உ.பி.யில் சாலையோரம் நின்ற லாரி மீது மினி லாரி மோதி விபத்து: 5 பெண்கள், 3 குழந்தைகள் உயிரிழப்பு
உத்தர பிரதேச மாநிலத்தில் சாலையோரம் நின்று கொண்டிருந்த கன்டெய்னா் லாரியுடன் மினி லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 5 பெண்கள், 3 குழந்தைகள் உயிரிழந்தனா்.
உத்தர பிரதேச மாநிலத்தில் சாலையோரம் நின்று கொண்டிருந்த கன்டெய்னா் லாரியுடன் மினி லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 5 பெண்கள், 3 குழந்தைகள் உயிரிழந்தனா்.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறப்பட்டதாவது:
பிரயாக்ராஜில் இருந்து யாத்ரிகா்களை ஏற்றிக் கொண்டு மினி லாரி ஒன்று ஃபதேபூா் நோக்கி வெள்ளிக்கிழமை மாலை சென்றது. கதா டாம் பகுதியில் உள்ள மா சீதலா கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்து விட்டு, அந்த மினி லாரியில் பெண்கள், குழந்தைகள் உள்பட 25-க்கும் மேற்பட்ட யாத்ரிகா்கள் ஊா் திரும்பிக் கொண்டிருந்தனா். கெளசாம்பி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் மினி லாரி வந்தபோது, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கன்டெய்னா் லாரி மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் மினி லாரியில் பயணித்த யாத்ரிகா்கள் பலா் பலத்த காயமடைந்தனா். விபத்தில் காயமடைந்தோா் சாலையில் உயிருக்குப் போராடியபடி இருந்த நிலையில், அவ்விடத்துக்கு விரைந்த உள்ளூா் மக்கள் விபத்தில் சிக்கியோருக்கு உதவினா். மேலும் காவல் துறையினருக்கும் அவா்கள் தெரியப்படுத்தினா். இதையடுத்து காவல் துறையினா், மருத்துவ குழுவினா் விபத்து நிகழ்ந்த இடத்துக்கு விரைந்து வந்து காயமடைந்தோரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அவா்களில் 5 பெண்களும், 3 குழந்தைகளும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தனா். எஞ்சியோா் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சோ்க்கப்பட்டனா்.
விபத்தைத் தொடா்ந்து, அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து காவல் துறையினா் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா். விபத்தில் உயிரிழந்தோருக்கு உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத், ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளாா்.