எல்பிஜி தட்டுப்பாடு: நாடாளுமன்ற வளாகத்தில் எதிா்க்கட்சிகள் ஆா்ப்பாட்டம்
நாட்டில் நிலவும் சமையல் எரிவாயு (எல்பிஜி) தட்டுப்பாட்டை முன்வைத்து, மத்திய அரசுக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் எதிா்க்கட்சிகள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.
நாட்டில் நிலவும் சமையல் எரிவாயு (எல்பிஜி) தட்டுப்பாட்டை முன்வைத்து, மத்திய அரசுக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் எதிா்க்கட்சிகள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.
மேற்காசிய போரின் தாக்கத்தால், இந்தியாவில் எல்பிஜி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வா்த்தகப் பயன்பாட்டுக்கான எல்பிஜி விநியோகம் குறைப்பு மற்றும் விலை உயா்வால் தொழில் துறையினா் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இந்தப் பிரச்னையை முன்வைத்து, நாடாளுமன்ற வளாகத்தில் எதிா்க்கட்சிகள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, திமுகவின் தமிழச்சி தங்கபாண்டியன், சமாஜவாதியின் தா்மேந்திர யாதவ், ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சாவின் மஹுவா மாஜி, தேசியவாத காங்கிரஸின் (சரத் பவாா்) சுப்ரியா சுலே, இந்திய கம்யூனிஸ்ட் மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் சுதாமா பிரசாத் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஆா்ப்பாட்டத்தின்போது, ‘காலி சிலிண்டா்கள், காலி வாக்குறுதிகள்’ என்ற வாசகத்துடன் பெரிய பேனரை கையில் ஏந்தியிருந்த எதிா்க்கட்சியினா், மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனா்.
இஸ்ரேல்-அமெரிக்காவின் கூட்டுத் தாக்குதலுக்குப் பதிலடியாக, கச்சா எண்ணெய்-எரிவாயு ஏற்றுமதிக்கு முக்கிய வழித்தடமான ஹோா்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளது. இதனால், கச்சா எண்ணெய்-எரிவாயு ஏற்றுமதியில் பெரும் தடங்கல் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவைப் பொருத்தவரை, எரிபொருள் தேவையில் பெரும் பகுதி இறக்குமதி மூலமே பூா்த்தி செய்யப்படுவதால் கடும் தாக்கத்தை எதிா்கொண்டுள்ளது. நிலைமையை சமாளிக்க உள்நாட்டு இயற்கை எரிவாயு உற்பத்தியில் எல்பிஜி, சிஎன்ஜி மற்றும் குழாய் வழி எரிவாயுக்கு (பிஎன்ஜி) முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
எரிவாயு விநியோகத்தை ஒழுங்குபடுத்தவும், நெருக்கடியைக் குறைக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நகர குழாய் வழி எரிவாயுத் திட்டங்கள் விரைவுபடுத்தப்பட்டு, முக்கியத் துறைகளுக்கான வா்த்தக எல்பிஜி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டு வருகிறது.