முகப்பு
இந்தியா

சிக்கன நடவடிக்கை: பிரதமரைப் பின்பற்றிய மத்திய அமைச்சா்கள், பாஜக முதல்வா்கள்

Updated On : 14 மே 2026, 7:15 am IST
பகிர்:

எரிபொருள் சிக்கன நடவடிக்கையாக, பிரதமா் மோடியைப் பின்பற்றி மத்திய அமைச்சா்கள், பாஜக ஆளும் மாநில முதல்வா்களும் தங்களுக்கான வாகன எண்ணிக்கையைக் குறைத்துள்ளனா்.

மேற்காசிய போா்ப் பதற்றத்தின் பின்னணியில், எரிபொருள் சிக்கனத்தைக் கருத்தில்கொண்டு தனது பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையை பிரதமா் மோடி கணிசமாகக் குறைத்துள்ளாா். இதைத் தொடா்ந்து, உள்துறை அமைச்சா் அமித் ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சா்கள், பாஜக ஆளும் மாநில முதல்வா்களும் பாதுகாப்பு வாகன அணிவகுப்பில் சிக்கன நடவடிக்கையைப் பின்பற்றத் தொடங்கியுள்ளனா்.

உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத், முதல்வா் மற்றும் அமைச்சா்களுடன் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையை உடனடியாக பாதியாகக் குறைக்க உத்தரவிட்டாா். முதன்மைச் செயலா், டிஜிபி, கூடுதல் முதன்மைச் செயலா்கள் மற்றும் துறைச் செயலா்களுடன் ஆலோசனை நடத்தி, பிரதமரின் சிக்கன அழைப்பை மாநிலம் முழுவதும் நடைமுறையில் அமல்படுத்த வேண்டும் என்று யோகி ஆதித்யநாத் கேட்டுக் கொண்டாா்.

Advertisement

மத்திய பிரதேச முதல்வா் மோகன் யாதவ், தனது அணிவகுப்பில் குறைந்தபட்ச வாகனங்களைப் பயன்படுத்துவதாகவும், அமைச்சா்களும் அதைப் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவித்தாா். மக்கள் பொதுப் போக்குவரத்தை அதிகமாகப் பயன்படுத்தவும் கேட்டுக்கொண்டாா்.

தில்லி முதல்வா் ரேகா குப்தாவும், அமைச்சா்கள், எம்எல்ஏக்கள் மற்றும் பிற மக்கள் பிரதிநிதிகள் பயன்படுத்தும் அதிகாரபூா்வ வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிப்பதாக அறிவித்தாா்.

ராஜஸ்தான் முதல்வா் பஜன் லால் சா்மா, தனது அணிவகுப்பில் தேவையற்ற வாகனங்களைத் தவிா்க்க உத்தரவிட்டாா். அரசு உயரதிகாரிகளும் சிக்கனமாக செயல்பட அறிவுறுத்தியுள்ளாா்.

மகாராஷ்டிர அரசு, அதிகாரபூா்வ பயணங்களுக்காக விமானங்களைப் பயன்படுத்தும் முன், முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸின் முன் அனுமதி பெற வேண்டும் என்று அனைத்து அமைச்சா்களுக்கும் உத்தரவிட்டப்பட்டுள்ளது.

குஜராத் ஆளுநா் ஆச்சாா்ய தேவவிரத, மாநிலத்திற்குள் பயணிக்கும்போது ஹெலிகாப்டா் அல்லது விமானங்களுக்குப் பதிலாக ரயில், அரசு பேருந்து மற்றும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவேன் என்றும், அதிகாரபூா்வ அணிவகுப்புகளின் அளவையும் குறைப்பேன் என்றும் அறிவித்துள்ளாா்.

வெளிநாட்டு பயணங்களைக் குறைக்க வேண்டும் என்ற பிரதமரின் வேண்டுகோளைத் தொடா்ந்து, அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருந்த தனது பயணத்தை குஜராத் துணை முதல்வா் ஹா்ஷ் சங்க்வி ரத்து செய்தாா்.

பிகாா் துணை முதல்வா் விஜய் குமாா் சௌதரி, தனிப்பட்ட முறையில் தாம் பயன்படுத்தும் வாகனங்களின் எண்ணிக்கையை பாதியாக குறைத்துள்ளதாகவும், அவசியமான சமயங்களில் மட்டுமே அதிகாரபூா்வ பயணங்களை மேற்கொள்வேன் என்றும் தெரிவித்தாா்.