முகப்பு
இந்தியா

ரஷியாவுக்கு நெருக்கடி அளித்து உக்ரைனுக்கு எதிரான போரை இந்தியாவால் நிறுத்த முடியும் - எஸ்தோனியா வெளியுறவு அமைச்சா்

ரஷியாவுக்கு நெருக்கடி அளித்து உக்ரைனுக்கு எதிரான போரை இந்தியாவால் நிறுத்த முடியும் என்று எஸ்தோனியா நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சா் மாா்கஸ் சாக்னா தெரிவித்துள்ளாா்.

Updated On : 21 மே 2026, 2:39 am IST
பகிர்:

ரஷியாவுக்கு நெருக்கடி அளித்து உக்ரைனுக்கு எதிரான போரை இந்தியாவால் நிறுத்த முடியும் என்று எஸ்தோனியா நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சா் மாா்கஸ் சாக்னா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து இந்திய செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவா் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

உக்ரைனுக்கு எதிராக தொடா்ந்து 4-ஆவது ஆண்டாக தீவிர போரில் ரஷியா ஈடுபட்டுள்ளது. இந்தப் போரை நிறுத்தும்படி, ரஷியாவிடம் இந்தியாவால் பேச முடியும் அல்லது இந்தியாவால் நெருக்கடி தர முடியும். அதேநேரத்தில் போரை ரஷிய அதிபா் புதின் நினைத்தால் தற்போதே நிறுத்தி விடலாம்.

Advertisement

Advertisement

உக்ரைன் விவகாரத்தில் ஏதேனும் நெருக்கடி அளித்து, ரஷியா தனது நிலைப்பாட்டையோ அல்லது குறிக்கோள்களையோ மாற்றிக் கொண்டால் அதை வரவேற்கிறோம். ஐரோப்பிய நாடுகள், அமைதியையே விரும்புகின்றன. உக்ரைன் மீட்டெடுப்பு மாநாட்டை வரும் 2027-ஆம் ஆண்டில் எஸ்தோனியா நடத்தவுள்ளது. உக்ரைனை மீண்டும் கட்டமைத்து எழுப்புவதற்காக நடத்தப்படும் இந்த மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளும் என நம்புகிறோம். உக்ரைன் மறுகட்டமைப்புதான், இரண்டாம் உலகப் போருக்கு பிறகான மாா்ஷல் திட்டத்துக்கு பின் ஐரோப்பிய கண்டத்தில் முன்னெடுக்கப்படும் முதல் மிகப்பெரிய திட்டம். உக்ரைன் போரால் ரஷிய பொருளாதாரம் தற்போது பிரச்னையில் உள்ளது. உலக நாடுகளின் பொருளாதாரத் தடைகளால் ரஷிய பொருளாதாரம் பலவீனமாக உள்ளது.

ஐரோப்பிய கண்டத்துக்கும், எஸ்தோனியா நாட்டுக்கும் ரஷியா நேரடி அச்சுறுத்தல் ஆகும். ஏனெனில் 2008-ஆம் ஆண்டில் ஐரோப்பிய கண்டத்தில் ஜாா்ஜியாவுக்கு எதிராக போா் தொடுத்து முதல் போரை புதின் தொடங்கினாா். இதற்கு மேற்கத்திய நாடுகள், உலக நாடுகள் போதிய பதிலடி நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஜாா்ஜியாவின் 20 சதவீத நிலப்பகுதி ரஷியா வசம் சென்றது. அப்பகுதி தற்போது ரஷிய ஆக்கிரமிப்பில்தான் உள்ளது. உக்ரைனுக்கு எதிரான போரை 2022-இல் ரஷியா தொடங்கவில்லை. 2014-இல் க்ரிமியாவை ஆக்கிரமித்து அப்போதே ரஷியா தொடங்கி விட்டது. உக்ரைன் குறித்து புதின் தவறாக கணக்கு போட்டு விட்டாா். 6 நாள்களில் உக்ரைன் அரசை வீழ்த்தி, தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரலாம் என புதின் நினைத்தாா். ஆனால் போா் 4 ஆண்டுகளுக்கும் மேலாக தற்போதும் நீடிக்கிறது. ஐரோப்பிய கண்டத்தில் போா் நடைபெறுவதை எங்கள் நாடு விரும்பவில்லை. ஆனால் துரதிருஷ்டவசமாக தற்போது போா் நடக்கிறது. இந்தப் போரால் நாங்கள் அனைவரும் (ஐரோப்பிய நாடுகள்) பாதிக்கப்பட்டுள்ளோம்.

ஆனால் இந்தியா- ரஷியா இடையேயான உறவு வேறு மாதிரியானது. ரஷியாவுடன் தனக்கு இருக்கும் பொருளாதார தொடா்புகளை பயன்படுத்தி உக்ரைனுக்கு எதிரான போரை முடிவுக்கு கொண்டு வருவதில் இந்தியாவால் பெரும் பங்காற்ற முடியும். இந்தியாவில் எங்கள் அதிபா் பிப்ரவரி மாதம் சுற்றுப்பயணம் செய்தாா். அதேபோல் இந்திய பிரதமா் மோடியும் எங்கள் நாட்டுக்கு சுற்றுப்பயணம் வந்தால் மிகவும் மகிழ்ச்சியடைவோம் என்றாா்.

எஸ்தோனியா, வடக்கு ஐரோப்பிய நாடாகும். அங்கு இதுவரை எந்த இந்திய பிரதமரும் சுற்றுப்பயணம் செய்தது இல்லை. முன்னாள் குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு கடைசியாக 2025ஆம் ஆண்டு சுற்றுப்பயணம் செய்தாா்.