கீழடி ஸ்பெஷல்!

கீழடி ஸ்பெஷல்: கீழடி-முசிறிப்பட்டிணம் தொடர்புகள்!

சி.பி.சரவணன்

கேரள தொல்லியல் துறை முனைவரும், 'பாமா' நிறுவன இயக்குனருமான, P.J.செரியன். உலகின் எந்த இடத்தில் தொல்லியல் சார்ந்த ஆய்வு நடந்தாலும், தமிழ் சார்ந்த அடையாளங்களை காண முடியும்" என்று கூறியுள்ளார்.

‘முசிறி’ பட்டணம் அமைவிடம்
பட்டணம் கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளம் மாவட்டத்தில் பரவூருக்கு அருகில், சுமார் 2 கிமீ வடக்கே கொடுங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண் 17 ல் உள்ளது. இந்த இடத்தை திருச்சூர் - எர்ணாகுளம் இரயில் தடத்தில் அமைந்துள்ள ஆலுவா இரயில் நிலையத்தில் இறங்கி, பரவூர் வழியாகச் சென்றடையலாம். இவ்வூருக்கு அருகில் பரவூர் தோடு என்ற பெரியாற்றின் கிளையாறு பாய்கின்றது. இவ்வூருக்கு மேற்கே 2 கிமீ தொலைவில் தத்தப்பள்ளி காயல் எனப்படும் உப்பங்கழிப்பகுதி உள்ளது. இதற்கு அப்பால் வைப்பின் தீவுப்பகுதி அமைந்துள்ளது. இதன் மேற்கே அரபிக்கடல் காணப்படுகின்றது. இங்கு சேராய் எனப்படும் கடற்கரை சுற்றுலாப்பகுதி உள்ளது.

சேரர் துறைமுக நகர் ‘முசிறி’ அகழாய்வு
பட்டணம் பற்றிய முதல் குறிப்பு கே.பி.ஷாஜன் தனது முனைவர் பட்டத்திற்காக எழுதிய ஆய்வேட்டில் உள்ளது. அங்கு அவர் சேகரித்த சில பானை ஓடுகள் சிறப்பானவையாக இருந்தன . பின்னர் பிரிட்டீஷ் அருங்காட்சியகத்தில் உள்ள ரொபர்ட்டா டாம்பர் இந்தியாவில் ரோமனியச் சான்றுகளை ஆராய்ந்து வரும்போது, பானை ஓடுகள் ”ஆம்போரா” என்பது உறுதிப்படுத்தப்பட்டது. அதன் விளைவாகப் பட்டணம் முசிறியாக இருக்கலாம் என்ற கருதுகோள் முன்வைக்கப்பட்டது. பிறகு திருப்பூணித்துறையில் உள்ள மரபியல் ஆய்வு நிறுவனம் 2004ல் அங்கு ஒரு சோதனை அகழாய்வை நடத்தியது. இந்த அகழாய்வில் சேரர் நாணயங்களும், கட்டடப் பகுதிகளும், ஆம்போரா சாடித்துண்டுகளும், ரௌலட்டட் பானை ஓடுகளும் கிடைத்தன.


இதனடிப்படையில் கேரள வரலாற்றாய்வுக் கழகத்தின் இயக்குனர் பி.ஜெ.செரியான் அவர்களுடன் இணைந்து தஞ்சை பல்கலைக்கழகம் இணைந்து, 2007ல் பெரிய அளவிலான அகழாய்வை நடத்தினர். இதற்கு முன்பு கேரள அரசு முசிறி மரபியல் திட்டம் என்ற மரபு வளங்களைப் பாதுகாக்கும் திட்டத்தைத் தொடங்கியது அப்போதைய கேரள நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் அவர்களின் முயற்சி இங்கு குறிப்பிடத்தக்கதாகும். இது பட்டணம் அகழாய்விற்குத் தேவையான நிதியை அளித்தது. பட்டணத்தில 2007 முதல் 2013 வரை 7 பருவங்கள் கேரள வரலாற்றாய்வுக் கழகத்தால் அகழாய்வுகள் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் பல் வகையான தொல்லியல் சான்றுகள் கிடைத்துள்ளன.

இங்கு, தமிழகத்தின் சங்ககால வாழ்விடங்களில் கிடைக்கும் செங்கற்களின் அளவை ஒத்த செங்கற்கள், கூறை ஓடுகள், இரும்பு, ஆடி மணிகள் (பாசி), செம்புப் பொருட்கள், தங்கத்தினால் ஆன அணிகலன்கள், கார்னேலியன், படிகம் மற்றும் பெரைல் (பச்சைநிறக்கல்) ஆகிய உயர்வகைக் கற்களால் ஆன அணிகலன்கள் பல்லாயிரக்கணக்கில் கிடைத்துள்ளன. பட்டணத்தில், பொ.ஆ.மு. 300 முதல் பொ.ஆ 1000 வரையும் பின்னர் பொ.ஆ 1500-லிருந்து தற்காலம் வரையும் மக்கள் வாழ்ந்துள்ளார்கள் என்பதை இந்த அகழாய்வுகள் புலப்படுத்துகின்றன.

பட்டணத்தில் தமிழ் பிராமி எழுத்துப் பொறிப்புள்ள பானை ஓடுகள்
பட்டணத்தில் சுமார் 10 ஓடுகளில் பிராமி எழுத்துப் பொறிப்புகள் கிடைத்தள்ளன. ஆனால் தமிழகத்தில் உள்ள சங்ககால இடங்களில் கிடைத்தது போல இங்கு இவை அதிக அளவில் கிடைக்கவில்லை. இதற்குக் காரணம் இங்கு கிடைத்த பானை ஓடுகளின் மேற்பரப்பு மழை மற்றும் ஈரமான மண்ணில் நீண்ட காலம் புதைந்து இருந்ததன் விளைவாக சேதமடைந்ததாகலாம்.

ஒரு பானை ஓட்டில்.. ஊர் பா வே ஓ .. என்ற எழுத்துடன் காணப்படுகின்றது. இது 2004ல் திருப்பூணித்துறை மரபியல் ஆய்வு நிறுவனம் நடத்திய அகழாய்வில் வெளிப்பட்டது. இதை ஐராவதம் மகாதேவன் அவர்கள் வாசித்துள்ளார். ஒரு பானை ஓட்டில் ‘அமண’ என்ற எழுத்துப் பொறிப்பு காணப்படுகின்றது. இதையும் ஐராவதம் மகாதேவன் அவர்கள் படித்துள்ளார்.

ஆம்போரா சாடிகள்
ஆம்போரா என்பது மதுவைச் சேமித்து வைக்கவும், எடுத்துச் செல்லவும் பயன்படும் ஒரு சுடுமண் சாடியாகும். இது புதிய கற்காலத்திலிருந்து மேலை நாடுகளில் பயன்பாட்டில் இருந்துவந்துள்ளது. 'ஆம்போரா' என்ற சொல் கிரேக்க நாட்டில் வெண்கலக் காலத்திலிருந்து பயன்பாட்டில் உள்ளது. 'ஆம்போரா' என்பதற்கு 'இருபுறமும் கைப்பிடிகளைக் கொண்ட' கலம் என்பது பொருளாகும். ஆம்போரா சாடித்துண்டுகள் பல பட்டணத்தில் கிடைத்துள்ளன. இந்தச் சாடிகள் ரோமானிய மற்றும் கிரேக்க நாடுகளிலிருந்து கொண்டுவரப் பட்டவையாகும். இவை திராட்சைப் பழத்திலிருந்து உருவாக்கபட்ட மது (தேறல்), 'கரும்' எனப்படும் ஒருவகை மீன் ஊறுகாய், மற்றும் ஆலிவ் எண்ணை ஆகியவற்றை இறக்குமதி செய்யப் பயன்பட்டன. இந்த சாடிகள் பொதுவாக இரண்டு கைப்பிடிகளுடன் காணப்படுகின்றன. இந்த வகைச் சாடிகளின் துண்டுகள் அதிகமாக பட்டணத்தில் கிடைக்கின்றன. ஆம்போராவின் சாடித் துண்டுகள் தமிழகத்தில் அரிக்கமேடு, குடிக்காடு, வசவசமுத்திரம், கரூர், அழகன்குளம், கொற்கை ஆகிய இடங்களில் கிடைத்துள்ளன. இப்பட்டணத்தில் கிடைத்த ஆம்போரா சாடிகளின் துண்டுகள் ரோமானியப் பகுதியில் உள்ள நேப்பில்ஸ் வளைகுடாவில் உருவாக்கப்பட்ட ஆம்போராக்களைச் சேர்ந்தவை (Tomber 2008). மேலும் எகிப்து மற்றும், கிரேக்க நாட்டுத் தீவுகள் ஆகிய இடங்களிலிருந்தும் இறக்குமதி செய்யப்பட்ட ஆம்போரா சாடிகளின் துண்டுகளும் இங்கு கிடைக்கின்றன.

அரிட்டைன்/டெர்ரா சிகிலாட்டா

டெர்ரா சிகிலாட்டா என்பது சிவப்பு நிறமுள்ள உயர் தரப் பானை வகையாகும். இது ஒரு ரோமானியப் பானை வகையாகும். இவற்றில் பல வகைகள் உள்ளன. இத்தாலியில் உற்பத்தி செய்யப்பட்டவை அரிட்டைன் என்று அழைக்கப்படுகின்றன்; ஸ்பெயினின் 'கால்' (Gaul) பகுதியில் உற்பத்தியான இவ்வகைப் பானைகள் சாமியன் பானை வகை என்று அழைக்கப்படுகின்றன. வடக்கு ஆப்பிரிக்கா மற்றும் ரோமானியப் பேரரசின் கிழக்குப் பகுதியில் உற்பத்தி செய்யப்பட்டவை 'ஆப்பிரிக்க சிவப்பு நிறக் கலவை பூசப்பட்டவை' என அழைக்கப்படுகின்றன.

அழகன்குளத்தில் கிடைத்த சில சிவப்பு நிற ரூலட்டட் தட்டுக்களின் துண்டுகள் முதலில் தவறாக 'ஆப்பிரிக்க சிவப்பு நிறக் கலவை பூசப்பட்டவை' என அடையாளப்படுத்தப்பட்டன (Nagasamy 1991). இந்தப் பானை வகையை மார்ட்டிமர் வீலர் அரிக்கமேட்டில் கண்டுபிடித்து அடையாளப்படுத்தியுள்ளார் (Wheeler et al. 1946). இதில் கிண்ணங்கள் மற்றும் தட்டுகள் காணப்படுகின்றன. இதனடிப்படையில் அரிக்கமேட்டில் கிடைத்த, வரலாற்றுத் தொடக்க காலச் சான்றுகளின் காலம் மார்ட்டிமர் வீலரால் நிர்ணயிக்கப்பட்டது.

ரோமானியக் கண்ணாடி வகைக் கிண்ணங்கள்
ரோமானியர்களின் கண்ணாடி வகைக் கிண்ணங்களின் துண்டுகள் பட்டணத்தில் கிடைத்துள்ளன. இக்கிண்ணங்களின் வெளிப்புறத்தில் புடைத்த, நேரான நரம்புகள் போன்ற பகுதிகள் செங்குத்தாக விளிம்புக்கு சற்று கீழ்ப் பகுதி வரை அரைத் தூண்கள் போல அமைக்கப்பட்டுள்ளன. எனவே அவை ஆங்கலத்தில் "Pillared Bowl" எனப்படுகின்றன. இவை பச்சை, நீலம் மற்றும் பிற நிறங்களில் கிடைக்கின்றன. மேலும் பல கண்ணாடிக் குடுவைகளின் துண்டுகளும் பட்டணத்தில் கிடைத்துள்ளன.

மேற்காசியப் பானைவகைகள்
பொதுவாகச் சங்க காலத்தைப் பற்றிப் பேசும் போது ரோமானியத் தொடர்புகளையே நாம் மையப்படுத்துகிறோம். ஆனால் மேற்காசியாவிற்கும் பழந்தமிழகத்திற்குமான தொடர்புகள் வரலாற்று முந்தைய காலத்திலிருந்தே தொடங்கியிருப்பதாகத் தெரிகின்றது. மேலும் யவனர் என்ற சொல் ரோமானியர் மற்றும் மேற்குத் திசையைச் சேர்ந்தவர்களைக் குறிக்கும் பொதுச் சொல்லாகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். சங்க காலத் தொல்லியல் இடங்களில் பல மேற்காசியப் பானை வகைகளும் கிடைக்கின்றன. மேலும் இப்பகுதியிலிருந்து வந்த கண்ணாடிக் குடுவைகளும் தமிழகத்திற்கு வந்திருக்கலாம் எனத் தெரிகின்றது.

நீலப்பச்சை வண்ணக் கண்ணாடிப் பூச்சுள்ள பானை வகைகள்
நீலப்பச்சை வண்ணக் கண்ணாடிப் பூச்சுள்ள பானைவகைகள் மேற்காசியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்டன. இவை பார்த்திய-சசானியப் பானை வகைகள் என்று அழைக்கப்படுகின்றன. இவை மென்மையான நுண்ணிய துகளைமைவைக் கொண்ட களிமண்ணால் செய்யப்பட்டவை. இவற்றின் கண்ணாடிப்பூச்சு இல்லாத பகுதியைத் தொடும் போது மண் துகள்கள் பொடிபோன்று கையில் ஒட்டும். இவற்றின் மேல் நீலம், பச்சை, நீலப்பச்சை, வெள்ளை நிறங்களில் கண்ணாடிப் பூச்சு பூசப்பட்டு காணப்படும். இவை இரான் மற்றும் இராக் பகுதிகளில் உற்பத்தி செய்யப்பட்டவை. இவற்றின் சில துண்டுகள் அரிக்கமேட்டில் கிடைத்துள்ளன. அதைவிட அதிகமான எண்ணிக்கையிலான துண்டுகள் பட்டணத்தில் காணப்படுகின்றன. மேற்காசியப்பானை ஓடுகள் பட்டணத்தில் அதிகமாகக் காணப்படுவது மேற்குக் கடற்கரைக்கும் மேற்காசியாவிற்கும் கிழக்குக் கடற்கரையை விட அதிகமான தொடர்புகள் இருந்தமையைப் புலப்படுத்துகின்றன.

டர்காம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டெரக் கென்னட் பட்டணத்தில் கிடைக்கும் இவ் வகைப் பானைகள் பொ.ஆமு. 3ம் நூற்றாண்டு முதல் பொ.ஆ 9ம் ஆம் நூற்றாண்டு வரையான காலத்தைச் சேர்ந்தவை என்று கருதுகின்றார். இங்கு கிடைத்த பார்த்திய மீன் தட்டுக்கள் பொ.ஆமு. 3ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை எனக் கருதுகிறார்.

மெசபடோமிய டர்பிடோ பானை வகைகள்
மெசபடோமியா எனப்படும் யூப்ரிஸ் மற்றும் டைக்கிரிஸ் ஆற்றிடைப் பகுதியில் உற்பத்தி செய்யப்பட்ட பானை வகைகள் 'டர்பிடோ' எனப்படும் பானை வகைகளின் துண்டுகள் பட்டணத்தில் கிடைத்துள்ளன. இவை மேற்கு ஈரான் மற்றும் ஈராக் பகுதியைச் சேர்ந்தவை. இந்த சாடிகளின் உருளை வடிவத்தால் இவை டர்பிடோ எனப்படுகின்றன. இவை டர்பிடோ எனப்படும் நீர் மூழ்கு ஏவுகணைகளின் அமைப்பை ஒத்துக்காணப்படுகின்றன. இவற்றின் உள்ளே கருப்பு நிறத் தார்க்கலவை பூசப்பட்டிருக்கும். இவை அழகன்குளத்திலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் நல்லெண்ணை, பேரிச்சை சாறு மற்றும் இப்பகுதியல் உற்பத்தியான பொருட்களைச் சேமிக்கப் பயன்பட்டிருக்கலாம் என டெரக் கருதுகின்றார்.

நகர் மையம் (Ancient Cosmopolitan Cities)
இந்த அகழாய்வு குறித்து வெளிப்படுத்தும் விடயங்கள் மிக முக்கியமானவை. இன்று கேரளாவில் உள்ள பட்டணம் என்ற இடத்தில் இந்த அகழாய்வு நடத்தப்பட்டுள்ளது. இப்பகுதி பண்டைய சேரர் துறைமுக நகரான முசிறியின் ஒரு பகுதியாக இருந்துள்ளது. இந்நகரம் கிரேக்க இலத்தீன் இலக்கியங்களில் முசிறிசு என அழைக்கப்பட்டுள்ளது. அங்கு கண்டெடுக்கப்பட்ட ஒரு இலட்சம் பொருட்களில் ஒன்று கூட மதச்சார்பானதாக இல்லை எனவும், இந்நகரம் அன்று கிழக்கே சீனா முதல் மேற்கே உரோம் வரை வணிகம் செய்து வந்துள்ளது எனவும், தமிழகத்தில் கி.மு. 1000 வாக்கிலேயே நகர் மையங்கள் உருவாகத் துவங்கிவிட்டன எனவும் செரியன் கூறுகிறார்.

கிரேக்க இலத்தீன் இலக்கியங்களை நன்கு அறிந்த அமெரிக்க ஐரோப்பிய அறிஞர்கள், அன்று இந்த முசிறி நகரானது, இன்றைய நியூயார்க், இலண்டன், சாங்காய் போன்ற புகழ்பெற்ற பெரும்துறைமுக நகரங்களுக்கு இணையாக இருந்ததாகக் குறிப்பிடுகின்றனர். உலகின் இன்றைய பெரும் துறைமுக நகரங்கள் இவை. அன்று முசிறி இன்றைய உலகின் பெருந்துறைமுக நகரங்களுக்கு இணையான நகராக இருந்துள்ளது. மேலும் இந்த முசிறி நகர் தென் சீனத்திலிருந்து, ஐரோப்பாவின் ஜிப்ரால்டர் சலசந்தி வரை, மத்தியதரைக்கடல், செங்கடல், இந்தியப்பெருங்கடல் ஆகியவற்றில் உள்ள 40 துறைமுக நகரங்களோடும், 30 வேறுபட்ட பண்பாடுகளோடும் நேரடித் தொடர்பில் இருந்ததற்கான உறுதியான சான்றுகள் கிடைத்துள்ளன எனவும், இவை வாஸ்கோடகமா இந்தியா வருவதற்கு 1500 ஆண்டுகளுக்கு முன் நடந்தவை எனவும் செரியன் கூறுகிறார். பூம்புகார், கொற்கை போன்றவை முசிறியைவிடப்பெரிய நகரங்கள். பெரிப்ளசு என்ற எகிப்திய பயணி கி.பி. முதல் நூற்றாண்டில் இந்தியாவின் கங்கைவரை சென்று திரும்பியவர். அவர் மேற்கு நாடுகளிலிருந்து தமிழகத்துக்கு வந்த கப்பல்களை விட, மிகப்பெரிய அளவிலும் மிக அதிக எண்ணிக்கையிலுமான கப்பல்கள் கிழக்கு நாடுகளுக்கு தமிழகத்திலிருந்து சென்று வந்தன என்கிறார். மேற்கே முசிறி இருந்தது என்றால் கிழக்கே அதைவிடப் பெரிதான பூம்புகார் இருந்துள்ளது. இவ்விரண்டுக்கும் இடையே கொற்கை இருந்துள்ளது. ஆகவே அன்றைய தமிழகம், உலகின் மிகப்பெரிய உற்பத்தி மையமாக, உலகளாவிய அளவிலான வணிக மையமாக இயங்கி வந்துள்ளது எனலாம்.

2006 முதல் 2016 வரை பத்துதடவை முசிறியில் அகழாய்வு செய்யப்பட்டது எனவும் 10 வருடங்களாக இதுவரை ஒரு விழுக்காட்டு அளவு பரப்புக்கே அகழாய்வு நடந்துள்ளது எனவும் இந்தியப் பல்கலைக்கழகங்கள் மட்டுமின்றி ஆக்ஸ்போர்டு, உரோம் போன்ற உலகின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களோடு இணைந்து இவ்வாய்வு நடைபெற்றது எனவும், இங்கு கீழடியில் கிடைத்தது போலவே செங்கல் அமைப்புடன் கூடிய கட்டடங்கள், கூரை ஓடுகள், செம்பு, தந்தம் போன்றவற்றால் செய்யப்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன எனவும் முசிறியின் அகழாய்வு காலம் கி.மு. 500 முதல் 300 வரை எனவும் செரியன் கூறுகிறார். மேலும் அவர் 2000 ஆண்டுகளுக்கு முன் தனித்த பண்பாட்டோடு தமிழ்மக்கள் வாழ்ந்துள்ளனர் எனவும், அன்று பெண்களுக்கு பெரும் சமூகப் பொறுப்புகள் அளிக்கப்பட்டிருந்தன எனவும், புத்தமதப் பரவலுக்கு முன் தமிழர்கள் வளமாக வாழ்ந்து வந்துள்ளனர்.

பெரிய மனிதர்களின் சமூக அந்தஸ்தை வெளிப்படுத்த, அழகு சாதனமாக வைக்கப்பட்ட மண்பாண்டங்கள், நறுமணப்புகை பரப்பும் ஜாடிகளும் கிடைத்தன. மேலும், சீன செராமிக் வகை பாத்திரங்கள், தாவர மற்றும் விலங்கியல் பரவலுக்கான மரபுச்சான்றுகள், சங்ககால சேர மற்றும் ரோமானிய நாணயங்கள், 'டெர்ரா சிகிலேட்டா' என்ற பானை ஓடுகள், பலவித மணிகள் என, பல ஆயிரம் தொல்பொருட்கள் கிடைத்து உள்ளன. கீழடியில் கிடைத்தது போல், செங்கல்அமைப்புடன் கூடிய கட்டடங்கள், கூரை ஓடுகள், செம்பு, தந்தம் உள்ளிட்டவற்றால் செய்யப்பட்ட பொருட்களும் கிடைத்துள்ளன.

பட்டிணத்தில் சமய அடையாளம்


அமணம் என்ற தமிழி எழுத்துப்பொறிப்பு தவிர மதம் சமயம் சார்ந்த அடையாளம் எதுவும் அங்கு காணப்படவில்லை. அமணன் என்பது ஆசீவக மெய்யியல் சொல்லாகும்). அது ஒரு பெயர்ச்சொல். கொடுமணலில் கி.மு.6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல வட இந்திய வணிகர்களின் பெயர் பொறித்த தமிழி எழுத்துப் பொறிப்புகள் கிடைத்துள்ளன), மிகவும் நாகரிகமான மக்கள் வாழ்ந்ததற்கு அடையாளமாக கழிப்பறைகள் கட்டப்பட்டு, பூமியின் மேற்பரப்பிற்கு கெடுதல் ஏற்படாத வகையில் கழிவுகளை வெளியேற்றி உள்ளனர் எனவும் கூறுகிறார். பண்டைய தமிழகம் என்பது ஆந்திரா, கர்நாடகா ஆகியவைகளின் தென்பகுதியையும், தற்போதைய தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய பகுதிகளையும் கொண்டதாக இருந்துள்ளது எனவும் ஆனால் மற்ற மாநிலங்களில் தங்களின் முன்னோர்கள் குறித்தும், வரலாறு குறித்துமான புரிதல் இல்லை எனவும் அவர் கூறுகிறார்.

சமய, மத அடையாளம் ஏதும் அங்கு கிடைக்கவில்லை. இதனால், தமிழர்கள், புத்த மதப்பரவலுக்கு முன், வளமான கலாசாரத்துடன் வாழ்ந்துள்ளது தெரிகிறது.உங்களின் ஆய்வு முடிவுகளால், நீங்கள் சொல்ல விரும்புவது? பண்டைய தமிழகம் என்பது, தற்போதைய தமிழகம் மட்டுமல்ல. ஆந்திரா, கர்நாடகாவின் தென்பகுதி, புதுச்சேரி, கேரளா மற்றும் தற்போதைய தமிழகத்தை உள்ளடக்கி இருந்துள்ளது. தற்போது, தமிழகத்தை தவிர, மற்ற மாநிலங்களில், தங்களின் முன்னோர்கள் பற்றிய புரிதலும், வரலாற்று அணுகுமுறையும் இல்லை. அனைவரும் அண்ணன், தம்பிகள் என்பதை தான், இந்த மாநிலங்களின் பல்வேறு இடங்களில் கிடைக்கும், தொல்லியல் சான்றுகளின் ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. தென் மாநிலங்களின் வாழ்வியல் சொல்லும் வளமான சான்றுகளாக, சங்க கால இலக்கியங்கள் உள்ளன.

கீழடி-முசிறி தொடர்புகள்
பட்டணத்தில் கிடைத்துள்ள தொல்பொருள்கள், கீழடி மற்றும் அரிக்கமேட்டில் கிடைக்கும் தொல்பொருள்களின் அளவை ஒத்தும், ஏன் அவற்றை விட அதிகமாகவும் காணப்படுகின்றன. இந்தச்சூழ்நிலையில் இவ்விடம் சங்ககாலத்தின் முசிறியின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று கூற்றை உறுதிப்படுதிதுகின்றன. மேலும் இந்த இடம் கொடுங்களூரிலிருந்து அதிக தொலைவில் இல்லை (சுமார் 8 கீமீ). எனவே முசிறி என்ற பெயர் இப்பகுதி முழுவதிற்கும் பயன்படுத்தப் பெற்றிருக்கவேண்டும்.

தற்போது அங்கு ஒரு தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்கப்படவிருக்கின்றது. அரிக்கமேடு ஒரு சிறப்பான தொல்லியல் இடமாக இருந்தபோதிலும், அங்கு இங்கிலாந்தில் உள்ள செயின்ட் ஆல்பன்ஸ் மற்றும் பாத் போன்ற இடங்களில் உள்ளது போன்ற ஒரு பெரிய அருங்காட்சியகம் அமைக்கப்படவில்லை என்பது வருந்தத்தக்கதாகும். நமது பண்பாடுசார் மற்றும் இயற்கைசார் மரபியல் வளங்களை நன்கு பாதுகாத்து காட்சிப்படுத்துவது மிகவும் அவசியமாகும்

பட்டணத்தில் கலாசார அடையாளம் 
தமிழர்கள், 2,000 ஆண்டுகளுக்கு முன், தனித்த கலாசார அடையாளத்துடன் வாழ்ந்துள்ளனர். அங்கு, பெண்களுக்கு பெரும் சமூக பொறுப்பு 

சீனா, ஐரோப்பிய நாடுகள், மேற்காசிய நாடுகள், ஜிப்ரால்டர், ஸ்பெயின், ஆப்ரிக்கா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுடன் வர்த்தகம் செய்துள்ளனர். பொருட்கள் ஏற்றுமதி, இறக்குமதியாகி உள்ளன. இதற்கான சான்றுகள், எல்லா இடங்களிலும் கிடைக்கின்றன. குறிப்பாக, தென் சீன பகுதியான, ஹெப்பூரில் நடத்திய அகழாய்வில், பட்டணத்தில் கிடைத்தது போன்ற பொருட்கள் அதிகம் கிடைத்துள்ளன. எகிப்தின் பிரமிடு உள்ள இடத்தில் நடத்தப்பட்ட அகழாய்வில், 7 டன் எடையுள்ள, தமிழகத்தின் குறுமிளகு, மண் பாத்திரம் ஒன்றில் கிடைத்தது. அதேபோல, தேக்கு, தேங்காய் சிரட்டை, பருத்தி பொருட்கள் உள்ளிட்டவையும் கிடைத்தன. பட்டணத்தில், மிகவும் நாகரிகமடைந்த மக்கள் வாழ்ந்ததற்கு அடையாளமாக, கழிப்பறைகள் கட்டப்பட்டு, மூன்று குடுவைகள் போன்ற பகுதிகளுக்குப்பின், பூமியின் மேற்பரப்பிற்கு கெடுதல் ஏற்படாத வகையில் கழிவுகளை வெளியேற்றி உள்ளனர். 'அமலன்' என, பிராமி எழுத்தில், குறிக்கப்பட்ட பானை ஓடு கிடைத்தது. அது, சமணர் அல்லது புத்த மதத்தை சார்ந்தவரின் பெயராக இருக்கலாம் என, கருதப் படுகிறது.

ஒருங்கிணைந்த ஆய்வுகள்
தென் மாநில முதல்வர்கள் இணைந்து, தொல்லியல் ஆய்வுகளை நடத்த வேண்டும். ஒருங்கிணைந்த முடிவுகளை, திறந்த மனதுடன் பதிவு செய்ய வேண்டும். அது, தென் மாநிலங்களின் தனி அடையாளத்தைக் காட்டுவதாக இருக்கும். மேலும், உலகின் பல்வேறு பகுதிகளில் கிடைக்கும், சங்க கால சான்றுகளுடன் ஒப்பீட்டாய்வுக்கும் முயற்சிக்க வேண்டும். ஒப்பீட்டு அகழாய்வு செய்ய தென் சீனாவின் குவான்ஷான், ஹெப்பூ, தெற்கு மலாய் தீபகர்ப்பத்தின் காவோ சாம் காகோ, ஓமனின், கோர் ரோரி, இலங்கையின் மந்தை, அனுராதாபுரம், இந்தியாவின் தம்பரலிப்டி, அரிக்கமேடு, காவேரிப்பட்டிணம், பரிகாஜா உள்ளிட்ட, 60க்கும் மேற்பட்ட இடங்களின் அகழாய்வு முடிவுகளை, ஒப்பீட்டாய்வு செய்ய வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்காக பும்ராவுக்கு ஓய்வளிக்கப்படுகிறதா? கிரண் பொல்லார்டு பதில்!

இங்கு வருவேன் என நினைக்கவில்லை... பாஜகவில் இணைந்த நடிகர்!

'வீர தீர..’ துஷாரா!

மரணமடைந்த ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் சொல்லியிருப்பது..: கே.வி. தங்கபாலு விளக்கம்

ரோஜா பூ..!

SCROLL FOR NEXT