குரு - சிஷ்யன்

61. நான்!

ஜி. கௌதம்

“நான் என்றால் என்ன?”.

இப்படி ஒரு கேள்வியை சட்டென குருநாதர் கேட்டதும் பதில் சொல்ல இயலாமல் தடுமாறிவிட்டான் சிஷ்யன்.

பதில் சொல்வதற்கான நேரம் அதுவல்ல என்பதும் அவனுக்குத் தெரிந்திருந்தது. அமைதியாக இருந்தான்.

“நான் பார்க்கிறேன், நான் கேட்கிறேன், நான் கொடுக்கிறேன், நான் நடக்கிறேன்.. என்று கூறும்போது நம்மை நாமே, நம் உடலோடு பொருத்திக்கொள்கிறோம். இப்படி உடலோடு பொருத்திப் பேசுவதை உற்றுக்கவனித்தால் அவற்றை இரு கூறுகளாகவும் பிரிக்கலாம்..”.

குருவிடம் இருந்து வரும் ஒவ்வொரு வார்த்தைகளையும் கவனமாக எடுத்து மனதில் பதித்துக்கொண்டிருந்தான் சிஷ்யன்.

இதையும் படிங்க | சித்தம் பாக்கியம்

“நான் பார்க்கிறேன், நான் கேட்கிறேன்.. என்பதெல்லாம் நம் உடலை நாமே அகக்கண்கள் மூலம் பார்த்துப் பொருத்திக்கொள்ளும் அவதானிப்புகள். நமக்கு மட்டுமான உணர்வுகள். நம் கண்களில் விரியும் காட்சிகள் நமக்குள்தான் உணரப்படும். அதேசமயம், நான் நடக்கிறேன், நான் கொடுக்கிறேன்.. என்பதெல்லாம் அகம் தாண்டி, புறச் சூழ்நிலையையும் சேர்த்துக்கொண்டு நாம் செய்யும் செயல்கள். இவைதவிர, நான் கவலைப்படுகிறேன், நான் கோபத்தில் இருக்கிறேன், நான் நிம்மதியாக இருக்கிறேன்.. என்று கூறும்போது நம்மை நாமே, நம் மனதோடு பொருத்திக்கொள்கிறோம்.

ஆக.. மனதோடும், அகக்கண்கள் வழியே காண்பதாக அவதானிக்கும் உடலோடும், சூழ்நிலையைச் செயல்கள் வாயிலாகச் சந்திக்கும் நம் உடலோடும் ஒவ்வொரு காரியத்தையும் பொருத்திக்கொண்டே நான் என்ற வார்த்தையை நாம் உபயோகப்படுத்துகிறோம். அப்போதுதான் அதற்கு அர்த்தம் கிடைக்கிறது. புரிகிறதா?”.

“புரிகிறது குருவே. மனம், அகம், புறம்.. இந்த மூன்றும்தான் நான் என்ற வார்த்தைக்கான ஆதாரம் என்று புரிகிறது குருவே..” என்றான் சிஷ்யன்.

“நமது மனம், நமது உடல் இரண்டும் சதாசர்வ காலமும் நம்முடனேயே இருக்கின்றன என்றாலும், நான் என்ற அகங்காரம் அர்த்தமற்றது என்பதற்கான உதாரணத்தையும் நம் இயல்பு வாழ்க்கையிலேயே உணரக் கொடுத்திருக்கிறான் இறைவன்” என்றார் குரு.

சிஷ்யனின் அறிவுக்கு அதன் அர்த்தம் எட்டவில்லை. “புரியவில்லை குருவே.. விளக்கிச் சொல்லுங்கள்..” என்றான்.

இதையும் படிங்க | மகா மந்திரம்

“ஒரு நாளை மூன்று பகுதியாகப் பிரித்துக்கொண்டு, அதில் ஒரு பகுதியைத் தூக்கத்தில் கழிக்கிறோம் நாம். அல்லவா..?”.

“ஆம் குருவே..”.

“நான் தூங்குகிறேன்.. நான் தூங்கிக்கொண்டிருக்கிறேன்..” என்று உன்னால் கூற முடியுமா?”.

சற்று நேரம் ஆழமாக சிந்தித்தான் சிஷ்யன்.

அதெப்படி முடியும்? தூங்கிக்கொண்டிருக்கும்போது நாம் நம் மனதிலிருந்தும் உடலில் இருந்தும் புறத்தில் இருந்தும் விலகி இருக்கிறோம். அப்படி விலகி இருக்கும்பொழுதில் எப்படி நான் தூங்குகிறேன் என விழிப்பு உணர்வுடன் கூறமுடியும்?

“இயலாது குருவே. நான் தூங்கப்போகிறேன் என்று கூறமுடியும். நான் தூங்கினேன் என்று கூறமுடியும். ஆனால், நான் தூங்குகிறேன் என்று கூறமுடியாது..” என்றான் சிஷ்யன்.

“மனம், உடல், அகம், புறம் இதையெல்லாம் நம்மிடம் இருந்து விலக்கிவைத்து, நான் என்ற அகங்காரத்துக்கும் உனக்கும் சம்பந்தமில்லை என நம்மை உணரச் செய்வதற்காகத்தான் நமக்கு தினமும் தூக்கத்தைக் கொடுத்திருக்கிறான் இறைவன். விழிப்பு நிலையிலும் இதை உணர்பவர்களே எதையும் கடந்து புன்னகைக்கும் பேரானந்தத்தை அனுபவிக்கிறார்கள். மற்றவரெல்லாம் நீயா நானா என எந்நேரமும் சிந்தித்துக்கொண்டு நிம்மதியை இழக்கிறார்கள்..” என்றார் குரு.

“இறைவன் மிகப் பெரியவன்..” என்றான் சிஷ்யன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வள்ளலாா் சா்வதேச மைய பணிகளை நிறுத்திவைக்க அறிவுறுத்தப்படும்: உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி

வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட தோ்தல் அலுவலா் ஆய்வு

செங்குந்தா் பொறியியல் கல்லூரியில் நீா்மோா்ப் பந்தல் திறப்பு

கல்லூரி மாணவா் மயங்கி விழுந்து சாவு

ஸ்ரீகிருஷ்ணஜென்ம பூமி வழக்கில் ‘வக்ஃபு’ சட்டம் பொருந்தாது: ஹிந்துக்கள் தரப்பு வாதம்

SCROLL FOR NEXT