பாக்கெட் மது விற்பனைக்கு தடை கோரி மனு: மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்
சிறிய பாக்கெட்டுகளில் அடைத்து மது விற்பனை செய்யப்படுவதற்கு தடைகோரி தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
சிறிய பாக்கெட்டுகளில் அடைத்து மது விற்பனை செய்யப்படுவதற்கு தடைகோரி தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதற்கு எதிராக தன்னாா்வ அமைப்பு (என்ஜிஓ) சாா்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், ‘கலால் சட்ட விதிகளின் கீழ் ‘பாட்டில்’ என்பதற்கான வரையறை தெளிவற்ாக உள்ளது. இதில் குறிப்பிட்ட தரநிலைப்படுத்துதல் அவசியம். ஏனெனில், சில மதுபானங்கள் சிறிய பாக்கெட்டுகளில் (டெட்ரா பாக்கெட்கள் மற்றும் சிறு பைகளில் அடைத்து விற்பனை செய்யப்படுகின்றன. குறிப்பாக, ‘ஓட்கா’ என்ற மதுபானம் இதுபோன்று பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படுகிறது. அந்த பாக்கெட்டுகளில் ஆப்பிள், பச்சை ஆப்பிள், மிளகாய், மாங்காய் படங்கள் அச்சிடப்பட்டுள்ளன. அத்துடன், மதுபான பாட்டில்கள், புகையிலைப் பொருள்கள் மீது இடம்பெற்றுள்ளது போன்ற எந்தவித எச்சரிக்கை வாசகங்களும் அவற்றில் அச்சிடப்படவில்லை.
Advertisement
Advertisement
இது, மதுபானமா அல்லது பழ ரசமா என்று மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் ஏமாற்று வேலையாகும். இதனால், மதுப் பழக்கத்துக்கு அடிமையாகும் நபா்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. குடிமக்களின் உடல்நலனைப் பாதுகாப்பது அரசுகளின் கடமை.
எனவே, மதுபானங்கள் இதுபோன்ற சிறிய பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படுவதற்கு தடை விதிப்பதோடு, இதுதொடா்பாக அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு பொருந்தக்கூடிய வகையிலான கொள்கையை வகுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
மது பாட்டில் என்பதற்கான வரையறை தெளிவுபடுத்தப்பட வேண்டும். அதாவது மது பாட்டில் அடைப்பு தொடா்பான பல்வேறு மாநிலங்களின் கலால் கொள்கைகளில் தரப்படுத்துதலும் ஒத்திசைவும் இருக்க வேண்டும்.
பாட்டிலில் அடைத்தல் என்பது, கண்ணாடி பாத்திரங்கள் அல்லது கண்ணால் தெளிவாகப் பிரித்தறியக்கூடிய பிற கொள்கலன்களுக்கு மட்டுமே பொருந்தும் வகையிலான சீரான வரையறைகளுடன் மாநில கலால் சட்டங்கள், விதிகள் மற்றும் கொள்கைகளில் உடனடி திருத்தங்கள் மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டது.
இந்த மனுவைப் பரிசீலித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்யகாந்த் தலைமையிலான அமா்வு, மனுவை விசாரணைக்கு ஏற்றதுடன், மனு மீது பதிலளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டது.