என்ன அமைச்சரே, ஒருத்தன் ஜல்லி கரண்டியோடு போருக்கு வர்றான்?
'ஆள் போதவில்லை என்று சமையல்காரனைக் கூட்டி வந்து விட்டோம், மன்னா!'
-அ.ரியாஸ், சேலம்.
'அந்தப் பேய்ப் படத்தில் ஹவுஸ் புல் போர்டு தொங்குது... ஆனால், உள்ளே யாரையும் காணோமே?'
' உஷ்! இது பேய்களுக்கான ஸ்பெஷல் ஷோவாம்!'
-மஞ்சுதேவன், பெங்களூரு.
'டேய், வாயை ஊதுடா... குடிச்சிருக்கேதானே?'
'இல்லை சார்... உப்புமா தான் சாப்பிட்டுட்டு வந்தேன்!'
'சரி சரி... போ போ... இதை விட பெரிய தண்டனை உனக்குக் கிடையாது!'
-நடேஷ் கன்னா, கல்லிடைக் குறிச்சி.
'கிளீனிக் கேன்டீன்ல வாங்குன பஜ்ஜின்னு எப்படிக் கண்டுபிடிச்சே?'
'அதான் பார்சல் மேல பிளாஸ்திரி ஒட்டியிருக்கே!'
- பர்வதவர்த்தினி, பம்மல்.
'ஆபரேஷனுக்கு வரும் பேஷண்ட் கூட இருக்கும் அட்டெண்டருக்கும் எதுக்கு மயக்க மருந்து கொடுக்கணும், டாக்டர்?'
'அவரு ரொம்ப கேள்வி கேட்குறாரு!'
-தஞ்சை. பா.சக்திவேல்
'என்ன நீ... உன் கணவரைப் பார்த்து 'நீங்க பண்றது உங்களுக்கே நல்லா இருக்கா?'ன்னு கேட்கிறே?'
'நான் கேட்டது அவரோட சமையலை!'
'அந்த ரியல் எஸ்டேட் அதிபர் சரியான குடிகாரர்னு எப்படிச் சொல்றீங்க?'
'புதுசா வீட்டு மனை விற்கும் போது, 'டாஸ்மாக் கடை அருகில்'னு விளம்பரம் பண்றாரே!'
-தீபிகா சாரதி, சென்னை.
'கணவருக்கு தூக்கத்துல நடக்குற வியாதி இருக்குறதுக்கு ஏன் பயப்படுறீங்க?'
'வீட்டுக்குப் பக்கத்துல பெருசா ஆழ்துளைக் கிணறு தோண்டி வச்சிருக்காங்க, டாக்டர்!'
'பொண்ணு ஓவரா பேசும்னு சொல்லியும் வரன் எப்படிச் சம்மதிச்சார்?'
'அவர், பட்டிமன்ற நடுவராம்!'
'புத்தகக் கண்காட்சி எப்படி இருந்ததுன்னு கேட்டா, சுவையா இருந்துச்சின்னு சொல்றியே?'
'நான் வாங்கினது டெல்லி அப்பளம் தானே!'
'பரீட்சையில முட்டை வாங்கிட்டு வந்து நிக்கறீயே, தாங்க முடியல...'
'கடையில வாங்கிட்டு வருவேனே... அப்படி நெனச்சிக்குங்க, அம்மா!'
-முபீன், சென்னை.
'பொண்ணு பார்க்கப் போயிருந்தீயே, என்னாச்சுடா மாப்ள?'
'வேற ஒரு பையனும் பாத்துட்டுப் போயிருக்கானாம். அவன் வேண்டாம்னா பார்க்கலாம்னு சொல்லி இருக்காங்க!'
'புலவருக்குப் பின்னால் இரண்டு பேர் வருகிறார்களே, அவர்கள் யார்?'
'பின்பாட்டு பாடுபவர்களாம், மன்னா!'
'இந்த டாக்டர் மாஸ்கை கழட்டுறதே இல்லையே, ஏன்?'
'டாக்டர் மூஞ்சியைக் காட்டுறார்னு இனிமேல் யாரும் சொல்ல முடியாது பாருங்க!'
'பஜ்ஜி என்னப்பா தொண்டையில குத்துது?'
'இது ஊசி மிளகாய் பஜ்ஜி, சார்!'
'பதுங்குக் குழியில் இருந்த மன்னரை எதிரி எப்படிச் சிறை பிடித்தான்?'
'எதிரி வருகிறானா என்று வெளியே வந்து எட்டிப் பார்த்த போது, லாகவமாகப் பிடித்து விட்டானாம்!'
'போர் வரப்போகிறது என்று எப்படிச் சொல்கிறாய்?'
'ஒரு மாதத்துக்குத் தேவையான உணவுப் பொருள்கள் பதுங்குக் குழிக்குச் செல்கிறதே...!'
-வி.ரேவதி, தஞ்சை.'
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.