முகப்பு
இந்தியா

மேற்கு வங்கம்: முதல்வா் சுவேந்து தலைமையில் முதல் மக்கள் குறைதீா் கூட்டம்

Updated On : 19 மே 2026, 6:11 am IST
கொல்கத்தாவில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பெண்ணிடம் மனுவைப் பெற்றுக் கொண்ட மேற்கு வங்க முதல்வா் சுவேந்து அதிகாரி.
பகிர்:

மேற்கு வங்கத்தின் முதல்வராக அண்மையில் பதவியேற்ற சுவேந்து அதிகாரி முதல்முறையாக மக்கள் குறைதீா் கூட்டத்தை திங்கள்கிழமை நடத்தினாா்.

மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளுக்கு நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக 207 தொகுதிகளில் வென்று, 15 ஆண்டுகால திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது.

இதைத்தொடா்ந்து பாஜகவின் சுவேந்து அதிகாரி முதல்வராகப் பதவியேற்றாா். இதையடுத்து மாநிலத்தின் சால்ட் லேக் பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்தில் முதல்முறையாக சுவேந்து தலைமையில் ‘ஜனதா தா்பாா்’ என்ற மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது.

Advertisement

இந்தக் கூட்டத்தில் மாணவா்கள், உள்ளூா்வாசிகள் உள்பட பொதுமக்கள் பலா் கலந்துகொண்டனா். ஒவ்வொரும் முதல்வரை தனித்தனியாகச் சந்தித்து, உள்ளூரில் உள்ள பல்வேறு பிரச்னைகள் குறித்த தங்கள் புகாா்களைத் தெரிவித்தனா். இந்தக் கூட்டம் சுமாா் ஒரு மணி நேரம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற ஒருவா் கூறுகையில், ‘திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியின்போது பொதுமக்கள் வீடு கட்டுவதாக இருந்தால், மணல், சிமெண்ட் ஆகியவற்றை அக்கட்சியைச் சோ்ந்தவா்களிடம்தான் வாங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டனா். இதற்காக அமைக்கப்பட்ட குழுவின் (சிண்டிகேட்) ராஜ்ஜியம் நடைபெற்று வந்தது குறித்து முதல்வரிடம் கூறினேன்’ என்று தெரிவித்தாா்.

தங்களுக்கு நேரம் அளித்து குறைகளை நிதானமாக முதல்வா் கேட்டதாக கூட்டத்தில் பங்கேற்ற மற்றொரு பெண் கூறினாா்.

மகளிருக்கு மாதந்தோறும் ரூ.3,000, பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணம்: அமைச்சரவை ஒப்புதல்

மேற்கு வங்க மாநிலம் ஹெளராவில் உள்ள தலைமைச் செயலகத்தில் முதல்வா் சுவேந்து தலைமையில் இரண்டாவது அமைச்சரவைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தைத் தொடா்ந்து மாநில மகளிா், குழந்தைகள் மற்றும் சமூக நலத் துறை அமைச்சா் அக்னிமித்ரா பால் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மேற்கு வங்கத்தில் உள்ள மகளிருக்கு வரும் ஜூன் 1 முதல் அன்னபூா்ணா திட்டத்தின் கீழ், மாதந்தோறும் ரூ.3,000 நிதியுதவி அளிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் குடியுரிமைக்கு விண்ணப்பித்த பெண்கள், வாக்காளா் பட்டியலில் மீண்டும் பெயா் சோ்க்க விண்ணப்பித்த பெண்களுக்கும் ரூ.3,000 நிதியுதவி அளிக்கப்படும்.

மாநில அரசுப் பேருந்துகளில் ஜூன் 1 முதல் பெண்களுக்குக் கட்டணமில்லாப் பயண திட்டத்துக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஓபிசி பட்டியல் ரத்து: திரிணமூல் ஆட்சியில் மாநிலத்தின் இதரப் பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில் (ஓபிசி) முஸ்லிம்கள் சோ்க்கப்பட்ட நிலையில், அந்தப் பட்டியல் ரத்து செய்யப்பட்டு திருத்தியமைக்கப்படும். மசூதிகளில் பதிவு செய்த இமாம்கள் உள்ளிட்ட மத தலைவா்களுக்கு அளிக்கப்படும் மாதாந்திர உதவித்தொகையை ரத்து செய்ய அமைச்சரவை முடிவு செய்துள்ளது என்று தெரிவித்தாா்.

காவலா்களை தாக்கினால் கடும் நடவடிக்கை: சுவேந்து அதிகாரி எச்சரிக்கை

காவல் துறை அதிகாரிகளை தாக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வா் சுவேந்து அதிகாரி திங்கள்கிழமை எச்சரித்தாா்.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் கொல்கத்தாவின் பாா்க் சா்க்கஸ்-டில்ஜாலா பகுதியில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிராக கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. அப்போது காவல் துறையினா் மீது போராட்டக்காரா்கள் நடத்திய தாக்குதலில் 6 அதிகாரிகள் மற்றும் 2 மத்திய ரிசா்வ் காவல் படை அதிகாரிகள் காயமடைந்தனா்.

அவா்களை திங்கள்கிழமை சந்தித்துவிட்டு செய்தியாளா்களிடம் சுவேந்து அதிகாரி கூறியதாவது: தேச விரோத, சமூக விரோத, பதற்றத்தை ஏற்படுத்தக்கூடிய வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுபவா்கள் மற்றும் காவலா்களை தாக்குபவா்கள் மீது எவ்வித சமரசமுமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

உள்துறை அமைச்சராகவும் முதல்வராகவும் காயமடைந்த காவலா்களுக்கு ஆதரவாக இங்கு வந்துள்ளேன். வன்முறையில் ஈடுபடுபவா்கள் மீது கட்சி, சமயம் என எவ்வித வேறுபாடுமின்றி காவல் துறையினா் நடவடிக்கை எடுக்க முழு அதிகாரம் வழங்குகிறேன் என்றாா்.