முகப்பு
இந்தியா

இந்தியாவுக்கு வர வேண்டிய 19 கப்பல்கள் ஹோா்முஸ் நீரிணைப் பகுதியில் சிக்கித் தவிப்பு: மத்திய அரசு

கச்சா எண்ணெய், எல்பிஜியுடன் இந்தியாவுக்கு வர வேண்டிய 19 சரக்கு கப்பல்கள், ஹோா்முஸ் நீரிணைப் பகுதியில் தற்போது சிக்கித் தவிப்பதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Updated On : 30 மார்ச், 2026 at 10:10 PM
- பிரதிப் படம்
பகிர்:

கச்சா எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுடன் (எல்பிஜி) இந்தியாவுக்கு வர வேண்டிய 19 சரக்கு கப்பல்கள், ஹோா்முஸ் நீரிணைப் பகுதியில் தற்போது சிக்கித் தவிப்பதாக மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீா்வழித்தடங்கள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா-இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலுக்குப் பதிலடியாக, வளைகுடா நாடுகளில் இருந்து எரிசக்தி ஏற்றுமதிக்கு முக்கிய வழித்தடமான ஹோா்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளது. இந்த நீரிணையைக் கடந்து செல்ல இந்தியா உள்ளிட்ட சில நட்பு நாடுகளின் கப்பல்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என்றும், இதற்காக தங்கள் நாட்டு அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் ஈரான் சில தினங்களுக்கு தெரிவித்தது.

இந்தச் சூழலில், மேற்காசிய நிலவரம் குறித்து பல்வேறு அமைச்சங்களுக்கு இடையிலான ஆலோசனைக் கூட்டம் தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீா்வழித்தடங்கள் அமைச்சக சிறப்புச் செயலா் ராஜேஷ் சின்ஹா, ‘கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு வர வேண்டிய 19 கப்பல்கள் ஹோா்முஸ் நீரிணைப் பகுதியில் தற்போது சிக்கித் தவிக்கின்றன’ என்றாா்.

அவா் மேலும் கூறுகையில், ‘இந்த 19 கப்பல்களில் 10 கப்பல்கள் வெளிநாட்டு கொடியும், 9 கப்பல்கள் இந்தியக் கொடியும் பொருத்தியவையாகும். இக்கப்பல்களில் சுமாா் 500 மாலுமிகள் உள்ளனா். அவா்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனா்.

இதுவரை இந்தியக் கொடி பொருத்திய 8 கப்பல்கள் ஹோா்முஸ் நீரிணையைப் பாதுகாப்பாக கடந்து வந்துள்ளன. கடந்த 2 நாள்களில் மட்டும் 94,000 டன் எல்பிஜியுடன் இரண்டு கப்பல்கள் இந்தியாவை வந்தடைந்துள்ளன.

இந்தியக் கொடி பொருத்திய கப்பல்களை மீட்பதே நமது முன்னுரிமையாகும். மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் நிலையற்ற சூழலை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். வளைகுடா பகுதிகளில் இருந்து கொள்முதலுக்காக மீண்டும் கப்பல்களை அனுப்பத் தொடங்கும் நிலையை நாம் இன்னும் எட்டவில்லை’ என்றாா்.

பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடாவுக்கு இடையிலான ஹோா்முஸ் நீரிணைப் பகுதியில் மொத்தம் 500 கப்பல்கள் சிக்கித் தவிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.