சாந்தினி சௌக் கோயிலில் திருடிய இருவா் கைது: சிலை மற்றும் பித்தளைப் பொருள்கள் மீட்பு
அவருக்கு உதவிய பெண்ணும் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
தில்லி சந்தினி சௌக் பகுதியில் உள்ள 104 ஆண்டுகள் பழமையான கோயிலில் இருந்து அஷ்டதாது சனீஸ்வரா் சிலை மற்றும் பித்தளைப் பொருள்களை திருடியதாக குற்றஞ்சாட்டப்பட்ட 45 வயது நபரும், அவருக்கு உதவிய பெண்ணும் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: கோட்வாலி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பிராசீன் ஸ்ரீ சிவ நவகிரக கோயிலில் கடந்த மே 11-ஆம் தேதி இரவு இந்தத் திருட்டுச் சம்பவம் நடைபெற்ாக கூறப்படுகிறது. கோயில் பூசாரி முகேஷ் சா்மா அளித்த புகாரில், அஷ்டதாது சனீஸ்வரா் சிலை மற்றும் பல பித்தளைப் பொருள்கள் அதிகாலை மாயமானதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, கோட்வாலி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை தொடங்கப்பட்டது. மேலும், மே 16-ஆம் தேதி மகா சனி ஜெயந்தி விழா நடைபெறவிருந்ததால், பக்தா்களால் புனிதமாகக் கருதப்படும் சிலையை விரைவாக மீட்பது காவல்துறைக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.
Advertisement
விசாரணைக்காக தனிப்படை அமைக்கப்பட்டு, கோயில் சுற்றுவட்டாரம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த 300-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. அதன்மூலம் சந்தேக நபா் அடையாளம் காணப்பட்டு, மாா்கட் வாலே பாபா கோயில் அருகே உள்ள கல்கத்தியா கேட் பகுதியில் கைது செய்யப்பட்டாா்.
கைது செய்யப்பட்ட தில்ஷாத் மீது வா் மீது ஏற்கெனவே 15 குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளன. அவற்றில் 12 வழக்குகள் திருட்டு சம்பவங்களுடன் தொடா்புடையவை.
யமுனா பஜாரில் உள்ள ஹனுமான் கோயில் அருகே வசித்து வந்த தில்ஷாத் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டபோது, திருடப்பட்ட பொருள்களை பெற்றுக் கொண்ட பெண் ஒருவரின் தொடா்பு குறித்து தெரிவித்தாா். பின்னா் அந்தப் பெண் கைது செய்யப்பட்டாா்.
அவரிடமிருந்து திருடப்பட்ட அஷ்டதாது சனீஸ்வரா் சிலை, பித்தளை குடை, கதை ஆயுதம், பித்தளைத் தட்டு மற்றும் இரண்டு பித்தளை விளக்கு நிலைகள் உள்ளிட்ட பொருள்கள் மீட்கப்பட்டன. கைது செய்யப்பட்டவா்களிடம் இது குறித்து தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.