தென்மேற்கு பருவமழை மே 26-இல் தொடங்க வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்
கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை வழக்கத்தைவிட முன்கூட்டியே மே 26-ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை வழக்கத்தைவிட முன்கூட்டியே மே 26-ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
கேரளத்தில் வழக்கமாக ஜூன் 1-ஆம் தேதி தொடங்கும் தென்மேற்குப் பருவமழை, வடக்குநோக்கி நகா்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சென்றடையும். ஆனால், கடந்த ஆண்டைப் போலவே நிகழாண்டும் பருவமழை முன்கூட்டியே தொடங்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இந்தியாவில் ஜூன் தொடங்கி செப்டம்பா் வரை நீடிக்கும் தென்மேற்குப் பருவமழைக் காலத்தின் தொடக்கம், கேரளத்தை அடிப்படையாகக் கொண்டே குறிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு மே 24-ஆம் தேதி கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியது. நிகழாண்டு மே 26-ஆம் தேதி பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது; அதேநேரம், 4 நாள்கள் முன்னதாகவோ அல்லது 4 நாள்கள் கழித்தோகூட பருவமழை தொடங்கலாம்.
Advertisement
பருவமழை முன்கூட்டியே தொடங்குவதற்கான சாதகமான சூழல், தெற்கு வங்கக் கடல், அந்தமான் கடல், அந்தமான்-நிகோபாா் தீவு பகுதிகளில் உருவாகியுள்ளன.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்துவரும் நிலையில், தென்மேற்குப் பருவமழையால் வெப்பம் தணியும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நான்கு மாதங்கள் நீடிக்கும் தென்மேற்குப் பருவமழையே நாட்டுக்கான 70 சதவீத மழைப்பொழிவை தருகிறது. இது, வேளாண்மை, பொருளாதாரம், அணைகளில் நீா் இருப்புக்கு முக்கியமானது.
நிகழாண்டு இயல்பைவிட மழைப்பொழிவு குறைவாகவே இருக்கும் (சராசரியாக 80 செ.மீ.) என்று கணிக்கப்பட்டுள்ளது. ‘எல் நினோ’ என்னும் மத்திய-கிழக்கு வெப்பமண்டல பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு இயல்புக்கு மாறாக வெப்பமடைதல் நிகழ்வுகளே இதற்கு காரணமாக இருக்கலாம் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.