திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி: பக்தர்கள் பெரும் அவதி
பாதுகாப்புக்கு இருக்க வேண்டிய போலீஸாரோ, சுவாமி தரிசனம் செய்வதிலும், செல்போனில் படம் எடுப்பதிலும் ஆர்வம் காட்டியதால், பக்தர்கள் வரிசையில் தரிசனம் செய்யமுடியாமல் சுமார் 1 மணி நேரம் பாதிப்பு ஏற்பட்டது...
காரைக்கால், டிச. 21 : திருநள்ளாற்றில் இன்று நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழாவில் துணை நிலை ஆளுநர் வருகை, போலீஸாரின் தள்ளுமுள்ளு, போதுமான கழிப்பறை இல்லாததால் கழிப்பறைக்கு வரிசையில் நின்ற அவலம், குடிநீர் வசதியில் குறைபாடு உள்ளிட்டவை இவற்றால், பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
திருநள்ளாறில் சனி்ப்பெயர்ச்சி விழா என்றால் பல லட்சம் பக்தர்கள் தரிசனத்துக்கு வருவார்கள் என்றே கருதி அரசு நிர்வாகம் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்கிறது. சனிப்பெயர்ச்சி விழா என்றால் திருநள்ளாறுக்கு புதுச்சேரியின் துணை நிலை ஆளுநர் வந்து குறித்த நேரத்தில் தரிசிப்பது மரபாகவே இருந்துவருகிறது.
பொதுவாக வி.ஐ.பி.க்கள் சனிப்பெயர்ச்சி விழா நேரத்தில் வரும்போது, பக்தர்களுக்கு பாதுகாப்பு தருவதில் குளறுபடி ஏற்பட்டு, போலீஸாரின் கவனம் முழுமையும் வி.ஐ.பி.க்கள் பக்கமே இருப்பதால், பக்தர்கள் பாதிப்புக்குள்ளாகிறார்கள். இதை உணர்ந்த புதுச்சேரி வேளாண் அமைச்சர் மு.சந்திரகாசு, அண்மையில் செய்தியாளர்களை சந்தித்தபோது, வி.ஐ.பி.க்கள் எப்போது வேண்டுமானாலும் தரிசனம் செய்ய வரலாம், சனிப்பெயர்ச்சி நேரத்தில் வந்து பக்தர்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் இருப்பதை தவிர்க்கலாமென அன்புடன் வேண்டிக்கொண்டார். ஆனால் இதை யாரும் பொருட்படுத்தவில்லை என்பதை இன்று நடந்த நிகழ்ச்சி காட்டியது.
சரியாக காலை 7.51க்கு சனிப்பெயர்ச்சி எனும்போது, 7.30க்கே கோயிலுக்குள் வந்தார் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் இக்பால்சிங். இதற்காக 7.05 மணி முதல் 8.10 மணி வரை பக்தர்கள் தரிசனம் தடைபடுத்தப்பட்டது. கோயிலுக்கு வந்த ஆளுநருக்கு பாதுகாப்பு அளிக்கவே கோயிலுக்குள்ளேயும், வெளியேயும் பாதுபாப்புப் பணியில் ஈடுபட்டவர்கள் திரளாக ஆளுநரை சூழ்ந்துகொண்டனர். அப்போது அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் யாரையும் கண்டுகொள்ளாமல் தள்ளமுள்ளு ஏற்படும் வகையில் போலீஸார் நடவடிக்கை இருந்தது. மேலும் பாதுகாப்புக்கு இருக்க வேண்டிய போலீஸாரோ, சுவாமி தரிசனம் செய்வதிலும், செல்போனில் படம் எடுப்பதிலும் ஆர்வம் காட்டியதால், பக்தர்கள் வரிசையில் தரிசனம் செய்யமுடியாமல் சுமார் 1 மணி நேரம் பாதிப்பு ஏற்பட்டது. போலீஸாரின் படமெடுக்கும் செயல்பாட்டால், உலகம் முழுவதும் பல்வேறு தொலைக்காட்சி மூலம் நேரடி ஒலிபரப்பை காணும் மக்களுக்கு செய்தி சேனல்களின் சேவையில் குளறுபடி ஏற்பட்டது.
பக்தர்களுக்கு சுமார் 100 கழிப்பறைகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்க்பட்டன. ஆனால் அவ்வாறு அமைக்கப்படவில்லையென்பதே பின்னர் தெரியவந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த கழிப்பறைகளை பயன்படுத்த பக்தர்கள் வரிசையில் நின்ற அவலம் ஏற்பட்டது. இதேபோன்று பக்தர்களுக்கு பல்வேறு இடங்களில் இலவசமாக உணவுப் பொட்டலம் தரப்படும்போது, குடிநீர் குழாய் இருக்கும் இடம் தெரியாமல் பக்தர்கள் அலைய நேரிட்டது.