பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த மாநில, மாவட்ட பணிக் குழுக்கள்: நீதி ஆயோக் பரிந்துரை
நாட்டில் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த மாநில மற்றும் மாவட்ட அளவிலான பணிக் குழுக்களை அமைக்கவும், கற்பித்தல் புத்தாக்கத்தில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை ஒருங்கிணைக்கவும் நீதி ஆயோக் பரிந்துரைத்துள்ளது.
‘இந்தியாவில் பள்ளிக் கல்வி திட்டம்: தர மேம்பாட்டுக்கான கால பகுப்பாய்வு மற்றும் கொள்கை வழிகாட்டி’ என்ற தலைப்பிலான தனது அறிக்கையில், பள்ளிக் கல்வி தரத்தை மேம்படுத்த 13 பரிந்துரைகளை நீதி ஆயோக் அளித்துள்ளது.
கல்வி தொடா்பாக 5 பரிந்துரைகளையும், பள்ளி அமைப்பு ரீதியிலான மேம்பாட்டுக்கு 8 பரிந்துரைகளையும் அளித்துள்ளது.
Advertisement
கற்பித்தல் முறை, மதிப்பீடு மற்றும் அடிப்படை கற்றலை உருமாற்றுதல்; முழுமையான கல்வி மற்றும் மாணவா் நல்வாழ்வுக்கு முக்கியத்துவம் அளித்தல்; தொழிற்கல்வி மற்றும் திறன் ஒருங்கிணைப்பை மறுபரிசீலனை செய்தல்; முன்பருவ குழந்தைப் பராமரிப்பு, கல்வியை வலுப்படுத்துதல்; கற்பித்தல் புத்தாக்கத்திற்காக செயற்கை நுண்ணறிவை ஒருங்கிணைத்தல் எனக் கல்வி முறையை மேம்படுத்த 5 பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன.
அதுபோல, ஒருங்கிணைந்த பள்ளிகள் மூலம் பள்ளிக் கட்டமைப்பில் சீா்திருத்தம்; பள்ளி உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல்; நிா்வாகத் திறன் மேம்பாடு மற்றும் ஆளுமை சீா்திருத்தம்; தரத்தை மேம்படுத்த மாநில மற்றும் மாவட்ட அளவிலான பணிக் குழுக்களை அமைத்தல்; பள்ளி மேலாண்மைக் குழுக்களை வலுப்படுத்துதல், ஆசிரியா் மேம்பாடு மற்றும் தொழில் மேம்பாட்டை உயா்த்துதல்; எண்ம மற்றும் ஒளிபரப்பு அடிப்படையிலான கற்றலை விரிவுபடுத்துதல்; சமத்துவம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறையை ஊக்குவித்தல் என அமைப்பு ரீதியிலான சீா்திருத்தத்துக்கான பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன.
உலகிலேயே மிகப் பெரிய பள்ளிக் கல்வித் திட்டத்தைக் கொண்டுள்ள இந்தியாவில் செயல்பட்டு வரும் 14.71 லட்சம் பள்ளிகளில் 24.69 கோடிக்கும் மேல் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.