எல்லோரும் வல்லவரே

1. விவரங்கள் (டீடெயில்ஸ்)

செ.சு.மலரடியான்



தமிழர்கள் நல்லவர்களாக மட்டும் இருந்தால் போதாது.  வல்லவர்களாகவும் இருக்க வேண்டும்.

- மு. வரதராசன்

நா


ன் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் மனித வளத்துறை மேலாளராகப்  பணியாற்றிக் கொண்டிருந்த நேரம் அது. நிறுவனத்திற்குத் தேவையான சரியான நபர்களை தேர்வு செய்து பணியில் அமர்த்துவதும் என் வேலைகளில் ஒன்று. எந்தத் துறைக்கு ஆள் எடுக்கவேண்டுமோ அந்தத் துறையின் மேலாளர் தேர்வு செய்யத்தக்க நபர்களை நான் கொணரவேண்டும். பின்பு நாங்கள் இருவருமாக சேர்ந்து தேர்வு செய்யவேண்டும்.

அப்படியாக நிதித்துறைக்குத் தேவையான அக்கவுண்டென்ட்ஸ் சிலரைத் தேர்வு செய்ய நானும் நிதித்துறை உயரதிகாரி ஒருவரும் நேர்முகத் தேர்வு நடத்திக்கொண்டிருந்தோம். பல மாதங்களாகப் பலரைப் பார்த்தும் அந்தத் தேவை நிறைவேறவில்லை. அந்த நபருக்கான  தேர்வு முடியவில்லை. தகுதியான சுமார்  பன்னிரெண்டு  நபர்களை  ’மேன்பவர் கன்சல்டென்ஸி’ மூலம் நான் வரவழைத்துவிட்டேன். என்னைப் பொறுத்தவரையில் அதில் ஆறு அல்லது  ஏழு நபர்கள் தேர்வு செய்யத்தகுந்தவர்களே. ஆனாலும் என்னுடன் இருந்த நிதித்துறை உயரதிகாரி, பார்த்த அனைவரையும் நிகாரித்துவிட்டார்.

நாட்கள் ஓடிக்கொண்டிருந்தன. போதிய நபர்கள் இல்லாததால் அந்தத் துறையில் வேலை பாதிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ஒருநாள் அவ்வாறு நாங்கள் இருவரும் அதே பதவிக்கான நேர்முகத் தேர்வில் மூன்று புதிய விண்ணப்பதாரர்களைப் சந்திக்கிறோம், கேள்விகள் கேட்டு தேர்வு நடத்திக்கொண்டிருக்கிறோம்.

நேர்காணல்


தேர்வு முடிந்தது. யாரை எடுக்கலாம் என்று நான் அவரைக் கேட்கிறேன். அவர் வழக்கம் போல ’எவரும் சரியில்லை. வேறு யாரையாவது அழைத்து வாருங்கள்’ என்கிறார்.  பின்பு, நானும் அவருமாக நேர்முகம் செய்த அறையில் இருந்து வெளியில் வருகிறோம்.

நான் சோர்வாக நடந்து வருகிறேன். அப்போது அங்கே வந்த நிறுவனத்தின் தலைவர் எங்கள் இருவரையும் பார்த்து கேட்கிறார்,

'என்ன முடிந்ததா? யாரைத் தேர்வு செய்தீர்கள்?'

'ம்ஹும். எவரும் சரியில்லை' என்கிறார் நிதித்துறை மேலதிகாரி வேகவேகமாக.

'அப்படியா!' என்ற நிறுவனத் தலைவர், 'அவர்களிடம் என்ன குறைகள்? சொல்லுங்கள்' என்கிறார் அவரைப் பார்த்து. 

'அவர்கள் பொருத்தமானவர்கள் இல்லை'

'ஓக்கே. எந்த விதத்தில்?'

'வேலை… அனுபவம்..'

'ஓகோ..'

'மேலும்  கம்யூனிகேஷன் மற்றும்… '

'அப்படியா !.'

'மேலும் வேலை தொடர்பான அறிவு'

'ம்ம்ம்..!  என்று ஆச்சரியப்பட்டவர், என்ன நினைத்தாரோ.. சரி சரி .  வாருங்கள் உள்ளேபோய் அமர்ந்து பேசுவோம்' என்று சொல்லியபடி எங்களை மீண்டும் அந்த நேர்முகத் தேர்வு அறைக்கு அழைத்துப் போனார். 

'இன்று எத்தனைப் பேரைப் பார்த்தீர்கள்? ஒவ்வொருவரைப் பற்றியும் விவரங்கள் சொல்லுங்கள்' என்கிறார் நிதித்துறை உயரிகாரியைப் பார்த்து.

அதுவரை அவர்கள் உரையாடலில்  குறுக்கிடாமல் இருந்த நான் இப்போது பதில் சொல்ல முற்படுகிறேன். ஆனால் நிறுவனத் தலைவர் என்னை பேசவிடவில்லை. சைகையால் பேசாமல் இருக்கச் சொல்லுகிறார்.

நிதித்துறை உயரதிகாரியால் குறிப்பான விவரங்கள் சொல்ல முடியவில்லை. அவர் சொன்ன காரணங்கள் எல்லாம் பொதுவானதாக இருந்ததாக நிறுவனத் தலைவர் சொல்லிவிட்டு, இறுதியாக,   ”You should have details Mr…..  ” என்று சற்று கடுமையாகச்  சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

'உங்களிடம் நீங்கள் சொல்லுவதற்கான விவரங்கள் இருக்க வேண்டும்' என்பதுதான் நிறுவனத் தலைவர்  அழுத்தமாக சொன்னது.  எத்தனை நபர்களை வேண்டுமானாலும் நிராகரிக்கலாம். ஆனால், ஒருவரை ஏன் நராகரிக்கிறோம் என்பதற்குச் சரியான காரணங்கள் வேண்டும். அவை தெரிந்திருக்கவேண்டும், நிராகரிப்பவரால் அதைச் சொல்ல முடிய வேண்டும். 

எதையும் Feel based   ஆக  சொல்லக் கூடாது. Data based  ஆகச் சொல்ல வேண்டும். ஒரு திரைப்படம் நன்றாக இல்லை என்று சொல்லும் உரிமை எவருக்கும் உண்டுதான். ஏன், எதனால் அப்படிச் சொல்லுகிறீர்கள் என்று அவரிடம் கேட்டால், அதற்கு அவர்  விவரங்களுடன் பதில் சொன்னால் மதிப்பா,  அல்லது 'அதெல்லாம் தெரியவில்லை. கேட்காதீர்கள். ஆனால் ஏனோ படம் நன்றாக இல்லை’ என்று சொன்னால் மதிப்பா?  எது எடுபடும்?  எது சரி? இங்கெல்லாம் 'பட்சி’ சொல்லுவது எடுபடாது. போதாது. சிலர் மிக ஆர்வமாக தகவல்கள் சொல்லுவார்கள். 'அவர் என்ன சொன்னார் தெரியுமா!?’  அல்லது நான் போன இடத்தில் என்ன நடந்தது தெரியுமா?’  என்பது போல.  நாம் அப்படியா என்று கேட்கத் துவங்கிப் பின் அந்தத் தகவலை முழுமையாகப் புரிந்துகொள்ள, 'அவர் எங்க வேலை செய்கிறார்?’  என்று கேட்போம்.  'அதைக் கேட்வில்லையே’ என்பார்கள். அடுத்து, “அவர் எத்தனை மணிக்கு அங்கே போனாராம்?”  என்பது போல அந்தத்  தகவலை சரியாகப் புரிந்துக் கொள்ளத் தேவைப்படும் மற்றொரு விவரம் கேட்டாலும், 'அதெல்லாம் நான் கேட்டுக்கொள்ளவில்லை’ என்பார்கள்.


எதையும் பொதுவாகச்  சொல்லுவார்கள். யாரோ சொன்னார். என்னவோ நன்றாக இருந்தது. என்பது போல. அவர்கள் பேச்சில் விவரங்கள் எனப்படும் ’டீடெயில்ஸ்’ இருக்காது. ஏன் தெரியுமா சிலரிடம் இப்படிப்பட்ட  விவரங்கள் குறைவு?   டீடெயில்ஸ்சுக்கு நேரம் செலவிட வேண்டும். உரையாடல்களின் போது அதில் முழுக் கவனம்  செலுத்த வேண்டும். 'ஃபோக்கஸ்’ செய்யவேண்டும். கவனம் செலுத்துவதற்கு  'சக்தி’ செலவாகும்.  கவனிப்பது என்பது சாய்ந்து உட்கார்ந்துகொண்டு காதில் வாங்குவதில்லை.  அவ்வளவு  Passive  ஆனதல்ல.  அது  Active ஆக செய்யவேண்டியது. சும்மா இருப்பதில்லை. கண்கள், காதுகள் தவிர மனதையும் வேறு எதிலும் அலைபாயவிடாமல் இழுத்துப் பிடித்து, தேவையானவற்றின் மீது நிறுத்துவது தான் 'கவனம்’. அதனால்தான் கவனம் செலுத்த 'எனெர்ஜி’ தேவைப்படுகிறது என்பது.

ஸ்மார்ட் ஃபோன் பயன்படுத்துவது என்ன  கற்றுக்கொள்ள முடியாததா? ஆனால் அந்தப் பெரும்பாலனவர்கள் செய்வதில்லை. இன்னும் பலரும் பலவற்றிலும் அப்படித்தான். ஆங்கிலமோ, கம்ப்யூட்டர் பயன்பாடோ, மேற்படிப்போ அல்லது வேறு எதுவுமோ. எதுவுமே செய்ய முடியாததல்ல. முனைந்து கற்றுக்கொள்ளவேண்டும், சிலவற்றைத் தொடர்ந்து பயிற்சி செய்யவேண்டும். சிலர் செய்வதில்லை. காரணம் அவர்கள் அந்த ’எனெர்ஜி’யை அதில் செலவு செய்யவில்லை. அதற்கான மனப்பாங்கும் அக்கறையும் இல்லை.

வேறுபாடு வேறு எதிலும், குறிப்பாக திறமை படைத்திருப்பதில் இல்லை. அதைப் பயன்படுத்தாததில்தான்  இருக்கிறது.  கற்றுக் கொள்ள முடிவதில் வேறுபாடுகள் கிடையாது. கற்றுக்கொள்ளும் மனப்பாங்கில்தான் இருக்கிறது.

சில மாதங்களுக்கு முன்பு ஒரு தன்னாட்சி  பொறியியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராகப் போயிருந்தேன். விழுப்புரத்திற்கு பக்கத்தில் இருக்கும் ஒரு ஊர் அது. அங்கே  ஒரு ஹோட்டலில் என்னை தங்க வைத்தார்கள்.

அந்த அறையில் ஓர் இரவு தங்கினேன். நல்ல வசதியானவர் செலவு செய்துக் கட்டியிருக்கும் அந்த ஹோட்டலில் எனக்குக் கிடைத்த அனுபவங்கள்.. !  அப்பப்பா !

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப் பாதை கோரி கிராம மக்கள் மனு

மழை வேண்டி பெரம்பலூரில் சிறப்புத் தொழுகை

கடன் தொல்லை: இளைஞா் தற்கொலை

திருமானூா் அருகே குடிநீா் விநியோகிக்க கோரி சாலை மறியல்

மே 11-இல் பெரம்பலூா் அங்காளம்மன் கோயில் தேரோட்டம்

SCROLL FOR NEXT