எபோலா பரவல்! இந்தியா வரும் ஆப்பிரிக்க பயணிகளுக்கு அறிவுறுத்தல்!
இந்தியா வரும் ஆப்பிரிக்க பயணிகளுக்கு சுகாதார அறிவுறுத்தல் வெளியிடப்பட்டுள்ளது குறித்து...
ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா பரவல் வேகமெடுத்துள்ளதால், அந்நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு இந்திய அரசு சுகாதார அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.
காங்கோ, உகாண்டா மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகளில் எபோலா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இந்தத் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அந்நாடுகளை மிகவும் அச்சுறுத்தல் மிகுந்த நாடுகளாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
இந்த நிலையில், மத்திய சுகாதார சேவைகளுக்கான இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்தும், அந்நாடுகளின் வழியாகவும் பயணம் செய்யும் பயணிகளுக்கு சுகாதார அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
இதுகுறித்து, தில்லி விமான நிலையத்தில், பயணிகளுக்கு காய்ச்சல், உடல்சோர்வு, தலைவலி, தசைவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, ரத்தப்போக்கு ஆகிய அறிகுறிகள் உள்ளனவா எனச் சோதனைகள் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகிறது.
இத்துடன், எபோலா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் நபர்களுடன் தொடர்பில் இருந்த பயணிகள் உடனடியாக விமான நிலைய சுகாதார அதிகாரியிடம் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், விமான நிலைய சுகாதார அமைப்பின்படி, இந்தியாவுக்கு வந்த 21 நாள்களுக்குள் தொற்றுக்கான அறிகுறிகளால் பாதிக்கப்பட்ட பயணிகள் உடனடியாக மருத்துவ உதவி பெற வேண்டுமெனவும், அதிகாரிகளுக்கு அவர்களின் பயணங்கள் குறித்த விவரங்களைத் தெரிவிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.