திருநள்ளாறு கோயிலில் ஒரே நாளில் ஒரு லட்சம் பக்தர்கள் தரிசனம்
காரைக்கால், டிச. 17 : திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலில் சனிக்கிழமை சுமார் ஒரு லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். மேலும் டிச.21ஆம் தேதி நடக்கவுள்ள சனிப்பெயர்ச்சி விழாவுக்கான பல்வேறு நடைமுறைகள்
காரைக்கால், டிச. 17 : திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலில் சனிக்கிழமை சுமார் ஒரு லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். மேலும் டிச.21ஆம் தேதி நடக்கவுள்ள சனிப்பெயர்ச்சி விழாவுக்கான பல்வேறு நடைமுறைகள் தற்போதே அமலுக்கு வந்தன.
இரண்டரை ஆண்டுகளுக்கொரு முறை நடைபெறும் சனிப்பெயர்ச்சி வரும் டிச.21ஆம் தேதி திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலில் விமரிசையாக நடைபெறவுள்ளது. காலை 7.51 மணிக்கு சனிப்பெயர்ச்சியை குறிப்பிடும் வகையில் இங்குள்ள ஸ்ரீ சனீஸ்வரபகவானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடத்தப்படுகிறது. இந்த விழாவில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல லட்சம் பக்தர்கள் கலந்துகொள்கின்றனர்.
இவ்விழா நடைபெற இன்னும் 4 நாள்களே உள்ள நிலையில், திருநள்ளாறு கோயிலுக்கு முன்னதாகவே தரிசனத்துக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளன. அதுவும் சனிக்கிழமை என்பதால் அதிகாலை 4 மணி முதல் பக்தர்கள் நளன் குளத்தில் நீராடிவிட்டு நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர். ஏறக்குறைய ஒரு லட்சம் பக்தர்கள் அதிகாலை முதல் பகல் முழுவதும் தரிசனம் செய்ததாக கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
சனிப்பெயர்ச்சி விழா நடைமுறைகள் அமல் : சனிப்பெயர்ச்சி விழாவில் பக்தர்களை தரிசனத்துக்கு அனுப்புவது, பாதுகாப்பு, கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இவை சனிக்கிழமை முதல் அமலுக்கு வந்தன. சனீஸ்வரனை தரிசிக்க கோயில் சுற்றுவட்டாரத்தின் நான்கு வீதிகள், சன்னதி, நளன் குளப் பகுதிகளில் இருந்து வரிசை தடுப்பு அமைக்கப்பட்டுள்ளன. இவைகளில் பக்தர்கள் நிரம்பியிருந்தனர்.
தரிசனத்துக்கு ரூ.300 மற்றும் ரூ.100, தர்ம தரிசனம், வி.ஐ.பி. வரிசை என வகைப்படுத்தப்பட்டுள்ளது. கட்டணத்துக்கான டிக்கெட், வி.ஐ.பி.க்கான அனுமதி சீட்டுகள் மின்னணு பதிவு முறையில் முதல் முறையாக தயாரிக்கப்பட்டுள்ளது. இவைகளை பயன்படுத்தி சனிக்கிழமை முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு சென்றனர். மீண்டும் இந்த கட்டண சீட்டை பயன்படுத்த முடியாதபடி மின்னணு எண்ணை சென்சார் செய்து கணினியில் பதிவு செய்துகொள்ளும் கருவி பயன்படுத்தப்பட்டது.
நளன் குளத்தில் இறங்கி குளிப்போர் மையப் பகுதிக்கு சென்றுவிடாதபடி நான்கு புறமும் கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது. குளத்தின் மையப் பகுதியில் மோட்டார் பொருத்தப்பட்ட ரப்பர் படகில் காரைக்கால் கடலோரக் காவல்நிலைய போலீஸார், ஆபத்தில் சிக்கியோரை காப்பாற்றும் நோக்கில் ரோந்துப் பணியை தொடங்கியுள்ளனர்.
கோயில் நிர்வாக அலுவலர் எஸ்.கே.பன்னீர்செல்வம் கூறியது : சனிப்பெயர்ச்சியையொட்டி திருநள்ளாறு சுற்றுவட்டாரத்தில் 14 இடங்களில் வாகன நிறுத்த இடம் தேர்வு செய்து உரிய வசதிகள் செய்யப்பட்டுள்ளது. கோயில் உள்புறம் மற்றும் வெளிப்புறத்தில் 32 இடத்திலும், குளம் பகுதியில் 12 இடத்திலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதை கோயில் மற்றும் காவல்நிலையத்தில் கணினியின் மூலம் பார்த்து உரிய நடவடிக்கைகளை துரிதமாக எடுக்கப்படுகிறது. நளன் குளத்தின் இரு புறத்தில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஆயுதம் ஏந்திய போலீஸார் பணியில் இருப்பர். பக்தர்கள் கூடும் இடங்களில் குடிநீர், கழிப்பறை வசதி நிறைவாக செய்யப்பட்டுள்ளது என்றார்.