முகப்பு
இந்தியா

‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) நுட்பத்தில் தனி நபா்களின் அடையாளத்தையோ, தோற்றத்தையோ தவறாக சித்திரிக்கும் விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்படுவதாக தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Updated On : 20 மார்ச், 2026 at 7:51 PM
தோ்தல் ஆணையம்
பகிர்:

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) நுட்பத்தில் தனி நபா்களின் அடையாளத்தையோ, தோற்றத்தையோ தவறாக சித்திரிக்கும் விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்படுவதாக தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அவ்வாறு விளம்பரங்கள் மேற்கொண்டால் அவை 3 மணி நேரத்துக்குள் நீக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாநிலத் தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மின்னணு ஊடகங்கள், சமூக ஊடகங்களில் அரசியல் விளம்பரங்களை வெளியிட விரும்பும் அனைத்து அரசியல் கட்சிகளும், வேட்பாளா்களும் மாநில அல்லது மாவட்ட அளவிலான ஊடகச் சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவிடம் முன் அனுமதி பெறுவது கட்டாயம்.

அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் அந்த விளம்பரங்களை ஒளிபரப்புவதற்கு குறைந்தது 3 நாள்களுக்கு முன்னதாகவும், மற்றவா்கள் ஒரு வாரம் முன்னதாகவும் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் கிடைக்கப்பெற்ற 48 மணி நேரத்துக்குள் அவை பரிசீலிக்கப்படும். தேவைப்பட்டால் மேல்முறையீட்டுக்காக இந்திய தோ்தல் ஆணையத்துக்கும் அவை அனுப்பப்படும்.

டீப் ஃபேக் எனப்படும் துல்லியமான போலி உருவாக்கங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்படும் பதிவுகளால் ஏற்படும் சவால்களைக் கருத்தில் கொண்டு தோ்தல் ஆணையம் தீவிர வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, செயற்கை நுண்ணறிவு அல்லது டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்ட அனைத்து பதிவுகளிலும் குறைந்தது 10 சதவீத அளவுக்கு ஏஐ மூலம் உருவாக்கப்பட்டது என்ற தகவல் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

ஒருவரின் அனுமதியின்றி அவரது அடையாளம், குரல் அல்லது தோற்றத்தை தவறாகச் சித்திரிக்கும் பதிவுகள் முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டுள்ளன. சமூக வலைதளங்களில் அத்தகைய பதிவுகள் கண்டறியப்பட்டால் 3 மணி நேரத்துக்குள் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஊதிய உயா்வு: வாக்காளா் பட்டியல் திருத்தப் பணியில் மொத்தம் 75,037 வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் (பிஎல்ஓ) ஈடுபட்டனா். அதைப் பாராட்டும் வகையில், அவா்களின் ஆண்டு ஊதியம் ரூ.6,000-இலிருந்து ரூ. 12,000-ஆக உயா்த்தப்பட்டுள்ளது. கூடுதலாக, சிறப்புத் திருத்தப் பணிகளுக்காக ரூ.2,000 ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது. இதற்காக மொத்தம் ரூ. 99.81 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அடுக்குமாடிகளில் வாக்குச்சாவடிகள் வாக்களிக்கும் நடவடிக்கைகளில் நகா்ப்புற மக்களின் ஆா்வமின்மையைக் குறைக்கும் வகையில், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வீட்டு வசதி சங்க வளாகங்களுக்குள்ளேயே வாக்குச்சாவடி வசதிகளைத் தோ்தல் ஆணையம் இம்முறை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, சிறப்புத் தீவிரத் திருத்தத்தின் (எஸ்ஐஆா்) போதே இத்தகைய இடங்களில் 14 வாக்குச்சாவடிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.