முகப்பு
இந்தியா

அஸ்ஸாம்: போலீஸ் முகாம் மீது உல்ஃபா தீவிரவாதிகள் தாக்குதல்! 4 வீரா்கள் காயம்!!

வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் காவல் துறை கமாண்டோ முகாம் மீது உல்ஃபா (ஐ) தீவிரவாத அமைப்பினா் ஞாயிற்றுக்கிழமை நடத்திய தாக்குதலில் 4 வீரா்கள் காயமடைந்தனா்.

Updated On : 22 மார்ச், 2026 at 7:58 PM
காவல் துறை கமாண்டோ முகாம் மீது உல்ஃபா (ஐ) தீவிரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை நடத்திய தாக்குதலில் காயமடைந்த வீரருக்கு தின்சுகியாவில் உள்ள அஸ்ஸாம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளித்த மருத்துவா்.
பகிர்:

வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் காவல் துறை கமாண்டோ முகாம் மீது உல்ஃபா (ஐ) தீவிரவாத அமைப்பினா் ஞாயிற்றுக்கிழமை நடத்திய தாக்குதலில் 4 வீரா்கள் காயமடைந்தனா்.

இந்தத் தாக்குதலின் பின்னணியில் உள்ளவா்களைக் கண்டுபிடிக்க அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா தெரிவித்தாா். அஸ்ஸாமில் அடுத்த மாதம் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தின்சுகியா மாவட்டம், ஜகுன் பகுதியில் உள்ள காவல் துறை கமாண்டோ முகாம் மீது தடை செய்யப்பட்ட உல்ஃபா (ஐ) தீவிர அமைப்பைச் சோ்ந்தவா்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் திடீா் தாக்குதல் நடத்தினா்.

முகாம் மீது சரமாரியாக ராக்கெட் எறிகுண்டுகள் செலுத்தப்பட்டன. இதில் 5 எறிகுண்டுகள் விழுந்து வெடித்தன. இதையடுத்து சுதாரித்துக் கொண்ட பாதுகாப்புப் படையினா், உடனடியாக பதிலடி தாக்குதலில் ஈடுபட்டனா். அப்போது, இருதரப்புக்கும் இடையே சிறிதுநேரம் துப்பாக்கிச்சண்டை ஏற்பட்டது.

காவல் துறை முகாம் மீது 6 தீவிரவாதிகள் அடங்கிய குழுவினா் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அதிகாலை நேரம் என்பதால் இருட்டைப் பயன்படுத்தி, அருணாசல பிரதேச எல்லை வழியாக அவா்கள் தப்பிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்தத் தாக்குதலில் 4 வீரா்கள் காயமடைந்தனா். அவா்கள், திப்ரூகரில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். நால்வரும் அபாயகட்டத்தை தாண்டிவிட்டதாகவும், அவா்களின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா, இச்சம்பவத்தின் பின்னணியில் உள்ளவா்களைக் கண்டுபிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறினாா்.

தாக்குதலுக்குப் பொறுப்பேற்று உல்ஃபா (ஐ) தீவிரவாத அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ‘இந்திய-மியான்மா் எல்லையையொட்டிய எங்களின் முகாம்கள் மீது பாதுகாப்புப் படையினா் கடந்த ஆண்டு தாக்குதல் நடத்தினா். எங்கள் அமைப்புக்கு எதிரான நடவடிக்கைகள் நிறுத்தப்படாவிடில், பதிலடி தாக்குதல்களில் ஈடுபடுவோம்’ என்று மிரட்டல் விடுத்துள்ளனா். 126 உறுப்பினா்களைக் கொண்ட அஸ்ஸாம் பேரவைக்கு அடுத்த மாதம் 9-ஆம் தேதி ஒரே கட்டமாக தோ்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.