலுவல்கள் ஒத்திவைக்கப்பட்டன.