கேரளம் 2026: "ஹாட்ரிக் அடிப்பாரா' பினராயி?
மொத்தம் 140 தொகுதிகளைக் கொண்ட கேரள சட்டப்பேரவைக்கு ஏப்.9-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
ம.ஆ. பரணிதரன்
மொத்தம் 140 தொகுதிகளைக் கொண்ட கேரள சட்டப்பேரவைக்கு ஏப்.9-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில், ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்), மாநிலத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் நம்பிக்கையுடன் தேர்தல் களத்தை எதிர்கொள்கிறது.
அங்கு ஆளும் கட்சி, தனது வெற்றிக்காக கடந்த 10 ஆண்டு நிர்வாக நடவடிக்கைகள், செயல்படுத்திய நலத் திட்டங்கள் மற்றும் கேரளம் முழுவதும் பரவியுள்ள வலுவான கட்சி அமைப்பு ஆகியவற்றைப் பெரிதும் சார்ந்திருக்கிறது.
கடந்த பத்து ஆண்டுகால ஆட்சியில், உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களான விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகம், கொச்சி மெட்ரோ மற்றும் கொச்சி வாட்டர் மெட்ரோ போன்ற முக்கியத் திட்டங்கள், நவீனமயமாக்கல் திட்டங்கள் போன்வற்றை தனது நல்லாட்சிக்கான அடையாளங்களாக சித்தரித்து வாக்கு வேட்டையில் ஆளும் கட்சி ஈடுபட்டுள்ளது.
பலவீனம்: ஆளும் கட்சியின் பலவீனங்களில் முக்கியமானதாக சபரிமலை தங்கத்தகடு மோசடி வழக்கைக் குறிப்பிடலாம். இந்த வழக்கின் விசாரணை வளையத்துக்குள் சில மூத்த தலைவர்கள் இருப்பது சாமானியர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இரண்டாவதாக, ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி, தற்போது உள்கட்சி அதிருப்தி மற்றும் கட்சித் தாவல் போன்ற சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது. சில தொண்டர்களும் உள்ளூர் தலைவர்களும் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியில் தொடர்ந்து சேர்ந்து வருவது குறிப்பிடத்தக்க பலவீனமாகப் பார்க்கப்படுகிறது.
சிக்கல்கள்: "பிஎம் ஸ்ரீ' திட்டம், புதிய தொழிலாளர் சட்ட அமலாக்கம் மற்றும் பாலக்காட்டில் அமையவுள்ள மதுபான ஆலை திட்டத்துக்கு ஒப்புதல் போன்ற விவகாரங்களில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையே நிலவும் கருத்து வேறுபாடுகள், இக்கூட்டணியின் தேர்தல் வெற்றிக்கான வாய்ப்புகளைப் பாதிக்கக்கூடும் என கருதப்படுகிறது.
கேரள சட்டப்பேரவைத் தேர்தல், இம்முறை காங்கிரஸýக்கும் பெரும் சவாலாக அமைந்துள்ளது. காரணம், அக்கட்சியின் மூன்று முக்கியத் தலைவர்களான ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் கட்சியின் பொதுச்செயலர் கே.சி. வேணுகோபால் ஆகியோரின் நற்பெயரும், கெளரவமும் கேரளத் தேர்தல் முடிவுகளுடன் பிணைக்கப்பட்டுள்ளன.
ராகுலும் கேரளத்திலிருந்து தேர்தெடுக்கப்பட்ட எம்.பி.யான பிரியங்காவும் தொடர்ந்து மாநிலத்துக்குப் பயணம் மேற்கொண்டு, களத்தில் ஓர் உத்வேகத்தை உருவாக்கவும், அரசியல் சூழலைத் தங்களுக்குச் சாதகமாக வடிவமைக்கவும் வியூகங்களை வகுத்து வருகின்றனர்.
"கேரளத்தில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஏற்கெனவே தொடர்ந்து இரண்டு சட்டப்பேரவைத் தேர்தல்களில் தோல்வியைச் சந்தித்தது. இம்முறையும் காங்கிரஸôல் வெற்றியை ஈட்ட முடியாவிட்டால், அக்கட்சி கடுமையான நெருக்கடியைச் சந்திக்க நேரிடும்' என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
இதேபோல, சபரிமலை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்படுவதை, தேர்தலில் முக்கிய அரசியல் பிரச்னையாக்க இடதுசாரி கட்சிகளும், பாஜகவும் திட்டமிட்டு அதனதன் தளங்களில் பரப்புரை செய்து வருகின்றன.
பாஜக வியூகம்: காங்கிரஸுக்கும் இடதுசாரிகள் கூட்டணிக்கும் எதிராக கேரளத்தில் தனது அரசியல் ஆதிக்கத்தை வலுப்படுத்திக்கொள்ளும் முயற்சிகளில் பாஜக முழு வீச்சில் ஈடுபட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அந்த மாநிலத்துக்கு அண்மையில் மூன்று முறை பயணம் மேற்கொண்டது கவனிக்கத்தக்கது.
இந்தத் தேர்தலில் பாஜக தீவிரமாகப் போட்டியிடும் விதம், காங்கிரஸில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும், புதிய வக்ஃப் மசோதா அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, கிறிஸ்தவ சமூகத்தின் சார்புநிலை பாஜக பக்கம் குறிப்பிடத்தக்க அளவில் மாறியுள்ளதும் கவனிக்கத்தக்கது.
இந்தக் காரணிகள் அனைத்தும் ஒன்றுசேர்ந்து, எதிர்வரும் தேர்தலில் காங்கிரஸ் எதிர்கொள்ளக்கூடிய சாத்தியமான சிக்கல்களுக்கு வழிவகுத்துள்ளன.
கேரளத்தில் மொத்தமுள்ள 140 தொகுதிகளில், 2011, 2016, 2021 ஆகிய ஆண்டுகளில் நடந்த மூன்று தேர்தல்களிலும் 51 தொகுதிகள் இடது ஜனநாயக முன்னணியிடமே இருந்துள்ளன. இவற்றில், 39 தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கணிசமான செல்வாக்கைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் 12 தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலுவுடன் உள்ளது.
மறுபுறம், ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு (யுடிஎஃப்) 28 உறுதியான இடங்கள் உள்ளன; முஸ்லிம் லீக்கின் பங்கு 16}ஆகவும், காங்கிரஸின் பங்கு 12-ஆகவும் உள்ளது. கேரள காங்கிரஸ் தொடர்ந்து வென்ற சில இடங்கள் இருந்தாலும், பிளவுகளும் அதைத் தொடர்ந்த உறுப்பினர்கள் சிலரது கட்சித் தாவல்களும் அதன் தற்போதைய ஆதரவுத் தளத்தை மதிப்பிடுவதை சிக்கலாக்கியுள்ளது.
சுமார் வலுவான 51 இடங்களைத் தன்வசம் கொண்டுள்ள இடதுசாரி ஜனநாயக முன்னணி, சாதகமான நிலையில் உள்ளது. அதே சமயம் ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு வெற்றி கடினமாகவே இருக்கிறது. வெளிப்புறக் காரணிகளைப் பொருட்படுத்தாமல், கணிசமான பகுதிகளில் இடதுசாரிகளுக்கு உறுதியான வாக்கு வங்கி உள்ளது என்று இந்தத் தரவுகளைத் தொகுத்த "வோட்வைப்' என்ற ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு நிறுவனத்தின் அரசியல் வியூக நிபுணர் அமிதாப் திவாரி கூறுகிறார்.
குறிப்பிடத்தக்க வகையில், இடதுசாரிகளின் பெரும்பாலான கோட்டைகள் கண்ணூர், ஆலப்புழை மற்றும் அப்பிரதேசங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் அமைந்துள்ளன. மறுபுறம், முஸ்லிம் லீகின் வலுவான இடங்கள் மலபார் பகுதியில் உள்ளன. காங்கிரஸின் கோட்டைகள் மத்திய கேரளத்தில் குவிந்துள்ளன.
வியப்புக்குரிய வகையில், தெற்கில் உள்ள பெரும்பாலான இடங்களில் எந்த முன்னணிக்கோ அல்லது கட்சிக்கோ நிலையான ஆதரவு இல்லை. அந்த வகையில், கேரளத்தை எந்த முன்னணி ஆட்சி செய்ய வேண்டும் என்பதை பெரும்பாலும் தெற்கு கேரளமே இந்த முறை தீர்மானிக்கப்போகிறது.
மூன்று முன்னணிகள் போட்டியிடும் தொகுதிகள்
இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்)
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 75
இந்திய கம்யூனிஸ்ட் 24
கேரள காங்கிரஸ் (எம்) 12
தேசியவாத காங்கிரஸ்
(சரத் பவார்) 3
இந்திய சோஷலிஸ
ஜனதா தளம் 3
ராஷ்ட்ரீய ஜனதா தளம் 3
ஐஎன்எல் 2
கேரள காங்கிரஸ் (பி) 1
கேரள காங்கிரஸ் (எஸ்) 1
கேரள காங்கிரஸ் (பி) 1
ஆர்எஸ்பி (எல்) 1
சுயேச்சைகள் 14
ஐக்கிய ஜனநாயகக் முன்னணி (யுடிஎஃப்)
காங்கிரஸ் 92
ஐயுஎம்எல் 27
கேரள காங்கிரஸ் (ஜோசஃப்) 8
ஆர்எஸ்பி 4
கேரள ஜனநாயக கட்சி (கேடிபி) 1
புரட்சிகர மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சி (ஆர்எம்பிஐ) 1
கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி (சிஎம்பி) 1
திரிணமூல் காங்கிரஸ் 1
கேரள காங்கிரஸ் ஜேக்கப் 1
சுயேச்சைகள் 4
தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ)
பாஜக (பாஜக) 99
பாரத தர்ம ஜன சேனா (பிடிஜேஎஸ்) 22
ட்வென்டி ட்வென்டி 19
2021 தேர்தல் முடிவுகள்
எல்டிஎஃப் 99
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 62
இந்திய கம்யூனிஸ்ட் 17
கேசி (எம்) 5
ஜேடி (எஎஸ்) 2
என்சிபி 2
ஐஎன்எல் 1
எல்ஜேடி 1
என்எஸ்சி 1
கேசி (பி) 1
காங்கிரஸ் (எஸ்) 1
ஜேகேசி 1
சுயேச்சைகள் 5
யுடிஎஃப் 41
காங்கிரஸ் 21
ஐயுஎம்எல் 15
கேசி 2
கேசி (ஜே) 1
ஆர்எம்பிஐ 1
சுயேச்சைகள் 1
வாக்குகள் சதவீதம்
எல்டிஎஃப்
45.4
யுடிஎஃப்
39.5
என்டிஏ
12.4
பிற
2.69