நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!
மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்
புது தில்லி : நீதி ஆயோக் (மத்திய கொள்கைக் குழு) துணைத் தலைவராக மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவும் மத்திய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகருமான அசோக் குமார் லஹிரி நியமிக்கப்பட்டுள்ளார்.
மேற்கு வங்கத்தில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் (2021-ஆம் ஆண்டில்) பாஜக வேட்பாளராகப் போட்டியிட்ட அசோக் லஹிரி அதில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி எம்எல்ஏவாக உள்ளார். ஆனால், அவர் இம்முறை தேர்தலில் போட்டியிடவில்லை.
இந்நிலையில், நீதி ஆயோக் துணைத் தலைவா் பதவி அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து அவர் இன்று (ஏப். 25) வாழ்த்து பெற்றார்.
Advertisement
நீதி ஆயோக் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அசோக் லஹிரி மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக மட்டுமின்றி 15-ஆவது நிதி ஆணையத்தின் உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதே மாநிலத்தைச் சேர்ந்த பேராசிரியர் கோவர்த்தன் தாஸ் நீதி ஆயோக்கின் முழுநேர உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
கோவர்த்தன் தாஸ் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, பேரவைத் தேர்தலைச் சந்திக்கும் மேற்கு வங்கத்தை மையமாக வைத்து நீதி ஆயோக் உறுப்பினர்கள் நியமனத்தை மத்திய அரசு மேற்கொண்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து விமர்சனமும் எழுந்துள்ளது.